‘சிறீலங்கா அதிபர் தேர்தலை முற்றாகப் புறக்கணிப்போம்’ – இலண்டனில் கஜேந்திரகுமாரிடம் முன்னணி தமிழ் வளவாளர்கள் வலியுறுத்தல்!

வெள்ளி செப்டம்பர் 06, 2019

சிறீலங்கா அதிபர் தேர்தலைத் தாயகத்தில் உள்ள தமிழர்கள் முற்றாகப் புறக்கணிப்பதே இன்றைய பூகோள அரசியல் சூழலில் தமது அரசியல் உரிமைகளைத் தமிழர்கள் வென்றெடுப்பதற்கு வழிகோலும் என்று பிரித்தானியாவில் இயங்கும் முன்னணி தமிழ் ஊடகவியலாளர்கள், அரசறிவியலாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், வலைப்பதிவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Gajen2

 

பிரான்சைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் ஊடக மையத்தின் பிரித்தானியக் கிளையின் அனுசரணையில் கடந்த 05.09.2019 வியாழக்கிழமை பிரித்தானியாவில் இயங்கும் தமிழ் வளவாளர்களுக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.

 

Gajen3

 

இதன்பொழுது தாயக மற்றும் தென்னாசியாவின் பூகோள அரசியல் தொடர்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடன் ஆழமான கருத்தாடல்களை மேற்கொண்ட முன்னணி தமிழ் வளவாளர்கள், சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தலை முற்றாகப் புறக்கணிப்பதன் ஊடாகவே தமது அரசியல் அபிலாசைகளை அனைத்துலக சமூகத்திற்குத் தமிழர்கள் இடித்துரைக்க முடியும் என்று ஆணித்தரமாகக் கருத்து வெளியிட்டனர்.

 

கோத்தபாய ராஜபக்சவாக இருந்தாலும் சரி, ரணில் விக்கிரமசிங்கவாக இருந்தாலும் சரி, சஜித் பிரேமதாசாவாக இருந்தாலும் சரி, அனுரகுமார திசநாயக்காவாக இருந்தாலும் சரி, அதிபர் தேர்தலில் எந்தவொரு சிங்கள வேட்பாளர் வென்றாலும் அது தமிழர்கள் மீதான இனவழிப்புத் தொடர்வதற்கும், தமிழர் தாயகம் கபளீகரம் செய்யப்படுவதற்குமே வழிகோலும் என்றும் இதன்பொழுது தமிழ் வளவாளர்கள் சுட்டிக் காட்டினர்.

 

வல்லாதிக்க சக்திகளின் கைப்பொம்மைகளாகச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பதின்மூன்றாம் திருத்தச் சட்டம் என்ற மாயைக்குள் தமிழ் மக்களை இட்டுச் சென்று தமிழ்த் தேசியப் பிரக்ஞையை மழுங்கடிக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டிக்கும் நிலையில், தேர்தல் புறக்கணிப்பைத் தமிழர்கள் தாயகத்தில் சாத்தியப்படுத்துவதன் மூலம் இன்றைய பூகோள அரசியல் சூழலைத் தமது பக்கம் தமிழர்கள் திருப்புவதற்குத் தமிழ்த் தேசிய முன்னணி வழிவகை செய்ய முடியும் என்றும் தமிழ் வளவாளர்கள் மேலும் எடுத்துரைத்தனர்.