சீவன் போன பின் புலம்பி அழுது பிரயோசனமில்லை-பிலாவடிமூலைப் பெருமான்

சனி ஜூலை 27, 2019

வணக்கம் குஞ்சுகள்.
ஏதாவது மச மசாக்களோடு வந்திருகிறன் என்று நினைச்சு வாயைப் பிளந்து கொண்டு நிற்காதேயுங்கோ.
எனக்கு வாற கோபத்துக்கு...

போன கிழமை தான் டாக்குத்தர் சொன்னவர், ‘மிஸ்டர் பெருமான், உங்களுக்கு இரத்தக் கொதிப்பு கூடிப் போய்ச்சுது. கண்ட கண்ட செய்திகளைப் படிச்சுப் போட்டு கொதியேறிப் போய் கதைச்சுக் கொண்டு திரியிறதை விட்டுப் போட்டு, மனதை சாந்தப்படுத்துகிற வேலையைப் பாருங்கோ’ என்று. அவருக்கு எங்கே விளங்கப் போகுது என்ரை நிலை?

பின்னை என்ன பிள்ளையள், கன்னியா எங்கடை பூமி. எங்கடை கொப்பாட்டன் இராவணேசுவரன் ஆட்சி செய்த பூமி. எங்கடை குளக்கோட்ட மகாராசா படை நடத்திச் சிங்களவனை ஆட்டம் காண வைச்ச வீரம் செறிந்த மண். அது எங்கடை ஈழத்தமிழரின்ரை சொந்த மண் பாருங்கோ. அதிலை போய் சிங்களவன் விகாரை கட்டுகிறான் என்றால்... எனக்கு வருகிற கோபத்துக்கு, முதலில் கிழட்டுச் சம்பந்தருக்கு அலகைப் பொத்தி இரண்டு குடுத்தால் எப்படி இருக்கும் என்கிற மாதிரித் தான் இருக்குது.

இரத்தம் கொதிக்குது பிள்ளையள்.

நான் பெளத்த மதத்திற்கு எதிரானவன் இல்லை. விகாரை கட்டுகிறது என்றால், புத்தரைக் கும்பிடுகிறதுக்கு கன்னியாவில் இருக்கிற தமிழ் மக்களுக்கு ஒரு விகாரை தேவை என்றால், அதைக் கட்டுகிறதில் எனக்குப் பிரச்சினை இல்லை. பெளத்தம் என்ன எங்களுக்கு புதிய மதமே?  

சங்க காலத்தில் சைவத்தோடு, சமணமும், பெளத்தமும் தானே தமிழர் வாழ்வில் கலந்திருந்த மதங்கள். மதுரையை எரித்த கண்ணகிக்கு ஒரு சிலப்பதிகாரம் இருக்கிறது போல, அன்பையும் அறத்தையும் போதித்த பெளத்த பிக்குனி மணிமேகலைக்கு இளங்கோவடிகள் எழுதிய மணிமேகலை என்கிற காப்பியம் இருக்கிறதை நாங்கள் மறந்தே போனம்?

எங்கடை பிரச்சினை பெளத்த மதத்தோடு இல்லை பாருங்கோ. மதத்தின் பெயரில் சிங்கள இனவாதத்தை வேரூன்ற வைக்கிறதுக்கு மொட்டந்தலையள் எடுக்கிற முயற்சி தான் எங்களுக்கு பிரச்சினையே.
கன்னியாவிலை பெளத்த விகாரை கட்டுகிறதாக இருந்தால், எங்கடை சங்க காலத்துத் தமிழ் முறைப்படி ஒரு விகாரையைக் கட்ட வேணும் பாருங்கோ.

அதை விட்டுப் போட்டு அங்கை இருக்கிற பிள்ளையார் கோவிலை இடிச்சுப் போட்டு சிங்கள முறைப்படி பெளத்த விகாரை கட்டுகிறது தமிழருக்கு இரத்தக் கொதிப்பைக் கொண்டு வருகிற விசயம்.

உதை எப்படியாவது நாங்கள் தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும்.

ஏற்கனவே முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் கோவிலில் கடைவிரிச்சு நிற்கிற மொட்டந்தலைக் காவியள், அப்படியே அந்தக் கோவிலையும் இடிப்பாங்கள். பிறகு திருக்கோணேச்சரம், மாமாங்கம், திருக்கேதீச்சரம், நல்லூர், செல்வச்சந்நிதி என்று ஊருராய் இருக்கிற தமிழரின்ரை கோவில் குளங்களை எல்லாம் இடிச்சுப் போட்டு மொட்டந்தலைக் காவியள் விகாரை கட்டுவானுகள்.

சீவன் போன பிறகு புலம்பி அழுகிறதில் ஏதாவது பிரயோசனம் இருக்கே? நான் சொல்கிறது விளங்குது தானே பிள்ளையள்?

இதுக்குள்ளை எங்கடை விக்கினேசுவரன் ஐயாவின்ரை விளையாட்டு.

விக்கினம் தீர்க்கும் முதல்வன் விநாயகன் போலை எங்கடை விக்கினேசுவரன் ஐயாவும் எங்கடை மக்களுக்குப் பிடிச்சிருக்கிற விக்கினங்களை எல்லாம் நீக்குவார் என்று அவரைப் பார்த்து ‘குணாநிதியே’ என்று எங்கடை சனம் தலையில் வைச்சுக் கொண்டாட, மனுசன் அரசியல் சித்து விளையாட்டுச் செய்கிறார்.

ஏதோ மண்டையன் குழு சுரேசு பிரேமச்சந்திரன் இல்லையயன்றால் தமிழருக்கு விடிவு கிடைக்காது என்கிற மாதிரித் தான் அவருடைய கதை இருக்குது.

நான் ஒன்று சொல்கிறேன் பிள்ளையள்.

தம்பி கஜன்... அது தான் சிங்கத்தின் குகைக்குள் நின்று சீறிய எங்கடை மாமனிதர் குமார் பொன்னம்பலத்தாரின்ரை மகன் கஜேந்திரகுமார் வயசிலை இளையவன் என்றாலும், பெடியன் கொள்கைப் பிடிப்பு உடையவன்.

111

அந்தப் பெடியன் திரும்பவும் எம்.பி. ஆகுதோ இல்லையோ. அதெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை. தகப்பனை மாதிரி சிங்கத்தின் குகைக்குள் நின்று சீறிக் கொண்டிருந்த அந்தப் பெடியன் கொள்கை வழியில் நின்று எங்கடை இனத்துக்காகக் கொடுக்கிற குரலே எங்களுக்கு தெம்பு தான்.

தேர்தல்கள் வரும், போகும். ஆரும் வெல்லலாம், தோற்கலாம். ஆனால் கொள்கை தான் முக்கியம் பிள்ளையள். அந்தக் கொள்கை வழி நின்று தடம்புரளாமல் குரல் கொடுக்கிறதுக்கு கஜேந்திரகுமார் மாதிரியான கொள்கைப் பிடிப்புள்ள ஆட்கள் தான் இன்றைக்கு எங்களுக்குத் தேவை.

தேர்தல் காலத்தில் ‘பிரபாகரன் ஒரு மாவீரன்’ என்று சொல்லி வாக்குப் பிச்சை எடுத்துப் போட்டு, பிறகு தேர்தலில் வென்றதும் ‘பிரபாகரன் அதிகார ஆணவத்தில் இருந்ததால் தான் வீழ்ந்தார்’ என்று எங்கடை சூரியத் தலைவனை வசைபாடுகிறதும், பிறகு திரும்பவும் வாக்குகள் தேவை என்றதும் ‘தம்பி பிரபாகரனின் காலம் வாராதோ என்று தமிழ் மக்கள் ஏங்குகிறார்கள்’ என்று அந்தர் பல்டி அடிக்கிறதுமாக, நாணல் போல் அங்கையும் இங்கையும் சாய்கிற விக்னேசுவரன் ஐயாவின்ரை கூட்டணியில் இருக்கிறதை விட தம்பி கஜேந்திரகுமார் தனிச்சு நின்று அரசியல் செய்கிறது தான் எனக்குச் சரியயன்று படுகிறது பிள்ளையள்.

இதுக்குள்ளை இன்னொரு சங்கதியும் இருக்குது பிள்ளையள்.

உந்த விக்கினேசுவரன் ஐயா இப்ப கொஞ்ச நாளாக எங்கடை தேசியத் தலைவரையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் புகழ்ந்து கொண்டு திரிஞ்சாலும், தன்னைத் தனிப்பட்ட ரீதியில் சந்திக்கிற ஆட்களிட்டை புலியள் சகோதரப் படுகொலை செய்தவையள் என்று புறுபுறுக்கிறவராம்.

எங்கடை பிள்ளையளை ‘பாசிசப் புலிகள்’ என்று திட்டித் தீர்த்த சுரேசு பிரேமச்சந்திரனோடு சேர்ந்து மனுசனுக்கு பாசிச வியாதி தொற்றிப் போச்சுதோ தெரியவில்லை.

கடைசியில் புலித்தோல் போர்த்த நரிகளில் இன்னுமொரு நரியாக விக்கினேசுவரன் ஐயாவும் மாறாவிட்டால் சரி!

இதோடை இன்னுமொரு விசயத்தையும் பிட்டு வைக்க வேணும் பிள்ளையள். நீங்கள் கேள்விப்பட்டிருப்பியள், எங்கடை தம்பி கஜேந்திரகுமாருக்கும், விக்கினேசுவரன் ஐயாவுக்கும் இடையில் கூட்டணி ஏற்படுத்துகிறதுக்கு முறுக்கர் குணசிங்கம்... மன்னிக்க வேண்டும் முருகர் குணசிங்கம் என்று அவுஸ்திரேலியாவில் இருந்து போன கல்லாநிதி... சீ கலாநிதி ஒருத்தர் இப்ப ஊரிலை குத்தி முறிஞ்சு கொண்டு திரியிறராம்.

இதிலை என்ன குசும்பு என்றால், அவருக்கு தம்பி கஜேந்திரகுமாரைப் பிடிக்காது. தம்பி கஜேந்திரகுமாரைக் காட்டமாக விமர்சித்து தான் வெளியிட்ட நூல் ஒன்றில் மனுசன் எழுதியிருக்கிறார் என்றால் பாருங்கோ.
இதுக்குள்ளை மனுசனுக்கு கே.பியரோடையும் அவ்வளவு நல்ல வாரப்பாடு இல்லை.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கனவுலக சாம்ராச்சியத்தை அமைக்கிறதுக்கு உதவி செய்கிறன் என்று சொல்லிப் போட்டுக் கடைசி நேரத்தில் தன்ரை காலை குணசிங்கத்தார் வாரிப் போட்டார் என்று அந்த நேரத்தில் இரண்டெழுத்தாளர்... அவர் தான் கே.பி என்கிற செல்வராசா பத்மநாதன் முறுக்கிக் கொண்டு திரிஞ்சவர். மனுசன் செமக் கோபத்தில் இருந்தவர்.

இப்ப என்னவென்றால், கே.பியர் கிளிநொச்சியில் இராணுவப் பாதுகாப்போடை உல்லாசமாக இருக்கிறார். எங்கடை முறுக்கர் ஐயாவும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கிளிநொச்சியில் உலாத்துகிறாராம்.
இப்ப உங்களுக்கு விளங்கியிருக்கும், எலி ஏன் அம்மணமாக ஓடுதென்று.

சரி, வரட்டே பிள்ளையள்..?

நன்றி: ஈழமுரசு