அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து.. ராமதாஸ் எச்சரிக்கை

வியாழன் ஏப்ரல் 02, 2020

ஊரடங்கு காரணமாக அத்தியாவசியப் பொருட்களுக்கு தமிழகத்தில் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகி உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஊரடங்கு ஆணை காரணமாக போக்குவரத்துக்கும், அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் ஆலைகள் இயக்கத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால், சந்தையில் அவற்றின் வரத்துக் குறைந்து, அதன் காரணமாக விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் அடுத்த சில நாட்களில் தமிழ்நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது.

ஊரடங்கு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்டு இன்று எட்டாவது நாள் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அரிசி விலை கிலோவுக்கு ரூ.5 வரை உயர்ந்திருக்கிறது.

மளிகைக் கடைகளிலும், அரிசி மட்டும் விற்பனை செய்யும் கடைகளிலும் மிகக்குறைந்த அளவிலேயே அரிசி இருப்பு உள்ளது. சில்லறையில் விற்பனை செய்வதற்கான வணிகத் தரப்பெயர் இல்லாத அரிசி மூட்டைகள் எங்குமே இல்லை.

வணிகத் தரப்பெயர் கொண்ட அரிசி மூட்டைகள் மட்டுமே சந்தைகளில் கிடைக்கின்றன. அவற்றின் விலை இயல்பாகவே அதிகம் என்பதால், கூடுதல் விலையை மக்கள் மீது சுமத்த வேண்டியிருப்பதாக வணிகர்கள் கூறுகின்றனர்.