அடிப்படைவாதத்தை போதிக்கும் கல்வி நிறுவனங்கள் தேவையில்லை!

புதன் மே 15, 2019

கிழக்கு மாகாணத்தில் இயங்கிவரும் மட்டக்களப்பு வளாகம் மதத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றதே தவிர, அது நாட்டின் தேசிய கல்வித்திட்டத்திற்கு அமைவாக செயற்படவில்லை. இவ்வாறான அடிப்படைவாதத்தைப் போதிக்கும் கல்வி நிறுவனங்கள் எமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவை என்பதுடன், அவை அவசியமானவையும் அல்ல. 

எனவே மட்டக்களப்பு வளாகத்தை கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் இணைத்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டங்களை உள்வாங்குவதே இதற்கான சிறந்த தீர்வாக அமையும் என்று மதகுருமார் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இணைந்து இன்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.

அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத்தில் மதகுருமார் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இணைந்து 'அடிப்படைவாதக் கல்வியைப் புறக்கணிப்பதற்கு அனைவரும் ஒன்றுபடுவோம்" என்ற அடிப்படையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். 

இச்சந்திப்பில் பாஹியன்கல ஆனந்த சாகர தேரர், தர்ஷக ஷர்மா, பேராசிரியர் ஜன்ன ஜயசுமன, சிரேஷ்ட விரிவுரையாளர் லலித சிறி குணருவன், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வசந்த அல்விஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும், மட்டக்களப்பு வளாகம் எனப்படுகின்ற கல்வி நிறுவனத்தின் ஊடாக உண்மையில் என்ன போதிக்கப்படுகின்றது என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. 

முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதங்களைக் கையில் எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஒருவர் தான் கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது அவரது அலுவலகத்திலிருந்து பல ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவராலேயே இந்த மட்டக்களப்பு வளாகத்திற்கான அனுமதி முறையற்ற விதத்தில் பெறப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லா மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோருக்கு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புள்ளது. அவர்கள் குண்டுதாரிகளுக்கு அடைக்கலம் வழங்கியிருக்கிறார்கள். அதேபோன்று இந்த மட்டக்களப்பு வளாகமும் ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளுக்கு பயிற்சி வழங்கும் வகையில் செயற்பட்டிருக்கும் என்ற சந்தேகம் எழுகின்றது என பல கூற்றுக்கள் முன்வைக்கப்பட்டன.