200 ஆண்டு பழமையான ஆலமரத்தை மீண்டும் நட்டு உயிர்ப்பித்த கிராம மக்கள்!

வியாழன் ஓகஸ்ட் 08, 2019

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கஜா புயல் கோர தாண்டவமாடியது. இதனால் மரங்கள், தென்னை மரங்கள் லட்சக்கணக்கில் விழுந்து சேதமானது. பல இடங்களில் இன்று வரை சாய்ந்து கிடக்கும் மரங்கள் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது.

இந்த நிலையில் கஜா புயலில் சாய்ந்த 200 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரத்தை கிராம மக்களே ஒன்றுசேர்ந்து மீண்டும் நட்டு உயிர்கொடுத்துள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூர் உச்சக்கட்டளை பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் கஜா புயலின்போது வேரோடு சாய்ந்தது. திரவுபதி அம்மன் கோவிலில் இருந்த அந்த ஆலமரம் கிராமத்தின் அடையாளமாகவே இருந்தது.

புயலில் விழுந்த ஆலமரத்தை எப்படியும் உயிர்ப்பித்து மீண்டும் நட கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கிராம மக்கள் ஒன்றுக்கூடி தங்களது சொந்த செலவில் மரத்தை நட முயற்சியில் இறங்கினர்.

இதையடுத்து 2 கிரேன்கள், ஒரு பொக்லைன் மூலம் ஆலமரத்தை நடும் பணிகளில் ஈடுபட்டனர். சுமார் 12 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, ஆலமரம் தூக்கி நிமிர்த்தப்பட்டு, மண்ணில் மீண்டும் நட்டு வைக்கப்பட்டது.

இதை பார்த்து கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர். இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

திரவுபதி அம்மன் கோவிலில் இருந்த ஆலமரம் மிகவும் பழமையானது. கஜா புயலில் ஆலமரம் விழுந்த கிடந்ததை பார்த்து எங்களுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

இதனால் இந்த மரத்தை எப்படியாவது மீண்டும் நட வேண்டும் என்று கூடி பேசி முடிவு செய்தோம். இதற்காக எந்திரங்களை வரவழைத்து சுமார் ரூ.50 ஆயிரம் செலவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.