எம்.சி.சி. ஒப்பந்தம் குறித்து மங்கள தெரிவித்தது என்ன?

சனி நவம்பர் 02, 2019

மிலேனியம் செலன்ச் கோர்பரேஷன் (எம்சிசி) ஒப்பந்தம்  கைச்சாத்திடப்பட்டதன்  பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னதாக ஒப்பந்தம் பற்றிய  விபரங்கள், மற்றும் நடைமுறைப்படுத்தும் விதம்  உள்ளிட்டவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து  அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளுக்கு அவசியமான உட்கட்டமைப்பு உதவிகளை வழங்கும் நோக்கில் அமெரிக்க காங்கிரசினால் 2004 ஆம் ஆண்டில்  உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் வெளிநாடுகளுக்கான உதவி முகவர் நிலையமே மிலேனியம் செலன்ச் கோர்பரேஷன் (எம்சிசி) ஆகும்.

இதனூடாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளிப்பதோடு  ஊழலுக்கு எதிராக போராடுதல், சிறந்த ஆட்சியை ஸ்தாபித்தல் போன்றவற்றுக்கான உதவி ஒத்துழைப்புக்கள் வழங்கப்படுவதுடன்  குறித்த கால எல்லையும் நிர்ணயிக்கப்படும். 

இந்நிலையில் 2016 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க மிலேனியம் செலன்ச் கோர்பரேஷன், எமது நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு தடையேற்படுத்தும் விடயங்கள் தொடர்பிலான ஒரு ஆய்வை மேற்கொண்டது. 

அதன் மூலம் வளர்ச்சிக்கு  தடையாக  இருப்பதாக இணங்கானப்பட்ட  காணி விவகாரம் மற்றும் போக்குவரத்து துறை தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கு மிலேனியம் செலன்ச் கோர்பரேஷன் மற்றும்  இலங்கை அரசாங்கம்  என்பவற்றால் ஒருமுகமாக தீர்மானிக்கப்பட்டது.

மேற்படி ஆய்வில் கொழும்பு நகரில் காணப்படும் போக்குவரத்து நெரிசல், மாகாணங்களுக்கிடையில் நிலவும் சீரற்ற போக்குவரத்து முறைமைகள் மற்றும்  பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக உள்ள காணி முகாமைத்துவத்தின் பலவீனம் என்பன தொடர்பிலும் ஆராயப்பட்டது. 

அதன்படி மிலேனியம் செலன்ச் கோர்பரேஷன் நாட்டில் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்காக 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவினை  வழங்க இணங்கியுள்ளது.

இவ்வொப்பந்தத்தை இறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் அனைத்தும்  உரிய  சட்டத்திட்டங்களுக்கு அமைவாக சட்டமாதிபர் திணைக்களத்தின்  வழிகாட்டலின் பிரகாரமே மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் பலதரப்பு கலந்துரையாடலின் பின்னர் கடந்த மாதம் 29 ஆம் திகதி இவ்வொப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னதாக ஒப்பந்த விபரங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தும் விதம்  உள்ளிட்டவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதேவேளை பாராளுமன்றில் சமர்ப்பிக்க முன்னர் இவ்வொப்பந்தம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படும்.