சஜித்தை களமிறக்குமாறு வலியுறுத்தல்!

புதன் ஓகஸ்ட் 14, 2019

“மக்களால் கோரப்படும் வேட்பாளரைக் களமிறக்கி ஜனாதிபதித் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டியிலுள்ள அலுவலகத்தில் நேற்று மாலை (13) நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையின மக்களே தீர்மானிக்கும் சக்தி என்பதால் நாம் அனைவரும் விழிப்பாகவும், பொறுப்புணர்வுடனும் செயற்படவேண்டிய காலகட்டம் இது. கடந்துவந்த  பாதையை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. 

ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த, மக்களால் கோரப்படும் வேட்பாளரை இந்த தடவை களமிறக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம். இன, மத,  மொழி, குல பேதங்களுக்கு  அப்பால் அனைத்து மக்களுக்கும் தான் சிறப்பாக சேவைகள் வழங்கக்கூடிய அரசியல்வாதி என்பதை சஜித் பிரேமதாச செயற்பாடுகள் மூலம் நிரூபித்துள்ளார். 

இதனால்தான் ‘சஜித் வேண்டும்’ என மக்கள் கேட்கின்றனர். மக்கள் கோரிக்கைக்கு செவிமடுத்து சஜித்தை களமிறக்கினால் வெற்றியை நோக்கி பயணிக்ககூடியதாக இருக்கும்.” என்று கூறியுள்ளார்.