ஆஸ்திரேலியாவில் நிரந்தர பாதுக்காப்பைக் கோரும் அகதிகள்

சனி டிசம்பர் 14, 2019

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் அகதிகளுக்கு நிரந்தர பாதுகாப்பை வழங்கக்கோரி சவுத் வேல்சில் உள்ள Parramatta நூற்றாண்டு சதுக்கத்தில் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

அகதிகளை சொந்த நாட்டிற்கு நாடுகடத்தும் வாய்ப்பை ஆஸ்திரேலிய அரசுக்கு வழங்கும் தற்காலிக பாதுகாப்பு விசா (Temporary Protection Visa- TPV) நடைமுறைக்கு முடிவு கட்ட வேண்டும் என இதில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நவுரு மற்றும் மனுஸ்தீவில் உள்ள அகதிகளுக்கான மருத்துவ வெளியேற்றச்சட்டத்தை ஆஸ்திரேலிய ஆளும் தரப்பு நீக்கியதன் தொடர்ச்சியாக இப்போராட்டம் நடந்துள்ளது. எட்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் தற்காலிக பாதுகாப்பு விசாவில் உள்ள பல அகதிகளின் விண்ணப்பங்கள் முழுமையாக பரிசீலிக்கப்படாத நிலை ஆஸ்திரேலியாவில் இருந்து வருகின்றது.

தற்காலிக விசா கொண்ட அகதி வேறொரு நாட்டுக்கு பயணிக்க அனுமதி கிடையாது என்பதால் குடும்பத்தைப் பிரிந்த அகதிகள் வேறொரு நாட்டுக்கு பயணித்தாவது குடும்பத்தை சந்திப்பது சாத்தியமற்றதாக இருக்கிறது.

“‘அப்பா, உங்களை எப்போது பார்ப்பேன்?” எனக் கேட்கும் எனது குழந்தைகளுக்கு தற்காலிக சட்டத்தை உருவாக்கியவர்கள் பதலளிக்க வேண்டும்,” என்கிறார் அலி எனும் அகதி. 

“ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வருவது ஏன்? ஏனெனில் அகதிகளுக்கு வேறு வாய்ப்பில்லை,” என்கிறார் ஒரு ரோஹிங்கியா அகதி.

தற்காலிக விசாவில் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்த இலங்கைத் தமிழ் அகதி குடும்பம் இலங்கைக்கு நாடுகடத்தப்படும் சூழலை எதிர்கொண்ட நிலையில், இவ்விசாவில் உள்ள ஆபத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததாகக் கூறப்படுகின்றது. கடந்த 2012 யில் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 யில் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் ஆஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர். தஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு ஆஸ்திரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் (கோபிகா, தருணிகா) பிறந்தன. 

ஆஸ்திரேலியாவின் பிலோயலா (Biloela) நகரில் வசித்து வந்த இவர்களின் விசா, கடந்த மார்ச் 2018ல் காலாவதியாகியதாக கைது செய்யப்பட்டு மெல்பேர்ன் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனர். அவர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட இருந்த நிலையில் அம்முயற்சி கடைசி நிமிட நீதிமன்ற தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டு, தற்போது கிறிஸ்துமஸ் தீவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ”