ஆக்கிரமிப்பு குளம் மீட்பு!

வெள்ளி செப்டம்பர் 06, 2019

கறம்பக்குடி அருகே நெற்பயிர், நிலக்கடலை சாகுபடி செய்திருந்த குளத்தில் பயிர்கள் அழிக்கப்பட்டு 7 ஏக்கர் குளம் மீட்கப்பட்டது. சாகுபடி செய்திருந்த விவசாயிகள் கதறினர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு கிராமத்தில் வெட்டுகுளம் உள்ளது. அப்பகுதியை சேர்ந்த ஒரு சிலர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் இக்குளத்தை தூர்த்து சுமார் 7 ஏக்கர் அளவில் விவசாயம் செய்து வந்தனர்.

இதனை அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்று கூறி அப்பகுதியை சேர்ந்த துரை குணா என்பவர் அரசு ஊழியர் போல் தன்னை சித்தரித்து, வேலைக்கு ஆட்கள் தேவை என்று கூறி கடந்த 10 நாட்களுக்கு முன் கறம்பக்குடி பகுதி முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டினார்.

இது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கறம்பக்குடி போலீசார் துரை குணாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் போஸ்டர் எதிரொலியாக, வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.

அப்போது 7 ஏக்கர் அளவு கொண்ட வயலில் நெற் பயிரும், நிலகடலையும் விவசாயம் செய்திருந்தனர். நெற்பயிர் இன்னும் 10 நாட்களுக்குள் அறுவடை செய்ய கூடிய நிலையில் இருந்ததை பார்த்து அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பினர்.

ஆனால் மேலிட உத்தரவின்படி நேற்று திடீரென காலை 6 மணிக்கு புதுகை ஆர்டிஓ தண்டாயுதபாணி மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் மற்றும் அதிகாரிகள் ஆலங்குடி டிஎஸ்பி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு சென்று வயலில் இருந்த தென்னை மரம் மற்றும் கதிர் வளர்ந்த நெற்பயிர் முழுவதையும் பொக்லைன் மூலம் அகற்றினர்.