சர்வதேச நாடுகளின் தேவைகளுக்கு ஏற்ப இலங்கையின் இறைமை விட்டுக்கொடுக்கப் போவதில்லை!

வெள்ளி நவம்பர் 01, 2019

இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கண்டியில் வெளியிட்டார்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச, அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களிடமே தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை முதலில் கைளித்தார்.

இலங்கையில் அனைத்து மாகாணங்களுக்கும் அதிகாரப் பரவலாக்கலை உறுதிப்படுத்துவதே அரசியல் தீர்வு என்று அந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் பௌத்த சமயத்துக்கான முன்னுரிமை, இலங்கை ஒற்றையாட்சி அரசின் இறைமை ஆகிவற்றை மேலும் உறுதிப்படுத்தல் முக்கியமானதென்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் எந்தவொரு கட்சியோடும் உடன்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் இலங்கையின் இறைமைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் உடன்படிக்கைகள் எதிலும் கைச்சாத்திடப்போவதில்லை எனவும் சஜித் பிரேமதாச கூறினார்.

அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளோடும் இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளோடும் உறவுகளைப் பேணும் வகையில் புதிய வெளியுறவுக் கொள்கை ஒள்றை வகுக்கவுள்ளதாகவும் சஜித் பிரேமதாச கண்டியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

தேர்தல் விஞ்ஞாபனத்தைக் கையளித்த பின்னர். கண்டி மகாநாயக்கத் தேரர்களுக்கு உறுதியளித்த சஜித் பிரேமதாச, சர்வதேச நாடுகளின் தேவைகளுக்கு ஏற்ப இலங்கையின் இறைமை தன்னாதிக்கத்தை விட்டுக்கொடுக்கப் போவதில்லை எனக் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். மைத்திரி ரணில் அரசாங்கத்தில் வீடமைப்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்துக் கொண்டிருக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாச, வடக்குக் கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்ட புதிய வீடமைப்புத் திட்டங்கள் அனைத்திலும் பௌத்த சின்னங்களைப் பொறித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.