சென்னையில் தடையை மீறி பேரணி!

வியாழன் பெப்ரவரி 20, 2020

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர், முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் 20 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் 22 முஸ்லிம் அமைப்பினர் நேற்று ஈடுபட்டனர்.

உச்ச நீதிமன்ற  தடையை மீறி நடந்த இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கலைவாணர் அரங்கில் இருந்து சேப்பாக்கம் விருந்தினர் இல்லம் வரையில் பேரணியாக சென்றனர். சுமார் 20 ஆயிரம் பேர் வரையில் இதில் கலந்து கொண்டனர்.

காலை 10.30 மணி அளவில் தொடங்கிய போராட்டம் மதியம் 12.10 மணி அளவில் முடிவுக்கு வந்தது. சேப்பாக்கம் பகுதியே ஸ்தம்பிக்கும் அளவுக்கு நடைபெற்ற போராட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
 

அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளும் போராட்டத்தில் கலந்து கெண்டனர்.

 

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நேற்று சென்னையில் திரண்ட போராட்டக்காரர்கள்.

 

நீதிமன்ற  தடையை மீறி போலீஸ் அனுமதியின்றி நடந்த இந்த போராட்டம் தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர், முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் 20 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி கூடி போராட்டம் நடத்தியது உள்பட பல்வேறு சட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் போராட்டம் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது.

கடந்த 14-ந்திகதி வண்ணாரப்பேட்டையில் திடீரென திரண்ட முஸ்லிம்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 7-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. நேற்று இரவும் விடிய விடிய பெண்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.