ஐ.நாவின் குற்றச்சாட்டும் உலகின் நடைமுறையும்!

புதன் ஓகஸ்ட் 07, 2019

இலங்கைத் தீவினுள் மீண்டும் ஒரு முறை ஐ.நா. வலம் வந்திருக்கின்றது. தமிழ் மக்கள் மீதான ஆயுத ரீதியிலான இன அழிப்புப்போர் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்ததன் பின்னர், பல்வேறு தடவைகள் ஐ.நா. பொதுச் செயலர் உட்பட ஐ.நா.வின் பல்வேறு உப பிரிவுகளின் அதிகரிக்களும் வலம் வந்திருக்கின்றார்கள்.

இப்போது மீண்டும் ஒரு முறை ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் குழு ஒன்று கடந்த வாரம் இலங்கைத்தீவை ஆராய்ந்துவிட்டுத் திரும்பியிருக்கின்றது. சுமார் ஒன்பது நாட்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் உட்பட தென்னிலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் மேற்
கொண்டு ஆராய்ந்து விட்டுத் திரும்பியுள்ளனர்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சிறீலங்காவிற்கு மூன்றாவது தடவையாக மேலும் இரண்டு ஆண்டுகள் காலநீடிப்பு வழங்கப்பட்டதன் பின்னர் அமைந்த இந்தப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ட் நைலட்சோஸி வூலே (Clément Nyaletsossi Voulé) தலைமையில் இந்தக் குழுவினரே இலங்கைக்கு பயணம் செய்திருந்தனர்.

111

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளராக கடந்த 2018 மார்ச் நியமிக்கப்பட்ட இவரது பணி நாடுகளில் மக்களின் அமைதியான ஒன்றுகூடல்களுக்கு சுதந்திரத்திற்கான உரிமைகள் வழங்கப்படுகின்றனவா என்பதை ஆராய்வதாக இருக்கின்றது.

கடந்த வாரம் தமிழர் தாயகம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்ற கிளெமென்ட்நைலட்சோஸி வூலே தலைமையிலான குழுவினர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசியதுடன் நிலைமைகளை நேரில் பார்வையிட்டுத் திரும்பியுள்ளனர்.

குறிப்பாக இக் குழுவினர் முல்லைத்தீவு கேப்பாப்புலவுக்கு சென்று, காணி விடுவிப்பைக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

ஏறக்குறைய ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கேப்பாப்புலவு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினை தொடர்பாக இவர்கள் விபரமாகக் கேட்டறிந்தும் கொண்டனர்.

இதன் பின்னர் கொழும்பு திரும்பிய இவர்கள், சிறீலங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிகட்டப் போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை நடத்தி வரும் சிறீலங்கா நீதிபதிகளை சந்திக்க எடுத்த முயற்சியை சிறீலங்கா அரசு தடுத்து நிறுத்தியுள்ளது.

ஐ.நா. தூதர் நீதிபதிகளைச் சந்திப்பதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஊடாகத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இறுதிப்போரில் ஏற்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து (குற்றவாளிகளான) தாங்களே விசாரணை நடத்துவோம் எனத் தெரிவித்து வரும் சிறீலங்கா, நீதித் துறை நடவடிக்கைகளில் அந்நியத் தலையீடு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியே இந்தச் சந்திப்பிற்கு நாடாளுமன்றம் ஊடாகத் தடைவிதித்தது.   

எனினும், இலங்கையில் தமது ஆய்வுகளை முடித்துக்கொண்டு வெளியேறுவதற்கு முன்பாக கொழும்பில் உள்ள ஐ.நா செயலகத்தில் நடந்த ஊடக சந்திப்பில் அவர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சிறீலங்காவிற்கு அதிர்ச்சியளிப்பதாகவே அமைந்துள்ளன.

அவசரகாலச் சட்டத்தின் நீடிப்பானது அமைதியான ஒன்றுகூடலுக்கு தடையாக அமைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிறீலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக பெரும்பான்மைச் சமூகத்தினரால் மேற்கொள்ளப்படும் பகைமையைத் தூண்டும் உரைகளுக்கு தண்டனைகள் வழங்கப்படுவதில்லை என்பது அவரது முக்கிய குற்றச்சாட்டுக்களில் ஒன்றாக இருந்தது.

2007ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின் கீழ் பகைமை உணர்ச்சியைத் தூண்டும் உரைகளைத் தடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் இருந்தும் பாரபட்சமற்ற முறையில் அவை அமையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், காணாமல் ஆக்கப்படுதல், காணி உரிமைகள், வாழ்வாதாரம், வளங்களையும் அபிவிருத்தி திட்டங்களையும் அணுகுதல் என்பவை தொடர்பாக பாரபட்சமான முறையில் சட்டங்கள் பிரயோகிக்கப்படுவது குறித்தும் தனது கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டங்களுக்கான காரணங்களையும், ஆர்ப்பாட்டங்களின் போது பங்குபற்றுனர்கள் முன்வைக்கும் பிரச்சினைகளையிட்டும் அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சிவில் சமூகத்தின் சில உறுப்பினர்கள் தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் அமைதியாக ஒன்று கூடுவதிலும் பல நெருக்கடிகளை எதிர் நோக்குகின்றனர் என்று குறிப்பிட்ட அவர், இத்தகையப் பிரச்சினைகளை நாடு எதிர்நோக்கியுள்ள ஒரு தீர்மானகரமான காலகட்டத்திலேயே தனது பயணம் அமைந்துள்ளதாகவும் கூறினார்.

2009ம் ஆண்டு ஓய்ந்த நீண்டகால அழிவுகரமான போரின் பின்னர் பாதுகாப்புத் துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமை, சிவில் சமூகம் இயங்குவதில் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாகவும் ஏனைய சிவில் சமூக நடவடிக்கைகள் பற்றியும் தொடர்ச்சியான புலனாய்வுக் கட்டமைப்புக்களைக் கண்காணிப்பில் ஈடுபடுத்துவதன் காரணமாக மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மீது தொந்தரவையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளதையும் அறிக்கையிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு இலங்கைத் தீவின் பல பகுதிகளுக்கு பயணம் செய்து பல்வேறு விடயங்களை ஆராய்ந்துள்ள இவர், இதுதொடர்பான தனது விசேட அறிக்கையினையும் பரிந்துரைகளையும் 2020ம் ஆண்டு யூன் மாதத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 44வது கூட்டத் தொடரில் சமர்ப்பிப்பார் எனக் கூறப்படுகின்றது.

இவரது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அதன் மீது சர்வதேச நாடுகள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதற்குள் சிறீலங்காவில் ஆட்சியும் மாறி, அடுத்த ஆட்சியும் தமது காலத்தில் அரைவாசியைக் கடந்துவிடும்.

ஆனாலும் சிறீலங்கா மீது குற்றம்சாட்ட மனித உரிமை அமைப்புக்கள் தயாராகவே இருக்கின்றன என்பது ஆறுதலான விடயமாக இருந்தாலும், அந்தக் குற்றச்சாட்டுக்களுக்காக தடைகளைப்
போட்டு தண்டிப்பதற்கு எந்தவொரு நாடும் தயாராக இல்லை என்பதுதான் இன்றைய நிலை.

ஈரான், சிரியா, வட கொரியா போன்ற சில நாடுகள் ஒரு தவறு செய்தாலே கடுமையான தடைகளை விதித்து அந்நாடுகளை வழிக்குக் கொண்டுவர முயலும் நாடுகள் கூட, மனித குலத்திற்கு இத்தனை அநீதிகளை இழைத்து, இன்னமும் தன் கொடூரக் கரங்களை நீட்டிக்கொண்டிருக்கும் சிறீலங்காவிற்கு சிறிய வலிகூட ஏற்பட்டுவிடாமல் பாதுகாக்கின்றன என்பதும் பாராட்டுக்களும் பட்டயங்களும் கொடுத்துக் கெளரவிக்கின்றன என்பதும் இந்த உலகின் விசித்திரம் தான்.

ஆசிரிய தலையங்கம்
நன்றி: ஈழமுரசு