"சினம் கொள்" ஈழத் தமிழனின் அற்புதமான படைப்பு!!!

வியாழன் ஓகஸ்ட் 08, 2019

அமுதன் முன்னாள் போராளி. எட்டுவருட சிங்கள அரசின் தடுப்பின் பின் பெரும் போர்களைக் கண்ட கிளிநொச்சி மண்ணில் காலடி பதிக்கிறான். தங்குவதற்கு இடமும் ஆதரிப்பதற்கு யாருமற்று அலைந்து திரிபவனை ஆறுதல் கரமொன்று தோள் தடவுகிறது...

ஆம் அவரும் முன்னாள் பெண் போராளியான யாழினி என தெரிகின்றது.

லொத்தர் சீட்டுக்களை விற்று தன் வயிற்றைக்காக்கும் மாலதி படையணி போராளியான யாழினியின் வரவின் பின்பு கதை விரிந்து, அமுதன் கைது செய்யப்படும்போது அவருக்கு ஆனந்தி எனும் போராளி மனைவியும் வயிற்றில் குழந்தையும் உண்டென்பதும் அவர் அதாவது ஆனந்தி எங்கு வாழ்கிறார் என அமுதன் தேடுவதுமாக கதை நகர்கிறது...

பிறந்த குழந்தை என்ன எப்படி என்பதை அறியத்துடிக்கும் பேராவல் ஒருபுறம், மனைவியைக் காணும் ஆவல் என அந்த முன்னாள் போராளியின் தேடல் திரை நுனிக்கு எமை இழுத்துச்செல்லும் திரையாக்கம் அற்புதம்.

111

கைதடியில் மனைவி வாழ்வதாக கேள்விப்பட்டு அங்கு செல்லும் அமுதன் தனக்கு பிறந்தது பெண்குழந்தை என அறிந்து பேரானந்தப்படும் அவன் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. காரணம் ஆனந்தி அங்கிருந்து வேறொரு இடம் நகர்ந்தது.

ஆனந்தி வாழ்ந்த அந்த வீட்டிலேயே தங்கும் அமுதன் அங்கிருந்தபடியே தனது மனைவி யாழ் ராசபாதையில் தோட்டமொன்றில் கூலிவேலை செய்வதை அறிந்து அங்கே விரைகிறான். அங்கே தனது மனைவியையும் குழந்தையையும் ஒருசேரக்கண்ணுற்ற அமுதனை அடையாளம் காண்கிறாள் ஆனந்தி.

இந்த இடத்தில் ஓராயிரம் தென்னிந்தியத் திரைப்படங்கள் தராத உணர்வை அந்தக்காட்சி எமக்குத்தருவது நேரில் பார்த்தால் மட்டுமே உணரமுடியும்.

இப்போது அந்தப்போராளி தனது குடும்பச்சுமை போக்க பல்வேறு கூலி வேலைகளுக்கு போகிறான். இறுதியில் நண்பனொருவனின் ஏற்பாட்டில் வாடகை மகிழுந்து (டாக்சி) ஓடும் வேலைக்கு செல்கிறான்.

இங்கே இன்னொரு உபகதை விரிகிறது.

111

அதாவது புலம்பெயர் தேசமொன்றில் புலிகளின் சொத்துக்களை கையாண்ட நபர் ஒருவர் தனது குடும்பத்தோடு தனது மகளின் திருமணத்திற்காக வந்து நிற்கிறார். இந்த நேரம் மாலதி படையணியின் போராளியான யாழினிக்கு புற்றுநோய் வந்து மருத்துவமனையில் உள்ளார். அவரின் வைத்தியச் செலவுக்கு அமுதன் இந்த புலம்பெயர் நபரிடம் பணம் கேட்கிறான்.

அவரோ அந்த துன்பமயமான நேரத்திலும் இயக்கத்தின் உரியவர்கள் வந்தால்தான் தான் உதவிசெய்வேன் எனும் இயக்கப்பணத்தை கொள்ளையடித்தவர்களுக்கேயுரிய மழுப்பல் பதிலை சொல்கிறார்.

நிற்க...
இந்த நேரத்தில் தான் அந்த ஐந்து நட்சத்திர விடுதியில் அந்த புலம்பெயர் நபரின் மகள் அமுதனின் வாடகை மகிழுந்தில் ஏறுகிறார். புகையிரதக் கடவையயான்றில் தரித்து நிற்கும் நேரம் பார்த்து யாழின் வன்முறைக்கும்பலொன்று அந்த மகிழுந்தில் ஏறி அந்தப்பெண்ணை துப்பாக்கி முனையில் கடத்தி விடுகிறது.

இதையறிந்த அந்தப்பெண்ணின் தந்தையான புலம்பெயர் நபர் தன்னிடம் யாழினியின் மருத்துவச் செலவுக்கு பணம் கேட்ட அமுதனே தனது மகளை கடத்தியதாக சிறீலங்கா காவல்துறையில் புகார் அளிக்கிறார்.

போராளிகள் மீது புகாரென்றால் சிறீலங்கா காவல்துறைக்குச் சொல்லவா வேண்டும்..? அமுதனை வலைபோட்டு தேடுகிறது காவல்துறை. அவன் மனைவி ஆனந்தி மற்றும் நண்பர்களான முன்னாள் போராளிகளும் கைது செய்யப்படும் நிலையில், 

சரணடைய நினைக்கிறான் அமுதன். ஆனாலும் நிலைமையின் விபரீத்த்தை அறிந்த அமுதனோடு முன்பு கூலிவேலை செய்த தமிழ்நாட்டு உறவொன்று அமுதனை சரணடைய வேண்டாமென தடுக்கிறார்.

உண்மையான கடத்தல்காரனை தேடுமாறும் அறிவுரை சொல்கிறார். இப்போது வேகமெடுக்கும் திரைக்கதை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதது.

யாழின் ஒடுக்கமான பகுதியயான்றில் அந்த கடத்தல் கும்பல் ஒழிந்திருப்பதை அறியும் அமுதன் அதிலொருவனை மடக்கிப்பிடித்து அந்தக்கூட்டத்தின் செயற்பாடுகளை அதாவது பெண்களை கடத்தி பணம் பறிக்கும் செயற்பாடுகளை கண்டுபிடிக்கிறான்.

கவுதாரிமுனை வழியாக அந்தப்பெண் கடத்தப்படுவதை தடுக்க உள்ளூர் மீனவத்தமிழர்கள் அமுதனுக்கு உதவி செய்வதாக உறிதியளிக்கின்றனர். இதனிடையே சிகிச்சை பலனின்றி மாலதி படையணிப் போராளி யாழினியின் சாவு அமுதனை மட்டுமல்ல பார்வையாளர்களையும் உலுப்பி விடுகிறது.

எமது இனத்தின் விடுதலைக்காக போராடிய மறவர்கள் நோயுற்று வீழும் வலி இந்த நூற்றாண்டின் பெரும் சோகம் என்பதை திரைப்படம் ஆழமாகப்பதிவு செய்கிறது.

இப்போது கடற்கரை களமுனை அந்தப்பெண் படகு வழியாக கடத்தப்படுவதற்காக கவுதாரிமுனை இழுத்து வரப்படுகிறாள். சிறீலங்கா காவல்துறை ஒருபுறம் அமுதனை தேடும் தீவிரம். உள்ளூர் தமிழர்களும் அமுதனும் கடலை முற்றுகையிடுகிறார்கள். அந்தப்பெண் பிள்ளை காப்பாற்றப்பட்டு அவள் தந்தையிடம் கையளிக்கப்படுகிறாள்.

இறுதியில் பணமுதலையான அந்த புலம்பெயர் தந்தை போராளியான அமுதனிடம் மனம் வருந்தி மன்னிப்பு கோருகிறார்.

111

இதற்கிடையில் அமுதனின் ஒரே பெண் குழந்தைக்கு இறுதிப்போரின்போது வீசப்பட்ட குண்டொன்றின் இரும்புத்துண்டொன்று தலைக்குள் இருப்பதால் அவள் வளரவளர அந்த அது உயிருக்கே ஆபத்தானது என மருத்துவர் சொல்வதும் அதை அகற்ற பணமின்றி அமுதன் படும் வேதனை இன்றைய வாழும் எமது மக்களின் போராளிகளின் வலியை அழுத்திச்சொல்கிறது திரைக்கதை.

இறுதிக்காட்சியில் அந்த புலம்பெயர் குடும்பம் அமுதனைக்காண அவனின் வீட்டிற்கு வருகிறது அங்கே அமுதனின் இறந்த உடலையே காணுகின்றனர்.

ஆம் தடுப்பின் பின்னரான காலப்பகுதியில் பல போராளிகள் திடீர்திடீரென சாவடையும் பேருண்மையை படம் அடித்துச்சொல்கிறது.

இப்படத்தின் கதை, திரைக்கதை அதை திரைவடிவம் கொடுத்த நேர்த்தி என இயக்குநர் றஞ்சித் ஜோசப் ஈழத்தின் முதல்தர இயக்குநர் என போற்றுவதில் தவறேதுமில்லை.

படத்தொகுப்பு மிக நேர்த்தி, இசை உயிரூட்டுகிறது படத்திற்கு.

111

அமுதன், யாழினி, ஆனந்தி என அத்தனை முகங்களும் எமது மாண்புமிகு முன்னாள் போராளிகளை கண்முன்னே கொண்டுவரும் அற்புதக்கலைஞர்கள்.

மற்றும் படத்தின் அனைத்து பாத்திரங்களும் தென்னிந்திய நடிகர்களுக்கு சற்றும் சளைத்தவர்களல்ல என சத்தியம் செய்யலாம். வசனங்கள் தீபச்செல்வனுடையது நெருப்பெரியும் வசனங்கள்.

உதாரணம் - மதுரையை எரித்த கண்ணகி நந்திக்கடலில் வந்து கோபம் தணிந்ததாக கதை உண்டு. இதே நந்திக்கடலில் இருந்து ஒரு கண்ணகி எழுவாள் அவளின் கோபத்தை எவராலும் அடக்க முடியாது..!
இப்படிப்பல அற்புதங்கள் நிறைந்த முழுநீள எமக்கான ஈழத்திரைப்படம் இதுவே..!

தமிழனே சினம்கொள்..!

-கிருபா-

நன்றி: ஈழமுரசு