"எல்லம்" மருவி ஈழம் ஆனது. சைவமும் தமிழும் தவழ்ந்தது திருகோணமலை

ஞாயிறு ஜூன் 02, 2019

சிங்களவர்கள் இலங்கைக்கு முதன் முதலில் வந்தார்கள் (கி.மு 545) என்பதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். அனால் அவர்கள் வரும்போது நாங்கள் அங்கே (கி.மு 2387) இருந்தோம். வந்தாரை வரவேற்கும் தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படியில் அவர்களையும் வரவேற்றோம் என்பது தான் உண்மை.

இற்றைக்கு 4500 ஆண்டுகளுக்கு முன்பு தென் குமரி நாட்டின் ஒரு பகுதியாகவே இலங்கை இருந்தது. தென் குமரிநாட்டினை ஆண்டவன் "நிலந்தரு திருவிற் பாண்டியன்" என்று தொல்காப்பியம் சொல்கிறது. இவனை தென்றிசை ஆண்ட தென்னவன் என்று சிலப்பதிகாரம் சொல்கிறது அத்துடன் நெடியோன் என்று புறநானூற்றிலும் சொல்லப்படுகிறது. இந்த தென் குமரிநாடு ஏழு நாடு மற்றும் மூநாடு என இரு பிரிவுகளாக இருந்தது. இந்த ஏழ்நாட்டினை ஆண்ட காரணத்தால் நெடியோனிற்கு ஏழ்வாணன் என்ற பெயரும் இருந்தது.

முதலாவது கடற்கோளினால் குமரிநாடு அழிந்து போக மக்கள் வடக்கு , கிழக்கு மற்றும் மேற்கு சென்று குடியேறினார்கள். எஞ்சிய நிலப்பரப்பினை கட்டியெழுப்பி ஒளிவீசும் நாடக மாற்றிய பெருமை ஏழ்வாணனையே சாரும். இப்படியான செல்வச்செழிப்பு , பண்பாட்டு சிறப்பும் மிக்க நாட்டினை ஒளிமிகு நாடென்றும் , "எல்லம்" ( எல் என்றால் ஒளி எனப் பொருள்படும்) , என்றும் பின்னர் இலங்கை என்றும் அழைத்தார்கள். "எல்லம்" மருவி ஏழம் என்றும் பின்னர் ஈழம் என்றும் ஆகியது என்று திருகோணாசல வைபவம் எனும் நூலில் 1889 ஆண்டு சிவத்திரு.வே.அகிலேசபிள்ளை அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.

வடமொழியில் "எல்" என்றால் இருள் என்று பொருள். தென்தமிழ் மக்களையும் அவர்கள் தொன்மிய பண்பாட்டினையும் வெறுத்த ஆரியர் ஏழ்வாணனை , இருளை (எல்) ஆள்பவன் அதாவது "இராவணன்" என்று அழைத்தனர். இவன் தான் எங்கள் சைவத்தமிழ் மன்னன் சிவபக்தன் இராவணன்.இலங்கையின் வரலாற்று நூல்களில் ஒன்றான "இரசாவளி" எனும் நூலில் துவாபர யுகத்தில் (கி.மு 2387) இலங்கையை இராவண மன்னன் ஆண்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.இப்படிப்பட்ட தொன்மையை வரலாற்றினை மழுங்கடிக்க ஆரியம் செய்த நாடக வேடம் தான் இராமாயணத்தில் வரும் இராவணன். எங்கள் அரசனை இழிந்தவனாக காட்டி எங்கள் வரலாற்றினை அழிப்பதே அவர்கள் நோக்கமாக இருந்திருக்கும் என எண்ண தோன்றுகிறது.

இராவணன் ஒரு சிவபக்தன். இலங்கையில் பல சிவாலயங்களை கட்டினான். 1008 லிங்கங்களை வைத்து வழிபட்டான். இராவணன் கட்டிய சிவாலயங்களில் ஒன்று தான் எங்கள் திருகோணமலையில் வீற்றிருக்கும் கோணமாமலை அமர்ந்த தென்னாடுடைய சிவபெருமான். இதே இராவணன் தனது தாயாரின் அந்தியேட்டி செய்வதற்கு வெட்டிய கிணறுகள் தான் எங்கள் கன்னியா வென்னீரூற்று. இவை கிட்டதட்ட இற்றைக்கு 6000 ஆண்டுகளுக்கு முந்தியது.

கடல் கோளினால் அழிக்கப்பட்ட தென் குமரி இராச்சியத்தில் இராவணனின் கோட்டையும் , மாளிகைகளும் அழிந்துபோயின. அத்துடன் மன்னாருக்கும் தூத்துக்குடிக்கு இடைப்பட்ட பாதைகளும் கடலிலே மூழ்கின. தற்போதைய இந்தியாவில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது உத்தரகோச மங்கை எனும் திருக்கோயில்.இதுதான் உலகின் முதலாவது சிவன் கோவில் என வருணிக்கப்படுகிறது.மிகவும் பழமையான திருக்கோயில். இத்தலத்தின் பழமையை உணர்த்துவதாக "மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது" என்னும் பழமொழி இப்பகுதியில் வழங்குகிறது. மேலும், இத்தலத்தின் வரலாற்றுப் புராணத்தில் இராவணனின் மனைவி மண்டோதரியின் பெயர் குறிக்கப் படுவதாலும்; சுவாமி மூலத்தான மதிலில் உள்ள கல்வெட்டுக்களில் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாலும், இக்கோயிலின் பழைமை புலனாகிறது.

மண்டோதரி (வண்டோதரி) தான் சிவபக்தனை தான் மணம் முடிப்பேன் என்று தவமிருந்து ராவணனை மணம் முடித்தாள். அவளுக்கு குழந்தை பிறக்காது என்று குழந்தை வேண்டி இறைவனை நினைத்துத் தவமிருந்தாள். சிவன் தவத்தினை ஏற்று அவளுக்கு அருள்புரிவதற்கு உத்தரகோசமங்கையில் இருந்து இலங்கை செல்கிறார். அங்கே குழந்தை வடிவில் காட்சி கொடுக்க , இறைவன் தீப்பிழம்பாகி இலங்கை தீ பற்றி எரிகிறது. ஏன் உத்தரகோசமங்கை தீர்த்தத்திலும் , கோவில் சூழலிலும் கூட தீ பரவியது.

எனது சிந்தனை , இதனை தான் இராமாயணத்தில் தூதுவந்த அனுமன் வாலில் இராவணன் தீ மூட்டியதாகவும் அதனால் இலங்கை தீ பிடித்ததாகவும் சித்தரித்து வரலாற்றினை மாற்றுகிறார்களோ என்று எண்ண தோன்றுகிறது. இங்கே வீரம் போர் தந்திரம் அறியாத அரசனாய் இராவணன் ஒரு தூதனை தீ மூடினான் என்று சித்தரிக்கப்படுகிறது.

பின்வரும் பந்தியை கவனிக்கவும் , இங்கே இலங்கை மூதூர் குறிப்பிடப்படுகிறது.

ஆர்கலிசூழ் தென்இலங்கை அழகமர் மண்டோதரிக்கு, அவளுடைய தவத்தை ஏற்றுக் காட்சி தந்தருளப் பெருமான் உள்ளங்கொண்டார். தன்பாலிருந்து ஐம்புலனும் அடக்கி அருந்தவம் புரிந்து வந்த ஆயிரம் முனிவர்களைப் பார்த்து "மண்டோதரிக்கு (வண்டோதரி) அருள் செய்ய யாம் இலங்கை மூதூர் செல்கின்றோம். நீவிர் அனைவரும் இத்தலத்தை விட்டு அகலாது இருப்பீராக! எம்மால் ஒப்படைக்கப்படும் இவ்வேதாகமச் சுவடிகளை கைவிடாது காத்து வருவீராக!.

இலங்கையரசன் இராவணனால் எப்போது எம்திருமேனி தீண்டப்படுகிறதோ, அப்போது அதற்கு அடையாளமாக, இத்திருக்குளத்தின் நடுவே அக்கினிப் பிழம்பு தோன்றும்" என்று வானொலியாக அருள் செய்தார்.

மூதூர் என்று குறிப்பிடப்படுகிறது.

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

இலங்கைக்கு தேவநம்பியதிஸ்ஸ எனும் சிங்கள மன்னன் மூலம் பௌத்தம் கொண்டுவரப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த சிவ தலங்கள் இருந்துள்ளன. இராவணன் எனும் சைவத்தமிழ் மாவீரன் பூசித்த புண்ணிய தலங்கள்


குறிப்பு - சிவத்திரு.வே.அகிலேசபிள்ளை 1889ம் ஆண்டு எழுதிய திருகோணாசல வைபவம் எனும் நூலில் இருந்து குறிப்புகள் எடுக்கப்பட்டவை. நன்றி நூலகம்.

s