300 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய கப்பல் புதையல் கண்டுபிடிப்பு

திங்கள் டிசம்பர் 07, 2015

பெருமளவான புதையலுடன் 300 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷாரால் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் ஒன்று கொலம்பிய நாட்டு கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
“சென் ஜோஸ் கலியோன் கப்பலை கண்டுபிடித்தோம் என்ற சிறப்பான செய்தியை கூறிக்கொள்கிறோம்” என்று கொலம்பிய ஜனாதிபதி ஜுவான் மானுவல் சான்டோஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

துறைமுக நகரான கார்டஜெனாவுக்கு அருகிலேயே இந்த கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதிக பெறுமதியான செல்வத்துடன் கடலில் காணாமல் போன கப்பல்களில் ஒன்றாக இந்த கப்பல் வரலாற்றில் இடம்பிடித்திருந்தது. இந்த சரக்குக் கப்பல் குறைந்தது ஒரு பில்லியன் டொலர் பெறுமதி கொண்டது என்று சான்டோஸ் குறிப்பிட்டுள்ளார். 

சான் ஜோஸ் என்று அழைக்கப்படும் இந்த கப்பலில் தங்கம், வெள்ளி, வைரங்கள் மற்றும் ஆபரணங்கள் நிரப்பப்பட்டிருந்தது. பிரிட்டிஷுக்கு எதிரான அடுத்தடுத்த யுத்தங்களுக்கு நிதி உதவியாக தென் அமெரிக்க காலனிகளில் இருந்தே இந்த பொக்கிஷசங்கள் சேகரிப்பட்டிருந்தன. 

எனினும் இந்த கப்பல் 1708 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கடலில் மூழ்கடிக்கப்பட்டது. இந்த கப்பல் கார்டஜெனாவுக்கு அருகில் பிரிட்டிஷ் போர் கப்பல் ஒன்றின் தாக்குதலுக்கு இலக்காகியே மூழ்கியது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் புதையல் கொண்ட இந்த கப்பல் இருக்கும் இடத்தை கொலம்பிய அதிகாரிகள் குறிப்பிட்டு சுட்டிக்காட்டவில்லை.

எனினும் இது சிறப்பான கண்டுபிடிப்பாகும் என்று விபரித்த கொலம்பிய ஜனாதிபதி, இந்த கண்டுபிடிப்பு மனித வரலாற்றில் நீரில் இருந்து மீட்கப்பட்ட மிகப்பெரிய செல்வமாகவும் இருக்கும் என்றார். இந்த கப்பலின் பொக்கிஷங்களுக்காக கார்டஜெனா நகரில் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

எனினும் இந்த கப்பலின் உரிமை தொடர்பில் நீண்ட கால சட்ட சிக்கல் ஒன்று நீடித்து வருகிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் எஸ்.எஸ்.ஏ. என்ற கடலில் காணமல் போன கப்பல்களை தேடும் நிறுவனம் ஒன்று உரிமை கோரி வருகிறது. எனினும் இது பற்றி கொலம்பிய அரசு எதுவும் குறிப்பிடவில்லை. 

எஸ்.எஸ்.ஏ. என்ற அந்த நிறுவனத்தின் தற்போதைய உரிமைக் குழு குறிப்பிடும்போது, 1981 ஆம் ஆண்டு தமது நிறுவனமே குறித்த கப்பல் இருக்கும் இடத்தை கண்டறிந்ததாக குறிப்பிட்டுள்ளது. தமது பல பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை கொலம்பிய அரசு மீறி இருப்பதாக எஸ்.எஸ்.ஏ. என்ற அந்த நிறுவனம் குற்றம் சாட்டிய போதும், 2011 ஆம் ஆண்டு அமெரிக்க நீதிமன்றம் ஒன்று அளித்த தீர்ப்பில் குறித்த கப்பல் கொலம்பிய அரசுக்கே சொந்தம் என்று குறிப்பிட்டிருந்தது.