ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்காவுக்கு நிதியுதவி!

வியாழன் அக்டோபர் 10, 2019

இலங்கையில் நிலைமாற்றம், ஒருமைப்பாடு மற்றும் மக்களாட்சி தொடர்பான திட்டத்தை முன்னெடுப்பதற்கு 7,932 மில்லியன் ரூபாய் (40 மில்லியன் யூரோ) நிதியுதவியை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளது.

குறித்த ஒப்பந்தம் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் தூதுவர் துங்-லாய் மார்க்கின் பிரதிநிதிக்கும் நிதி அமைச்சின் செயலாளர் R. H. S. சமரதுங்க ஆகியோருக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் முன்னெடுக்கப்படும் இச்செயற்திட்டமானது, வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் செயல்படுத்தப்படும் எனவும் நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்பபடி போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மாகாணங்களில் அபிவிருத்தி, உள்ளூர் சேவை மற்றும் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு விடயங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என நிதி அமைச்சின் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் மேற்கொள்ளப்படும் இச்செயற்திட்டமானது, உள்ளுராட்சிமன்ற அபிவிருத்தித் திட்டத்துடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்தோடு இவை செயற்திறன் மிக்க ஆட்சிமுறையை உறுதி செய்வதற்கும், முரண்பாடுகள் ஏற்படுவதற்கான காரணங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் உதவியாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.