ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதானவருக்கு விளக்கமறியல் நீடிப்பு !

புதன் செப்டம்பர் 11, 2019

சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக கைதான சந்தேக நபரை மீண்டும்  7 நாட்கள்  விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் செவ்வாய்க்கிழமை (27) இரவு குறித்த சந்தேக நபரை விசேட அதிரடிப்படையினர் பாண்டிருப்பு கடற்கரையில் வைத்து கைதுசெய்து கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னர் வழக்கு தாக்கல் செய்து இரு வாரங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கு இன்று புதன்கிழமை (11) கல்முனை  நீதிமன்ற  நீதிபதி  ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர் தொடர்பாக பொலிஸ் தரப்பில் இருந்து எவ்வித ஆதாரங்களும் சமர்ப்பிக்காத நிலையில் பொலிஸார்  மேலும் ஒருவாரம் மேலதிக விளக்கமறியலை கோரியதற்கு இணங்க  நீதிவான் அனுமதி வழங்கினார்.

மேலும் எதிர்வரும் செப்ரம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட இச்சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் தரப்பினர் முன்னெடுப்பதுடன் சந்தேக நபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி தனது  தரப்பினரின் வழக்கினை பயங்கரவாத தடைத் சட்டத்தில் இருந்து  நீக்கி சாதாரண சிவில் வழக்கு ஊடாக முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.