ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் தற்கொலைக்கு முயலும் அகதிகள்

சனி மே 11, 2019

பப்பு நியூ கினியாவில் உள்ள மனுஸ்தீவில் செயல்பட்டு ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் அகதிகள் தற்கொலை முயலும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறியிருகிறார் அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல்.

ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயன்ற 500 க்கும் மேற்பட்ட அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் சுமார் 6 ஆண்டுகளுக்கு இம்முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அவர்களை பல மாதங்களுக்கு பிறகு சந்தித்துள்ள அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல், அகதிகளிடையே மன நல நெருக்கடி அதிகரித்து காணப்படுவதை சுட்டிக்காட்டியிருக்கிறார்.  

அகதிகளை பாதுகாக்க வேண்டிய ஆஸ்திரேலியா, இவர்களை நம்பிக்கையற்ற நிலைக்குள் தள்ளியுள்ளதாகவும் அகதிகளின் மன நலத்தையும் உயிரையும் பாதிப்புக்குள் ஆழ்த்தியுள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்திருக்கிறார்.  

இது வரை இம்முகாமில் இருந்த 7 அகதிகள் உயிரிழந்திருக்கின்றனர், அதில் 3 பேர் தற்கொலை செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

கடந்த ஜனவரி மாதம் இம்முகாமை பார்வையிட்ட கத்தோலிக்க மதகுருமார் ஒருவர், அகதிகள் தங்களை வருத்தி கொள்வதும் தற்கொலைக்கு முயல்வதும் அன்றாட நிகழ்வாக உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது மனுஸ்தீவில் உள்ள அகதிகள் நிலையை பார்வையிட்ட வழக்கறிஞர் ரிண்டோல், தற்கொலைக்கு முயன்ற பல அகதிகளை சந்தித்திருக்கிறார்.

“மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள அகதிகளை வெளியேற்றி அவர்கள் அனைவரையும் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு வருவது அவசரத் தேவையாக உள்ளது,” என வழக்கறிஞர் ஐன் ரிண்டோல் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

கடந்த 2013 முதல் கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலியாவை ஆளும் லிபரல் கூட்டணி அரசாங்கம், படகு வழியாக வருபவர்களை ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்குள் குடியேற்ற விடமாட்டோம் எனக் கூறிவருகின்றது. அப்படி அகதிகளை அனுமதித்தால் அது பாதுகாப்பு சிக்கலாகிவிடும் என்பது லிபரல் கட்சியின் வாதமாக உள்ளது.

 ஆஸ்திரேலியாவின் 46வது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் மே 18ம் தேதி நடைபெற இருக்கின்றது. இந்த சூழலில், தற்போதைய தேர்தல் பரப்புரைகளிலும் அகதிகளுக்கு/தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு எதிரான கருத்துகளை லிபரல் கட்சி தொடர்ந்து வெளிபடுத்தி வருகின்றது.