சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது, விக்கினேஸ்வரன் குற்றச்சாட்டு

திங்கள் மே 18, 2020

தெற்றில் போர் வெற்றிவிழா கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ள அரசாங்கம், இங்கே போரில் உயிரிழந்த உறவுகளுக்கு ஒரு தீபத்தைக்கூட ஏற்றவிடாமல் தடை போட்டிருக்கின்றது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது'

இவ்வாறு, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சிறிலங்கா அரசாங்கத்தை  குற்றம்சாட்டியுள்ளார். 

இறுதி யுத்தத்தின்போது படையினரால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு இன்று (18) முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நடைபெறவுள்ளது. 

இதற்காக இன்று காலை யாழ்ப்பாணத்தில் இருந்து முள்ளிவாய்க்காலுக்கு விக்கினேஸ்வரன் தலைமையிலான அவரது கட்சி உறுப்பினர்கள் மூன்று கார்களில் சென்றுகொண்டிருந்தனர். சங்குப்பிட்டி பாலத்தில் வைத்து படையினரால் வழிமறிக்கப்பட்ட அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். 

திரும்பி வந்தபோது ஊடகவியலாளர்களிடம் கருத்து  தெரிவிக்கையிலேயே விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் மேலும் கூறுகையில், அரசாங்கம் எல்லாவற்றையும் அரசியலாகவே பார்க்கின்றது. இதனாலேயே இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளவிடாமல் நாங்கள் திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றோம். 

இதேபோன்ற ஒரு நிலைதான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களை தெற்கில் நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ள அரசு, அந்த யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு நாம் தீபம் ஏற்ற அனுமதி மறுத்திருக்கின்றது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. – என்றார். 

இதேவேளை, போரில் உயிரிழந்த உறவுகளுக்கு செம்மணியில் தீபமேற்றி அஞ்சலி செய்வது தொடர்பாக தாம் சிந்திக்கின்றனர் எனவும் விக்கினேஸ்வரன் கூறினார்.