எங்கள் வளங்களைப் பாதுகாப்பதில் யாழ்.பல்கலைக்கழகம் கவனம் எடுக்க வேண்டும்!

சனி ஓகஸ்ட் 24, 2019

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எங்கள் தமிழ் இனத்தின் மிகப்பெரும் சொத்து என்று நினைத்த காலம் உண்டு.சேர் பொன்.இராமநாதப் பிரபுவின் திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியை இழந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை ஈந்தளித்த பெருமை சைவப் பெருவள்ளல் இராமநாதன் பிரபுவையே சாரும்.

தங்களிடம் இருந்த ஒரு பிரபல்யமான கல்லூரியைத் தானம் செய்து, தங்களுக்கென ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கிய கெட்டித்தனம் தமிழினத்துக்கு உண்டு எனச் சிங்கள மக்களும் புகழ்ந்தனர்.

தவிர,பேராசிரியர் கைலாசபதி போன்றவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முழுமையும் தமிழ் மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டமிட்டனர்.ஆனால் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழகமும் எங்கள் கைநழுவிப் போய்விடுமோ என்று ஏங்குமளவுக்கு நிலைமை வந்துவிட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவர்கள் முதல் வருடத்தில் தமிழ் மொழியில் கற்கைநெறியைத் தொடர வேண்டும் என்ற ஒரு நியதியை குறித்துரைத்திருந்தால்,இன்று சிங்கள மாணவர்கள் பெருமளவில் வந்து குவியும் நிலைமை முற்றற இல்லாதிருந்திருக்கும்.

என்ன செய்வது தமிழ் மொழியில் கற்பது தகுதிக்குறைவு என்று நினைக்கின்ற சின்னத் தனங்கள் நம்மிடம் மேலோங்கி விட்ட பின்பு, யார் எதைக்கூறியும் எதுவும் ஆகப் போவதில்லை என்றளவில், நடப்பதைக் கண்டுகொள்வோம் என அமைதி கொள்வது தான் ஒரே வழி.

இவை ஒருபுறமிருக்க, தமிழர் தாயகத்தின் கல்விக் கலாபீடமாக விளங்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனது மக்கள் சமூகம் சார்ந்த பிரதேசத்தின் வளங்கள் தொடர்பில் கவனமெடுப்பது கட்டாயமானதாகும்.

எங்கள் பிரதேசத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள், செய்யக்கூடிய உற்பத்தி முதலீட்டு முயற்சிகள் என்பன தொடர்பிலும் வர்த்தக முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்களை வழிப்படுத்துகின்ற நடவடிக்கைகளிலும் அதீத கவனம் செலுத்துவது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தவிர்க்க முடியாத பணியாகவுள்ளது.

உதாரணத்துக்கு யாழ்.மாவட்டத்திலுள்ள மறவன்புலவு, தனங்களப்பு ஆகிய இடங்கள் அதிசக்திவாய்ந்த காந்தப்புலக்கோடுகள் ஊடறுத்துச் செல்கின்ற பகுதிகள் என்றும் இந்த உண்மையை அறிந்த தென்பகுதி தனியார் நிறுவனங்கள் அந்தப் பிரதேசத்தில் உள்ள காணிகளைக் கொள்வனவு செய்கின்றன என்பது பற்றியும் தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

எனவே இது குறித்த ஆய்வுகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துறைசார்ந்த பிரிவினர் மேற்கொண்டு; உண்மைத்தன்மையை அறிந்து, எங்கள் வளங்களைப் பாதுகாப்பதுடன் எங்கள் வளங்கள் எங்களை விட்டுக் கைநழுவிச் செல்லாமல் பாதுகாக்கின்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பது நம் தாழ்மையான கோரிக்கை.

-நன்றி வலம்புரி-