ஆஸ்திரேலியா: சமூக இடைவெளியை கடைப்பிடித்து அகதிகளுக்காக போராட்டம்

புதன் மே 20, 2020

 கொரோனா பதற்றத்திற்கு இடையில், ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள மந்த்ரா ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுவிக்கக்கோரி அந்த ஹோட்டலுக்கு வெளியே போராட்டம் நடைபெற்றுள்ளது. சமூக இடைவெளியை கடைப்பிடித்து நடந்த இப்போராட்டத்தில் 120 பேருக்கு மேல் பங்கேற்றுள்ளனர். 

மனுஸ்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்து மருத்துவ சிகிச்சைகாக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 70 அகதிகள் இந்த ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஹோட்டலை தடுப்பிற்கான மாற்று இடமாக ஆஸ்திரேலிய அரசு பயன்படுத்தி வரும் நிலையில், போதுமான மருத்துவ சிகிச்சையும் அகதிகளுக்கு வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது. 

இது போன்ற தடுப்பில் கொரோனா பரவக்கூடிய பெரும் ஆபத்து இருப்பதை சுகாதாரத்துறையைச் சார்ந்த பணியாளர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த சூழலில், அகதிகளை விடுவிக்கக்கோரி போராட்டம் நடந்துள்ளது. 

“எங்களது விடுதலைக்காக போராடுபவர்களுக்கு எங்களது நன்றியை தெரிவிக்க விரும்புகிறோம்… சில நாட்களுக்கு முன்னர், எங்களில் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். அவர் இப்போது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இந்த நிலையில் வாழ கட்டாயப்படுத்தப்படாமல், முறையான சிகிச்சை கிடைத்திருந்தால் அவர் பாதுகாப்பாக இருந்திருப்பார்,” எனக் கூறுகிறார் தடுப்பில் உள்ள மோஸ் எனும் அகதி. 

“கொரோனா காரணமாக, கடந்த சில மாதங்களாக நீங்கள் அனைவரும் தனிமைப்படுத்திக்கொண்ட நிலையில் இருக்கிறீர்கள். நாங்களோ சிறைவைக்கப்பட்டிருக்கிறோம், ஏழு ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருக்கிறோம். நாங்கள் காலவரையின்றி உள்ளேயே வைக்கப்பட்டிருப்போம்,” என்னும் மோஸ் ‘எப்போது தங்களுக்கு விடுதலை?’ என வினவுகிறார். 

Refugee Action Collective எனும் அமைப்பின் பேச்சாளர் லூசி ஹொனன், பிரதமரும் குடிவரவுத்துரையும் விக்டோரியா மாநிலத் தலைவரும் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி ஹோட்டலிலிருந்து அகதிகளை விடுவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.