சிங்கள அதிபர் தேர்தலும், தேசியத் தலைவரின் சிந்தனையும் - 2

செவ்வாய் செப்டம்பர் 17, 2019

அமிர்தலிங்கத்தின் மறுமுகமாக வெளிப்படும் விக்னேஸ்வரன் - கலாநிதி சேரமான்

சிங்கள தேசத்து அதிபர் தேர்தலால் தமிழர்களுக்கு நிறைய நன்மைகள் காத்திருப்பது போன்று அண்மைக் காலமாகத் தமிழீழ தாயகத்திலும், புகலிட நாடுகளிலும் மாயக் கோட்டை ஒன்று எழுப்பப்பட்டு வருகின்றது.

உண்மையில் இந்தத் தேர்தலால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படப் போவதில்லை. அதாவது இந்தத் தேர்தலில் எந்தச் சிங்கள வேட்பாளர் வெற்றி பெற்றாலும், அது தமிழர்களைப் பொறுத்தவரை பழைய குருடி, கதவைத் திறவடி என்ற கதையாகவே தொடரப் போகின்றது.

அதே நேரத்தில் இத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அதனால் சிங்கள மக்களில் கணிசமானவர்கள் பயனடைவார்கள் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது. இத் தேர்தலால் முஸ்லிம் மக்கள் பயனடைகின்றார்களோ இல்லையோ, நிச்சயம் அமைச்சுப் பதவிகளைக் கட்டிப் பிடிப்பதில் பெயர் போன முஸ்லிம் தலைவர்கள் பயன்பெறுவார்கள்.

111

ஆனால் இத்தேர்தலால் அதிக அளவில் பாதிக்கப்படப் போவது அல்லது அதிக அளவில் பயனடையப் போவது ஈழத்
தீவை மையப்படுத்தித் தமது இராணுவ, பொருண்மிய வியூகங்களை வகுக்கும் பேரரசுகள் தான்.
ஈழத்தீவை விட்டுப் பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சி அகன்ற 04.02.1948 தொடக்கம் இரண்டாவது தடவையாக சிங்கள அதிபராகச் சந்திரிகா அம்மையார் பதவியேற்பதற்கு வழிசமைத்த 21.12.1999 திகதிய அதிபர் தேர்தல் வரையாக ஈழத்
தீவில் நிகழ்ந்த சகல தேர்தல்களையும் இந்தியாவும், அமெரிக்காவும் உன்னிப்பாக அவதானித்து வந்திருந்தாலும், அவற்றை போட்டி மனப்பான்மையுடனேயே இரு தரப்பும் அணுகியிருந்தன.

ஆனால் 19.03.2000 அன்று இந்தியாவிற்கு அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்ரன் அவர்கள் மேற்கொண்ட அதிகாரபூர்வ பயணத்தைத் தொடர்ந்து இந்நிலைப்பாட்டில் பெரும் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது.

ஆம், அது வரை போட்டி மனப்பான்மையுடன் ஈழத்தீவின் அரசியல் களத்தை அணுகி வந்த இந்தியாவும், மேற்குலகமும் கிளின்ரனின் இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து ஒரே கோட்டில் பயணிக்கத் தொடங்கின. அந்த அளவிற்கு கிளின்ரன் அவர்களின் இந்தியப் பயணம் அமைந்திருந்தது.

111

அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்தத் தவறியதன் மூலம் ஐந்து ஆண்டுகளை பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான இந்திய அரசாங்கம் வீணடித்திருந்ததாகத் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் அவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார் என்றால் பாருங்கள்.

கிள்ன்ரனின் இந்தியப் பயணம் நிகழ்ந்து இம்மாதத்தின் மூன்றாம் வாரத்தோடு பத்தொன்பதரை ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.அடுத்த ஆண்டு பங்குனி வந்தால் இரண்டு தசாப்தங்கள் நிறைவடைந்து விடும்.

இந்துமா சமுத்திரத்தின் கடல்வழிப் பாதைகளின் பாதுகாப்பு, இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், திறந்தவெளி வாணிபம், தொழில்நுட்பப் பரிமாற்றம், வளப் பரிவர்த்தனை எனப் பல்துறை சார்ந்து இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு விரிந்துள்ளது.

டொனால்ட் டிரம்ப் அவர்களின் ஆட்சியில் இன்று அமெரிக்காவிற்கும், ஏனைய மேற்குலக நாடுகளுக்கும் இடையில் பல தரப்பட்ட முரண்பாடுகள் நிலவினாலும் ஈழத்தீவின் அரசியல் களத்தைப் பொறுத்தவரை பெரும்பாலும் நேர்கோட்டிலேயே அவை பயணிக்கின்றன எனலாம்.

அமெரிக்காவும் சரி, கனடாவும் சரி, பிரித்தானியாவும் சரி, ஏனைய மேற்குலக நாடுகளும் சரி, ஈழத்தீவில் திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தக் கூடிய அரசியல் தலைவர்கள் ஆட்சியில் இருப்பதையே விரும்புகின்றன.

ஈழத்தீவின் ஆட்சிக்கட்டில் அமர்பவர் ஒரு முதலாளித்துவவாதியாக இருக்க வேண்டும் என்பது தான் மேற்குலகின் எதிர்பார்ப்பு. இதற்காகத் தான் யுத்தம் நிகழ்ந்த காலத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகளைக் கொண்டு வருவதற்கு மேற்குலகம் குத்தி முறிந்தது.

இதனைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் நன்கு அறிந்திருந்தது. இது பற்றி 1994ஆம் ஆண்டு மாசி மாதம் வெளிவந்த விடுதலைப் புலிகள் பத்திரிகையில் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

‘இலங்கையில் பெருமளவு முதலீடு செய்வதற்கோ, அன்றி இத் தீவை உலக முதலாளியத்தின் வலயமாக மாற்றுவதற்கோ, முடிவில்லாது தொடரும் இப்போர் ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறது. இதனால் சமாதான வழியில் பிரச்சினையை தீர்க்க முயலுமாறு மேற்குலகம் சிறீலங்காவுக்கு அழுத்தம் போடுகிறது.’

தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்தக் கணிப்பில் எந்தத் தவறும் இல்லை என்பதை, 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘இலங்கையின் சமாதான முயற்சிகளில் அமெரிக்காவின் பங்கு’ என்ற தலைப்பிலான குறும் ஆய்வு நூலில் முன்னாள் அமெரிக்க தூதுவர் ஜெப்ரி லுன்ஸ்ரெட் அவர்களே ஒப்புக் கொண்டிருந்தார். அதிலும், ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆட்சிக்காலங்களில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு சார்பான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்ததற்கு அவர்களின் முதலாளித்துவ திறந்தவெளிக் கொள்கைகளே காரணம் என்று லுன்ஸ்ரெட் அவர்கள் ஒப்புதல் வாக்குமூலமளித்திருந்தார்.

முதலாளிய நலன்களை அடிப்படையாகக் கொண்டு ஈழத்தீவின் அரசியல் களத்தை ஒரே கோணத்தில் அனைத்து மேற்குலக நாடுகளும் அணுகினாலும், இப் பொருண்மிய நலன்களுக்கு அப்பால் ஈழத்தீவில் அமெரிக்காவிற்கு இராணுவ நலன்களும் இருக்கத் தான் செய்கின்றன.

பனிப்போருக்குப் பின்னர் தனிக்காட்டு இராசாவாக உலக வல்லரசு என்ற பாத்திரத்தை வகித்த அமெரிக்கா இன்று உலகளாவிய ரீதியில் மெல்ல மெல்லத் தனது செல்வாக்கை இழக்கத் தொடங்கியுள்ளது. காவாலி நாடுகளுடன் உறவு வைக்க மாட்டோம், பயங்கரவாதிகளுடன் பேச மாட்டோம் என்றெல்லாம் ஜோர்ஜ் வோக்கர் புஸ் அவர்களின் காலத்தில் அடம்பிடித்த அமெரிக்கா இன்று வடகொரியாவுடனும் தேனிலவு கொண்டாடுகின்றது.

தலிபான்களுடன் பின்கதவால் பேசுகின்றது. ஈரானின் பக்கமும் திரைமறைவில் ஒலிவ் இலைகளை நீட்டுகின்றது. இப்படியே போனால் பொறிஸ் யயல்சினின் காலத்தில் ரசியா சரிந்து வீழ்ந்தது போல் அமெரிக்காவும் தலை
குப்புற விழுந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.

இந்துமா சமுத்திரத்தில் இன்று இராணுவ ரீதியில் அமெரிக்காவிற்குத் தலையிடியாக விளங்குவது சீனா. அசுர வேகத்தில் மேலெழுந்து வரும் சீனாவின் கடற்படை, எதிர்காலத்தில் இந்துமா சமுத்திரத்தைத் தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கும் என்று அமெரிக்கா அஞ்சுகின்றது.

ஐ.நா. பாதுகாப்புப் பேரவையில் வீற்றோ எனப்படும் தடுப்பாணை அதிகாரம் பெற்ற பேரரசு நாடுகள் என்ற கோதாவுடன் பிரித்தானியாவும், பிரான்சும் வலம் வந்தாலும், பேரரசுகளுக்கான பலத்துடன் இவை இரண்டும் இல்லை என்பதே யதார்த்தம். இந்நிலையில் இந்துமா சமுத்திரத்தின் இராணுவ விவகாரங்களில் அமெரிக்காவுடன் கைகோர்த்து நிற்பதைத் தவிர இவற்றுக்கு வேறு வழியில்லை.

அதிலும் சீனாவின் இராணுவ ரீதியிலான எழுச்சி என்றோ ஒரு நாள் மேற்குலகின் முதலாளித்துவ திறந்தவெளி வாணிபத்திற்கு இடையூறாக அமையும் என்பது இவ்விரு நாடுகளுக்கும் தெரியும். இதுவும் அமெரிக்காவுடன் இவை கைகோர்ப்பதற்கு காரணமாகும்.

இந்தியாவின் நிலைமையும் இதே தான். இந்திய உபகண்டத்தில் உள்ள தனது சுற்றுவட்ட நாடுகளை அதட்டித் தன்னைத் தென்னாசியப் பிராந்தியத்தின் வல்லரசாக இந்தியா நிலைநிறுத்திக் கொள்ள முற்பட்டாலும் கூட, சீனாவின் இராணுவ - பொருண்மிய பலத்திற்கு ஈடுகொடுக்க முடியாத நிலையிலேயே இந்தியா இருக்கின்றது.

அக்சாய் சின் பிராந்தியத்தையும், அருணாச்சல் பிரதேசத்தையும் தனது நில ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளாக நீண்ட காலமாக உரிமைகோரி மிரட்டல் இராசதந்திரித்தில் ஈடுபடும் சீனாவை புறந்தள்ளி விட்டு வாணிபம் செய்ய முடியாத கையாலாக நிலையிலேயே இன்றும் இந்தியா உள்ளது.

இவ்வாறான பின்புலத்தில் சீனாவின் இராணுவ பலத்துடன் தனது இராணுவ பலத்தைச் சமப்படுத்திக் கொள்வதற்கு அமெரிக்காவின் அரவணைப்பு இந்தியாவிற்குத் தேவைப்படுகின்றது.

ஒட்டுமொத்தில் நீ எனது முதுகைச் சொறி, நான் உனது முதுகைச் சொறிகிறேன் என்ற நிலையிலேயே அமெரிக்காவுடன் இன்று இந்தியா ஒட்டி உறவாடுகின்றது எனலாம்.

எது எப்படியோ, இந்தியாவும் சரி, அமெரிக்காவும் சரி, ஏனைய மேற்குலக நாடுகளும் சரி இன்று ஈழத்தீவின் ஆட்சியதிகாரத்தில் தமக்கு முற்றாகக் கட்டுப்படக்கூடிய ஒருவர் அமர்ந்திருப்பதையே விரும்புகின்றன என்பதே யதார்த்தமாகும். இதில் வேடிக்கை என்னவென்றால் ரணில் விக்கிரமசிங்கவையும், கரு ஜெயசூரியவையும் தவிர தமக்குப் பரிவட்டம் கட்டக்கூடியவர் என்று இந்தியாவும் சரி, மேற்குலகமும் சரி நம்பிக்கை கொள்வதற்கு வேறு யாரும் இல்லை என்றே கூற வேண்டும்.

இவர்களுக்கு அடுத்தபடியான மூன்றாவது தெரிவாகவே சஜித் பிரேமதாசா திகழ்கின்றார்.

இப்பொழுது சிங்கள தேசத்து அதிபர் தேர்தலில் இரா.சம்பந்தர் அவர்களின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் தமிழ் மக்கள் கூட்டணியும் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்று பார்ப்போம்.

சஜித் பிரேமதாசாவுடன் ஓடும், புளியம் பழமுமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடந்து கொண்டாலும், அவர்கள் ஒட்டி உறவாடுவது ரணில் விக்கிரமசிங்கவுடன் தான். தமிழீழ தாயகத்தில் ஆயிரம் பெளத்த விகாரைகள் எழுப்பப்பட்டால் என்ன? நீராவியடிப் பிள்ளையார் கோவிலும், கன்னியா விநாயகர் ஆலயமும் இடிக்கப்பட்டு அங்கு புத்தர் குடியேறினால் என்ன? தமிழரின் இதயபூமியாகிய மணலாறு சிங்கள மயப்படுத்தப்பட்டால் என்ன? இந்
தியாவும், மேற்குலகமும் விரும்பும் ரணிலை கொலுவிருக்க வைப்பதிலேயே இவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள்.

111

இதனையே அண்மைக் காலமாகத் தமிழீழ தாயகமெங்கும் சுற்றிச் சுழன்று ரணிலிற்கு ஆதரவாக மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரன் அவர்கள் மேற்கொண்டு வரும் மேடைப் பேச்சுக்கள் பட்டவர்த்தனமாக்குகின்றன.

மறுபுறத்தில் வெளிப்படையாக ரணிலை ஆதரிக்காது விட்டாலும், மறைமுகமாக அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டையே சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் எடுத்துள்ளார். அதாவது 20.10.1982 அன்று நடைபெற்ற சிங்கள தேசத்தின் முதலாவது அதிபர் தேர்தலில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி எடுத்த கபடத்தனமான நிலைப்பாட்டிற்கு நிகரான நிலைப்பாட்டையே இப்பொழுது விக்னேஸ்வரன் அவர்கள் எடுத்துள்ளார்.  

அமிர்தலிங்கத்தின் இந்நிலைப்பாட்டிற்கு எப்படியான பதிலடியைத் தமிழீழ தேசியத் தலைவர் கொடுத்தார் என்பதை அடுத்த தொடரில் பார்க்கலாம்.

(தொடரும்)

நன்றி: ஈழமுரசு

முன்னைய தொடர்கள்:

பாகம் - 1