செய்திக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளேன்!

புதன் ஓகஸ்ட் 14, 2019

வவுனியா பாவக்குளம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு கரும்பு செய்கை மேற்கொள்ள வடமாகாண சபை இயங்கிய நிலையில் இருந்த போது காணியை அனுமதி பெற்று கொடுக்க ஒரு கோடி ரூபாய் பணத்தை முற்பணமாகவும் பின்னர் 10 கோடி ரூபாய் பணம் குறித்த நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளப்பட்டதாக சில இணையத்தளங்கள் உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியை வண்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதி தவிசாளருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (14) ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

குறித்த அறிக்கையில்,

வவுனியா பாவக்குளம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு கரும்பு செய்கை மேற்கொள்ள வடமாகாண சபை இயங்கிய காலத்தில் குறித்த தனியார் நிறுவனத்திற்கு காணியை பெற்றுக்கொள்ள 11 கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளதாக சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உண்மைக்கு புறம்பாக குறித்த செய்திகள் வெளியாகிஉள்ளன. குறித்த செய்தியை வண்மையாக கண்டிக்கின்றேன்.அவ்வாறு எவ்வித சம்பவங்களும் இடம் பெறவில்லை.எனது சுய கௌரவத்தையும் எனது சிறப்புரிமையை மீறும் வகையில் குறித்த செய்தி உண்மைக்கு புறம்பாக வெளியிடப்பட்டுள்ளது.

அந்த செய்தியை வெளியிட்ட இணையத்தளங்களுக்கு எதிராக சட்ட சடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன்.காவல் துறை  நிலையத்தில் முறைப்பாடு செய்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளேன்.

எனது சிறப்புரிமை மீறப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்றத்தில்  சபாநாயகரின் கவனத்திற்கும் கொண்டு செல்ல உள்ளேன் என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.