சிவாஜிலிங்கத்திற்கு வாக்களியுங்கள்!

சனி நவம்பர் 02, 2019

இந்து கோயில்களுக்குள் பௌத்த துறவிகள் உடல் தகனம் செய்யாமல் இருக்க சிவாஜிலிங்கத்திற்கு வாக்களியுங்கள் எனத் தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் தெரிவித்தார்.

நேற்று வவுனியாவில் காணாமல் போன உறவுகள் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

நாங்கள் 986  ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். நேற்றைய தினம் தேர்தல் கண்காணிப்பாளர்கள் எமது போராட்ட களத்திற்கு வந்திருந்தார்கள்.  தமிழ் மக்களை மீன் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி நாங்கள் கூறுகின்றோம். தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் புருஷோத்தமன் படுகொலை செய்யப்பட்ட  நினைவு நாளான நேற்று நாங்கள் ஒரு ஊடக அறிக்கையை வெளியிடுகிறோம்.

நாங்கள் ஒரு போதும் சிங்கள மக்களுக்கு எதிராகப் போராடவில்லை, தமிழர்களை அழித்தவர் களுக்கும் , சிங்கள அடிப்படைவாதிகளுக்கும் தமிழர்கள் ஒருபோதும் வாக்களிக்கமாட்டார்கள். ஒன்றுபட்ட ஒருமித்த நாட்டுக்குள் ஐக்கியராச்சிய தீர்வையே சஜித் பிரேமதாஷவின் தேர்தல் விஞ்ஞாபனமாக உள்ளது. மாகாணங்களுக்கு அதிகார பரவல் என்பது  பொய்,  சிங்களவர்களே சிங்களவர்களை ஆட்சிபுரிகின்ற நாட்டில் சிங்கள மாகாணங்களுக்கு எதற்கு அதிகாரம், வடக்கு,கிழக்கு தமிழர் தாயகம் எனக் காட்ட  மீன் சின்னத்திற்கு வாக்களியுங்கள். தமிழர்களைப் பாதுகாக்கத் தமிழ் வேட்பாளர்களுக்கே வாக்களியுங்கள். 

இந்து கோயில்களுக்குள் பௌத்த துறவிகள் உடல் தகனம் செய்யாமல் இருக்க சிவாஜிலிங்கத்திற்கு வாக்களியுங்கள், தமிழ் வேட்பாளர்களுக்குச் சிங்கள மக்கள் சிங்கள மக்கள் வாக்களிக்காத போது தமிழர்கள் மட்டும் ஏன் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்,  அவர்கள் செய்த இன அழிப்பையும், போர்க்குற்றங்களையும் சர்வதேசத்திற்குக்காட்டி எமக்கான சுதந்திரத்திற்கு உலக நாடுகளின் ஆதரவைப் பெறுவோம் எனத் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெவனிதா தெரிவிக்கையில்,

நாங்கள் 986ஆவது நாளாகப் போராட்டத்தை மேற்கொள்கிறோம். சஜித் பிரேமதாஷ கூறியிருக்கிறார்  ஓ.எம்.பி அலுவலத்தை நான் வரவேற்கிறேன் என, ஆனால் நாங்கள் கூறியிருக்கிறோம் ஓ.எம்.பி அலுவலகம் எங்களுக்கு வேண்டாம் என்று,  ஓ.எம்.பி அலுவலகம் முதல் அமர்வில் தெரிவித்தது,

காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்துத் தரமாட்டோம் என்றும், குற்றம் செய்தவர்களுக்கும் தண்டனை கொடுக்க மாட்டோம் எனவும் எமக்குத் தெரிவித்தது,  அதனால் ஓ.எம்.பி அலுவலகம் எமக்குத் தேவையில்லை எனக் கூறியிருக்கும் நிலையில் கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி தாம் எட்டு மாவட்ட  சங்கம் எனக் கூறி  ஐந்து பெயர்பட்டியல்களை ஓ.எம்.பி அலுவலகத்திடம் ஒப்படைத்திருக்கின்றார்கள்.

நாங்கள் அவர்களிடம் எதுவும் கேட்கவில்லை, எங்களுடைய பிள்ளைகளையே கண்டுபிடித்து தரும்படியே கேட்டு போராட்டம் செய்கிறோம். நாங்கள் ஓ.எம்.பி அலுவலகத்தை தேவையில்லை எனக் கூறியும் அவர்கள்  தகவல்களைக் கொடுத்ததனை வன்மையாகக் கண்டிக்கிறோம். போராட்டத்தில் இருக்கும் அப்பாவி தாய்மார்களை ஏமாற்றி  இந்த வேலைகளைச் செய்கிறார்கள். இந்த தலைவியை வேறொருவரே வழிநடத்துகிறார்கள்.

 

நாங்கள் கிளிநொச்சிமாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோரிற்குச் சொல்வது பிழையான வழிக்குப் போக வேண்டாம் என்றும், ஓ.எம்.பி அலுவலகம் வேண்டாம் என்பதுமே.

எமக்கு இலங்கை அரசாங்கம் எப்போது தீர்வு தரும். நாங்கள் எங்கள் பிள்ளைகளை எப்போ காண்பது? அதனால் நாங்கள்  சர்வதேசத்தை மட்டுமே கேட்டுக்கொண்டு இருக்கிறோம். எம் பிள்ளைகளை அவர்களே விசாரணைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.  எம் பிள்ளைகளை மீட்டுத்தரவேண்டும்  என்று கேட்கிறோம்.

காணாமல் போன உறவுகளில் ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

நாங்கள் தொடர்ச்சியாகவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் எங்களுக்கு எந்த விதமான தீர்வும் கிடைக்கப் பெறவில்லை . எங்கட போராட்டத்தை நிறுத்துவதற்குப் பலர் முயற்சிக்கிறார்கள். எமக்காகத் தமிழ் வேட்பாளர்கள் வந்திருக்கிறார்கள் அவர்களுக்கு வாக்களியுங்கள்,போராட்டத்தையும் வலுவடையச் செய்து எங்களை வெற்றி பெறச் செய்வதற்கு மீன் சின்னத்திற்கு வாக்களிப்போம் எனத் தெரிவித்தார்.