செய்திகளும் எழும் கேள்விகளும்.....?

வியாழன் ஓகஸ்ட் 08, 2019

செய்தி:-எமது நாட்டின் அரசியல் மற்றும் உள்விவகாரங்களில் தலையிட சர்வதேசத்துக்கு உரிமையில்லை என சிறீலங்கா எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

எழும் கேள்வி:- விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு மட்டும் உள்
விவகாரங்களில் வெளிநாடுகள் தலையீடு செய்யலாமா..?
                                                      *****************
செய்தி:- இந்தியாவிலுள்ள இந்துக் கோயில்களில் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாகம் வளர்த்து வழிபாடு.

எழும் கேள்வி:- இலங்கையில் இந்துக் கோயில்களை இடித்துப் பெளத்த விகாரைகட்ட அனுமதித்துவிட்டு, இந்தியாவில் வழிபாடா?
                                                           *****************
செய்தி:- இலங்கையில் இந்து மதத்தையும் தமிழர்களையும் அழிக்கும் சூழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. ஆகவே இந்து மதத்தையும் தமிழர்களையும் பாதுகாக்க இந்தியா தலையிட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.

எழும் கேள்வி:- ஏற்கனவே 87ல் தமிழர்களைப் பாதுகாக்க இந்தியா தலையிட்டது போதாதா..?
                                                          *****************
செய்தி:-தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு அடிபணிந்து நடக்கப்போவதில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

எழும் கேள்வி:- இப்ப என்ன அடிபணியாமல் சுதந்திரமாகவா இருக்கின்றீர்கள்..?
                                                       *****************
செய்தி:--தமிழ் தேசம் வாழ வேண்டும் என்றால் தமிழ் மொழி வாழவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.                                                      

எழும் கேள்வி:- தமிழ்த் தேசம் ஒன்று இருப்பதை ஏற்றுக்கொண்டு
விட்டீர்களா..?
                                                    *****************                                                   
செய்தி:- முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி மிகக் குழப்பமான கூட்டணி என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

எழும் கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் என்ன தெளிவான கூட்டணியோ..?
                                                       *****************
செய்தி:- பிளவுபடாத நாட்டுக்குள் முறையான தீர்வொன்றை அரசாங்கம் விரைவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

எழும் கேள்வி:- சிங்களவர் நாட்டைப் பிரித்துக் கொடுத்தாலும் சம்பந்தர் விடமாட்டார் போலிருக்கின்றதே..?
                                                      *****************
செய்தி:- தமிழ் கிராமங்களை பாதுகாக்க தமிழ்த் தேசியத்தை பலப்படுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

எழும் கேள்வி:- ‘தமிழ் தேசியம்’ என்ற சொல் கூட்டமைப்பின் தலைமைகளுக்குப் பிடிக்காதென்பது கவீந்திரன் கோடீஸ்வரன் தெரியாதோ..?
                                                       *****************
செய்தி:- விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் இன்று இந்த நாட்டில் இருந்திருந்தால் திருகோணமலையிலே எமது குரு முதல்வர் மீது சுடுதண்ணீர் ஊற்றியிருக்க முடியுமா என நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன்.

எழும் கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தறிகெட்டுத் திரிந்திருக்கமுடியுமா..?

 

நன்றி: ஈழமுரசு