6,000 குழந்தைகள் தினசரி பலியாக வாய்ப்பு: யூனிசெஃப் எச்சரிக்கை

வெள்ளி மே 15, 2020

உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் மருத்துவ சிகிச்சை அமைப்புகளை கொரோனா வைரஸ் பலவீனப்படுத்தி வருவதாலும் வழக்கமான மருத்துவச் சேவைகள் பாதிக்கப்படுவதாலும் அடுத்த 6 மாதங்களில் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் நாளொன்றுக்கு 6000 பேர் வரையிலும் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக யூனிசெஃப் தெரிவித்துள்ளது.

அதாவது தடுக்கக் கூடிய நோய்களைக் கூட தடுக்க முடியாமல் இந்த மரணங்கள் நிகழும் என்று இந்த ஆய்வு கணித்துள்ளது. இவற்றைத் தடுக்க அரசாங்கங்கள் அவசர கதியில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று யூனிசெஃப் வலியுறுத்தியுள்ளது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் புளூம்பர்க் பொதுச் சுகாதார மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்தக் கணிப்பையும் எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளனர்.

118 நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் நாடுகளில் 3 மோசமான சூழ்நிலைகளை அடையாளப்படுத்திய இந்த ஆய்வு அடுத்த 6 மாத காலகட்டத்தில் கோவிட் மரணங்கள் அல்லாது 5 வயதுக்குட்பட்ட 12 இலட்சம் குழந்தைகள் மரணமடைய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது. வழக்கமான மருத்துவச் சேவைகள் கொரோனாவினால் பாதிப்படைந்துள்ளதால் இந்த மரணங்கள் ஏற்படலாம் என்கிறது இந்த ஆய்வு.

இந்த 118 நாடுகளில் ஏற்கெனவே 25 லட்சம் குழந்தைகள் 5 வயதை எட்டும் முன்னரே பலியாகியுள்ள நிலையில் இந்த கூடுதல் மரணங்கள் ஏற்படலாம் என்று கணிக்கிறது.

வரும் 6 மாதங்களில் 56,700 தாய்மார்களும் குழந்தைப் பிறப்பு தொடர்பான சிக்கல்களினால் மரணமடையலாம் என்று கூறப்படுகிறது.

'கொரோனா வைரசுக்கு எதிரான போரில் கவனம் செலுத்தும் அதேவேளையில் தாய்மார்களையும் குழந்தைகளையும் பறிகொடுக்கும் நிலையை நாம் புறக்கணிக்கலாகாது' என்று யூனிசெஃப் செயல் இயக்குநர் ஹென்ரீட்டா போர் என்பவர் எச்சரிக்கிறார்.

ஏற்கெனவே ஆரோக்கிய, சுகாதார, மருத்துவ அமைப்புகள் பலவீனமடைந்துள்ள இந்த 118 நாடுகளில் கோவிட்-19 மருத்துவ சப்ளை சங்கிலிகளை ஆட்டிப்பார்த்துள்ளது, நிதி மற்றும் மனித வள ஆதாரங்களையும் இடையூறு செய்துள்ளது.

ஊரடங்குகளினால் மருத்துவமனைக்கும், சுகாதார நிலையங்களுக்கும் செல்லும் நடவடிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இந்த இடையூறுகளினால் தாய்மார்களும் குழந்தைகளும் அதிக அளவில் மரணமடைவதை நாம் தடுத்தாக வேண்டும் என்கிறது யூனிசெஃப்.

நியோநேட்டல் செப்சிஸ் மற்றும் நிமோனியாவுக்கான சிகிச்சைகள் குறைந்து வருகின்றன.

இந்த நிலவரங்களினால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில், பங்களாதேஷ், பிரேசில், காங்கோ, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, நைஜீரியா, பாகிஸ்தான், உகாண்டா, தான்சானியா ஆகிய நாடுகளில் அடுத்த 6 மாதங்களில் குழந்தைகள் மரணங்கள் ஏற்படலாம் என்று இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மிகவும் மோசமாகப் பாதிக்கப்படும் ஒரு 10 நாடுகளில், ஜிபவுட்டி, ஈஸ்வாட்டினி, லெசோதோ, லைபீரியா, மாலி, மலாவி, நைஜீரியா, பாகிஸ்தான், சியாராலியோன், சோமாலியா ஆகிய நாடுகளில் அதிகபட்ச குழந்தைகள் மரண விகிதம் இருக்கலாம்.

உலகின் 40% மக்கள் தொகையினரால் வீட்டில் சோப் மூலம் கையைக் கழுவ முடியாத நிலை உள்ளது.

பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் 143 நாடுகளில் 37 கோடி குழந்தைகள் பள்ளிகளில் வழங்கப்படும் உணவு இல்லாமல் இருக்கின்றனர், இவர்கள் உணவுக்காக பிற ஆதாரங்களை நாட வேண்டியுள்ளது.

ஏப்ரல் 14ம் தேதி வரை, 37 நாடுகளின் 11.70 கோடி குழந்தைகள் அம்மை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமல் இருக்கின்றனர்.

இந்த நிலைமைகளைத் தடுக்க, கட்டுக்குள் வைத்திருக்க 6 முக்கிய அம்சங்கள் அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளன:

1. குழந்தைகளை ஊட்டமுடன் வளர்த்து ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.

2. வசதியற்ற ஏழைக் குழந்தைகளுக்கு தண்ணீர், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை உருவாக்க வேண்டும்.

3. குழந்தைகளின் கல்வியைத் தடுக்காமல் தொடர்ந்து கல்வி பயில ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

4. குடும்பங்களின் தேவையைப் பூர்த்தி செய்வதன் மூலம் அவர்கள் தங்கள் குழந்தைகளின் நலன்களைக் கவனிக்க வழிவகை செய்தல்

5. வன்முறை, பாலியல், மற்றும் சுரண்டலிலிருந்து குழந்தைகளைக் காக்க வேண்டும்.

6. உள்நாட்டுப்போர் உள்ளிட்ட சிக்கல்களில் பாதிக்கப்படும் அகதிகள், புலம்பெயர் குழந்தைகளைக் காத்தல்.

இந்த 6 அம்சங்களை யூனிசெஃப் வலியுறுத்துகிறது.