சிறிலங்கா பௌத்த நாடு, சீனாவில் முழங்கினார் ஜனாதிபதி மைத்திரி...

புதன் மே 15, 2019

சிறிலங்கா 2600 வருடங்களுக்கு மேற்பட்ட பௌத்த நாகரிகத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டிக்கின்றது எனவும் எந்தவொரு இனத்திற்கும் இங்கு அச்சுறுத்தல் இல்லை எனவும் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார். 

மேலும், சமய தீவிரவாதத்தினால் உருவாகும் பயங்கரவாதம் உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு அனைத்து நாடுகளும் நட்புறவுடன் கைகோர்க்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்திருக்கின்றார். 

சீனாவின் பீஜிங் நகரில் இன்று (15) முற்பகல் ஆரம்பமான ஆசிய நாகரிகங்கள் பற்றிய சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் தலைமையில் இன்று முற்பகல் பீஜிங் நகரில் ஆரம்பமானது. அம்மாநாட்டில் விசேட விருந்தினராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டார்.

47 நாடுகளின் அரச தலைவர்கள் உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர். 

'உலகளாவிய ரீதியில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கும் மனித இனத்தின் இருப்புக்காக உலக மக்கள் மத்தியில் பரஸ்பர நம்பிக்கையையும் கௌரவத்தையும் பாதுகாக்கும் நோக்குடன் ஆசிய நாகரிகங்கள் பற்றிய விரிவாக கருத்துக்களை பரிமாறிக்கொள்ளுதல்' என்பது இந்த மாநாட்டின் நோக்கமாகும். இம்மாநாடு மே 22ஆம் திகதி வரை நடைபெறும்.

இங்கு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, 

ஒரு நாகரிகத்தை மற்றுமொரு நாகரிகத்தினால் அடிமைப்படுத்த முடியாது. நாகரிகத்தையும் கலாசாரத்தையும் சட்டத்தினால் அல்லது சர்வதேச கட்டளையினால் அடிமைப்படுத்த முடியாது. 

சிறிலங்காவின் நாகரிகம் 2600 வருடங்களுக்கு மேற்பட்ட பௌத்த நாகரிகத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றது. சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், மலேயர், பறங்கியர் ஆகிய இனங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பௌத்தம், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமயங்களை சேர்ந்தவர்கள். 

எந்தவொரு நாட்டுக்கும் எந்தவொரு இனத்திற்கும் எந்தவொரு நாகரிகத்திற்கும் அல்லது கலாசரத்திற்கு அச்சுறுத்தலாக இல்லாத வகையில் சுதந்திரமாகவும் அமைதியாகவும் செயற்பட்டுவரும் ஒரு நாடு என்ற வகையில் இலங்கையின் நாகரிகம் மற்றும் கலாசாரத்திற்கு மறைமுகமான சக்திகளினால் விடுக்கப்படும் சவால்களின்போது அனைவரும் ஒருமித்து கைகோர்க்க வேண்டும். – என்றார்.