5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட் உருவாக்கும் அப்பிள்!

ஞாயிறு ஜூலை 07, 2019

அப்பிள் நிறுவனம் 5ஜி வசதி கொண்ட மடிக்கக்கூடிய ஐபேட் சாதனத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்பிள் நிறுவனம் 5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாதனம் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

லண்டனை சேர்ந்த ஆய்வாளரான ஜெஃப் லின் இத்தகவலை வழங்கியிருக்கிறார். இவர் சர்வதேச அளவில் தகவல் வழங்கும் ஐ.ஹெச்.எஸ். மார்கிட் நிறுவனத்தில் ஆய்வாளராக இருக்கிறார். புதிய சாதனத்தில் மேக்புக் அளவிலான ஸ்கிரீன்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

தற்போதைய ஐபேட் ப்ரோ ஏற்கனவே 12.9 இன்ச் அளவில் கிடைக்கிறது. இதனால் 13 அல்லது 15 இன்ச் அளவில் விரியும் தன்மையுடன் கூடிய ஸ்கிரீன் கொண்ட ஐபேட் மினி சாத்தியமான ஒன்றாகவே இருக்கிறது. இத்துடன் புதிய ஐபேட் மாடலில் 5ஜி வசதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

மடிக்கக்கூடிய ஐபேட் ரென்டர்

 

தற்சமயம் எந்த ஆப்பிள் சாதனத்திலும் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படவில்லை. ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மொத்தம் மூன்று ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் தவிர பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே 5ஜி மீதான சோதனையை துவங்கிவிட்டன.

முன்னதாக வெளியான தகவல்களில் அப்பிள் நிறுவனத்தின் 5ஜி சிப் 2025 ஆம் ஆண்டு அறிமுகமாகலாம் என கூறப்பட்டது.