சிகாகோ உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ‘சுந்தர தாய்மொழி’

வியாழன் ஜூலை 04, 2019

தமிழின் தொன்மையை எடுத்துக் கூறும் வகையில் ‘சுந்தர தாய்மொழி’ குறும்படம் சிகாகோவில் நடைபெறும் 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வெளியிடப்படுகிறது.

சிகாகோ 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, ஃபெட்னா தமிழ் விழா, சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் பொன்விழா என முப்பெரும் தமிழ் விழா ஜூலை 4ம் திகதி தொடங்க உள்ளது.

சிறப்பு விருந்தினர்களும், விழாவில் பங்கேற்கும் உலகத் தமிழர்களும் சிகாகோ வந்த வண்ணம் உள்ளனர். சமூக செயற்பாட்டாளரும், தமிழ் ஆர்வலருமான நடிகர் ஆரியும் இந்த விழாவில் கலந்து கொள்ள சிகாகோ வந்துள்ளார்.

‘சுந்தர தாய்மொழி’ எனும் குறும்படத்தை இந்த மாநாட்டில் வெளியிட்டு அவருடைய ‘ஆரிமுகம்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழாவையும் நடத்த உள்ளார். இதைத் தொடர்ந்து ‘சுந்தர தாய்மொழி’ குறும்படம் உலகப்பட விழாக்களுக்கு செல்ல உள்ளது.

தமிழின் தொன்மையை அடுத்த தலைமுறையினர் தலைமுறை அறிந்திடும்  வகையில்  ‘சுந்தர தாய்மொழி’ குறும்படம் அமைந்துள்ளதாக ஆரி தெரிவித்தார். முன்னணி தொழிற்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி உள்ள இந்தப் படத்தை, குரு.N.நாராயணன் இயக்கியுள்ளார். “நெடுஞ்சாலை” திரைப்பட புகழ் சத்யா இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவை ‘அண்ணாதுரை’ திரைப்பட புகழ் தில்ராஜூம், எடிட்டிங்கை தேசிய விருது பெற்ற சாபு ஜோசப்பும்  செய்துள்ளனர்.  

கடந்த ஆண்டு டல்லாஸில் நடைபெற்ற 31வது ஃபெட்னா தமிழ் விழாவில், உலகத் தமிழர்கள் ஒன்றுகூடி தாய்மொழி தமிழில் கையெழுத்திட்டு கின்னஸ் உலக  சாதனை  நிகழ்த்துவதற்கான ஏற்பாடுகளையும் ஒருங்கிணைப்பையும் செய்து இருந்தார் நடிகர் ஆரி.   

அதைத் தொடர்ந்து தனது கையொப்பத்தை தாய்மொழி தமிழில்  மாற்றியதோடு  தமிழகம் எங்கும் தாய்மொழி கையெழுத்து இடும் முழக்கத்தை ‘மாறுவோம் மாற்றுவோம்’ அறக்கட்டளை மூலம்  பரப்புரை செய்துவருகிறார் ஆரி  என்பதும் குறிப்பிடத்தக்கது.