அறுக்க முடியாதவளின் இடுப்பில் ஆயிரத்தெட்டு அரிவாள்-பிலாவடி மூலைப் பெருமான்

வியாழன் ஓகஸ்ட் 08, 2019

வணக்கம் பிள்ளையள்.

என்ன கிழவன் ஒரு நமட்டுச் சிரிப்போடு ?வணக்கம்? சொல்லுது என்று ஒரு மார்க்கமாய் நீங்கள் பார்க்கிறது எனக்கு விளங்குது. கட்டையில் வேகிற வயதாக இருந்தாலும் எனக்குக் கண்பார்வையில் எந்தப் பிரச்சினையும் இல்லைப் பாருங்கோ.

பின்னையயன்ன? என்ரை பேரன், பேத்திமார் எல்லோரும் கண்ணாடி போட்டாலும், நான் மட்டும் இந்த வயதிலும் கண்ணாடி போடால் வாசிக்கிறன் என்றால் அதுக்கு என்ரை வாழ்க்கை முறை தான் பாருங்கோ பிள்ளையள். இப்ப எங்கடை பெடி, பெட்டையளை எங்கை பார்த்தாலும், ஆளாளுக்குஉந்த ஐபோனையும், ஐபாட்டையும் தான் நோண்டிக் கொண்டு இருக்குதுகள். அப்ப கண் பழுது பாடாமல் இருக்குமே?

சரி, விசயத்துக்கு வாறன். போன கிழமை எங்கடை கனடாவில் இருக்கிற மார்க்கம் பக்கம் நான் போயிருந்தனான். சும்மாயில்லை கண்டியளே. எல்லாம் ஒரு மார்க்கத்தோடு தான். அங்கையிருக்கிற தமிழ்க் கடையளின்ரை பக்கம் போனதும் நான் ஏங்கிப் போனேன். அங்கை இரண்டு மூன்று நைன்ரியள் எங்கடை விக்கினேசுவரன் ஐயாவைப் பற்றி பெருமிதமாக பேசிக் கொண்டிருந்தவையள். சரி என்ன தான் சங்கதி என்று காதைத் தீட்டிக் கொண்டு நானும் கிட்டப் போய் நின்று கேட்டேன்.

111

தமிழ் மக்களின் கோரிக்கைகளை சர்வதேச சமூகத்திற்கு இடித்துரைக்கிறதுக்கு கெதியிலை எழுக தமிழ் பேரணி ஒன்றை விக்கினேசுவரன் ஐயா நடத்த இருக்கிறாராம். அதுவும் இனியும் காலம் தாழ்த்தாமல் பேரணி நடத்த வேண்டும் என்று மனுசன் அறிக்கை விட்டிருக்கிறாராம்.

உதைக் கேட்டதும் எனக்கு சிரிக்கிறதோ, அழுகிறதோ என்று தெரியவில்லை. பின்னை என்ன பிள்ளையள்? அத்திப் பழத்தைப் பிட்டுப் பார்த்தால் அத்தனையும் புழு என்ற மாதிரித் தான் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறவராக எங்கடை விக்கினேசுவரன் ஐயா இருக்கிறார்.

அப்படிப்பட்டவருக்கு திடீரென்று என்ன ஞானோதயம் ஏற்பட்டிச்சுது என்று எனக்கு முதலில் விளங்கவில்லை. பிறகு தான் கெதியிலை இலங்கையில் எலெக்சன் நடக்கப் போகிது என்பது எனக்கு ஞாபகத்துக்கு வந்திச்சுது.

இப்ப கொஞ்சக் காலத்துக்கு முதல் எங்கடை விக்கினேசுவரன் ஐயா யாழ்ப்பாணத்தில் இருக்கிற இந்தியத் தூதரக அதிகாரியயாருவரை சந்திச்சிருக்கிறார். அவரிட்டை அந்த இந்திய அதிகாரி சொன்னவராம், ‘சேர், நீங்கள் கூட்டமைப்பைப் பகைச்சுக் கொள்ளாமல், அவையளோடு ஒரு ஒருமைப்பாட்டுக்கு வரவேண்டும்’ என்று.

அதுக்கு விக்கினேசுவரன் விறைப்பாய் பதில் சொன்னாராம்: ‘எனக்குப் பின்னால் மக்கள் பலம் இருக்குது. சனத்துக்கு கூட்டமைப்பு மேல் நம்பிக்கை இல்லை. என்றபடியால் என்ரை தமிழ் மக்கள் கூட்டணியை தமிழ் மக்களின்ரை பிரதிநிதிகளாக ஏற்று, எங்களை நீங்கள் ஆதரிக்க வேண்டும்’ என்று.

அடிக்குப் பயந்து குரங்கும் ஆடும் என்று அந்தக் காலத்தில் சொல்கிறவையள். தனக்கு இருக்கிற மக்கள் பலத்தை காட்டி இந்திய அதிகாரியை மடக்கலாம் என்று நினைச்சுத் தான் இப்படி விக்கினேசுவரன் ஐயா விறைப்பாய் சொன்னவராம்.

ஆனால் அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது என்பதைத் தெரிஞ்சு கொள்ளாமல் இருக்கிறதுக்கு இந்திய இராசதந்திரிமார் என்ன முட்டாள்களே? கொஞ்ச நேரம் விக்கினேசுவரன் ஐயாவின்ரை கண்ணை வெட்டாமல் பார்த்துப் போட்டு அந்த அதிகாரி சொன்னவராம், ‘சேர், உங்களால் தனிச்சு நின்று கூட்டமைப்பை விழுத்த முடியாது.

அதுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின்ரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்ரை ஆதரவு தேவை. ஆனால் கஜேந்திரகுமாரோடு நீங்கள் சேர்ந்து கூட்டணி அமைக்கிறதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஒரு உடன்பாட்டுக்கு வர வேண்டும் என்பதைத் தான் நாங்கள் விரும்புகிறோம்’ என்றவராம்.

அதுக்குப் பிறகுதான் கஜேந்திரகுமாரோடு கூட்டணி அமைக்கிறதுக்குக் கொஞ்சக் காலமாக விக்கினேசுரவன் ஐயா ஓடித் திரிஞ்சவர். சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது என்ற கதையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு கூட்டணி அமைக்கிறதிலை மனுசனுக்கு உடன்பாடு இல்லை.

அதுவும் சுமந்திரனைக் கண்டால் ஏதோ பன்றியைக் கண்ட முகமது நபியின் நிலையில் தான் விக்கினேசுவரன் ஐயா இருக்கிறாராம்.

கேட்டால் மனுசன் சொல்கிறாராம், ‘எங்கடை இந்துக் கோவில்களுக்கு வந்துபோன தந்தை செல்வாவோடு நான் கூட்டணி அமைச்சாலும் அமைப்பேனே தவிர, என்ரை குங்குமப் பொட்டையும், திருநீறையும் பார்த்து நக்கல் கதை கதைக்கிற உந்தத் தென்னிந்திய திருச்சபைப் போதகர் சுமந்திரனோடு கூட்டணி அமைக்க மாட்டேன்’ என்று.

111

ஒட்டு மொத்தத்தில் பார்க்கப் போனால் எங்கடை சுமந்திரன் மாத்தையாவுக்கும், விக்கினேசுவரன் ஐயாவுக்கும் இடையில் இருக்கிற பிரச்சினை கொள்கை ரீதியிலானது இல்லை பிள்ளையள். உது ஒரு மதப்பிரச்சினை. இரண்டு பேரும் மதவெறி கொண்டு கீரியும், பாம்பும் போல் நிற்கீனமே தவிர, அவையளுக்கு எங்கடை தமிழ்த் தேசிய இனத்தின்ரை நலன்களைப் பற்றி எள்ளளவுக்கு அக்கறை இல்லைப் பாருங்கோ.

சரி, கதைக்க வந்த விசயத்தை விட்டுப் போட்டு வேறு ஏதோ கதையளைக் கதைக்கிறன்.

விசயம் இது தான் பிள்ளையள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடும் சேர முடியாது. மண்டையன் குழு சுரேஸ் பிரேமச்சந்திரனை இடுப்பிலை கட்டிக் கொண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடும் ஒண்ட முடியாது. இப்படியான நிலையில் தன்ரை பலத்தை இந்தியாவுக்கு காட்ட வேண்டும் என்றால் விக்கினேசுவரன் ஐயாவுக்கு ஒரே ஒரு தெரிவு தான் இருக்குது.

பொங்கு தமிழ், எழுக தமிழ், சங்கே முழங்கு, அது இது என்று ஏதாவது கவர்ச்சிகரமான பெயர்களில் பேரணி ஒன்றை நடத்தித் தனக்கு இருக்கிற மக்கள் பலத்தைக் காட்டி இந்தியாவை மடக்கிறது தான் இப்ப ஐயாவுக்கு இருக்கிற தெரிவு.

அது தான் மனுசன் பேரணி ஒன்றை நடத்துகிறதுக்கான ஏற்பாடுகளில் இறங்கியிருக்கிறார்.

ஒன்று சொல்கிறேன் பிள்ளையள்.

போன முறை யாழ்ப்பாணத்தில் நடந்த எழுக தமிழ் பேரணி வெற்றிகரமாக நடந்தது என்றால் அதற்குக் காரணம் சிங்கத்தின் குகையில் நின்று சீறிய எங்கடை மாமனிதர் பொன்னம்பலத்தாரின்ரை மகன் கஜேந்திரகுமாரின்ரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பங்களிப்புத் தான்.

எழுக தமிழ் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்று ஊர் ஊராக கஜேந்திரகுமார், செல்வராஜா கஜேந்திரன், மணிவண்ணன் என்று எங்கடை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிப் பிள்ளையள் அலைந்து திரிஞ்சவையள். ஆனாலும் என்ன? அடி மத்தளத்திற்கு, பெயர் வித்துவானுக்கு என்ற கதையாக எழுக தமிழ் பேரணியின் வெற்றிக்காக கால் கடுக்க உழைச்சது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஆனால் அதுக்கான பெயரை எடுத்தது எங்கடை விக்கினேசுவரன் ஐயா.

எது எப்படியோ, இப்படி தன்ரை சுய புகழுக்காக, எண்பது வயதிலும் அரசியல் பதவிகளைப் பெற வேண்டும் என்பதற்காகத் தமிழ் மக்களின்ரை உணர்வுகளோடு விளையாடுவதை விட்டுப் போட்டு, தந்தை செல்வாவின்ரை பாணியில் ஏதாவது ஒரு ஒத்துழையாமை இயக்கம் ஒன்றை ஆரம்பிச்சு சிங்கள அரச இயந்திரத்தை ஆட்டம் காண வைக்கிறதுக்கு விக்கினேசுரன் ஐயா முயற்சிக்க வேண்டும்.

அந்த நாட்களில்... அதுவும் 1961ஆம் ஆண்டு எங்கடை செல்வநாயகம் ஐயா தொடங்கின தமிழ் அரசுக்கான ஒத்துழையாமை இயக்கத்தை நினைச்சுப் பார்த்தால் இன்றைக்கும் எனக்குப் புல்லரிக்குது பிள்ளையள்.
அந்தப் போராட்டம் தான் பத்து வருசம் கழிச்சு பிரபாகரன் என்ற அக்கினிக் குஞ்சு வெகுண்டெழுந்து ஆயுதமேந்துவதற்கு வழிசமைச்சுது.

அந்த நாளில் யாழ்ப்பாணக் கச்சேரியை சுற்றிவளைச்சு நாங்கள் நின்றம். நோயால் பாதிக்கப்பட்டாலும், எங்களோடு தந்தை செல்வாவும் வந்து நின்றார். பொலிஸ்காரன் வந்து கண்ணீர் புகையடிச்சும் எங்கடை சனம் அசையவில்லை.

இப்படியே தமிழர் தாயகத்தில் இருக்கிற அரச நிர்வாக இயந்திரத்தைக் கிழமைக் கணக்கில் நாங்கள் முடக்கி வைச்சம். தமிழ் அரசு என்ற பெயரில் தபால் தலையை வெளியிட்டு, தமிழ் அரசுக்கான அஞ்சல் சேவையைத் தொடங்கினம். உதுக்குப் பிறகு தான் சிறீமாவோ அம்மையார் வெகுண்டெழுந்து இராணுவத்தை தமிழர் தாயகத்திற்கு அனுப்பினார்.

ஆனாலும் நாங்கள் யாரும் கிறங்கவில்லை. வீதியில் படுத்துக் கிடந்த எங்களை சுடப் போவதாக ஆமிக்காரன் மிரட்டிய போதும் நாங்கள் பயப்படவில்லை. அதிலையும் என்ரை பள்ளிக்கூடக் காலத்துக் கூட்டாளி மாமனிதர் பொன்.கணேசமூர்த்தி பாருங்கோ, ஆமிக்காரன் மனிசனின்ரை நெஞ்சிலை துப்பாக்கியை வைச்சு மிரட்டிய போதும் வீதியில் இருந்து எழும்ப மாட்டேன் என்று சொல்லிப் போட்டார்.

நீ சுட்டால் சுடு ஆனால் நான் எழும்ப மாட்டேன் என்று மனுசன் துணிஞ்சு நின்றிச்சுது.

இப்படி ஒரு ஒத்துழையாமை இயக்கத்தை எங்கடை விக்கினேசுவரன் ஐயா தொடங்கி, சிங்கள அரச நிர்வாக இயந்திரத்தை தமிழர் தாயகத்தில் முடக்கினார் என்றால் அவரைத் தலையில் வைச்சு எங்கடை சனம் கொண்டாடும்.

அது ஒரு தாயகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் ஒரு எழுச்சியைக் கொண்டு வரும். அதனால் அரசியல் மாற்றமும் ஏற்படும்.

அதை விட்டுப் போட்டு அறுக்க முடியாதவளின் இடுப்பில் ஆயிரத்தெட்டு அரிவாள் இருக்கிற கதையாக, நாலு பேரணிகளை விக்கினேசுவரன் ஐயா நடத்துகிறதாலை தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படாது பாருங்கோ.

111

வேறை என்ன?

அடுத்த முறை ஏதாவது மசமசாக்களோடு வாறேன்.

நன்றி: ஈழமுரசு