எந்த மருந்துக்குக் கட்டுப்படும் கரோனா?

சனி ஏப்ரல் 18, 2020

‘தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு’ என்பார்கள். அது போல நாவல் கரோனா வைரஸ் தொற்று ஏற்படுபவர்களில், பலருக்கு தீவிரமான சிக்கல்கள் ஏற்படுவது இல்லை. தொண்டைவலி, மூக்கு அடைப்பு, ஜலதோஷம் உள்ளிட்ட அறிகுறிகள் மட்டுமே ஏற்படும். பலருக்கு அவை கூட ஏற்படுவது இல்லை. எனவே, அவர்களுக்குச் சுடு தண்ணீர் குடிக்கக் கொடுக்கலாம். கொஞ்சம் நல்லமுறையில் கவனிக்க வேண்டும் என்றால் சிக்கன் சூப் கொடுக் கலாம். அவ்வளவே.

ஆனால், இவர்கள் தும்மும்போதும், இருமும் போதும், ஒவ்வொரு முறையும் சுமார் 40 ஆயிரம் கரோனா வைரஸ்களை பரப்புவார்கள். எனவே தான், நோய் அறிகுறி இருந்தாலும் இல்லையென்றாலும் இருமல், தும்மல் ஏற்படும்போது மூக்கையும் வாயையும் பொத்திக் கொள்ளவேண்டும். வெளியே செல்லும் போது முகக்கவசம் அல்லது பருத்தித் துணியால் முகத்தை மூடிக் கொள்ளவேண்டும்.

இது தவிர, வேறு எந்த நோய் சிகிச்சையும் தேவையில்லை.

சீனா போன்ற நாடுகளில் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படக்கூடாது என்ற கருத்தில், தனிமைப்படுத்தும் மய்யங்களை உருவாக்கி நோய் வந்தவர்களை அவற்றில் வைத்துப் பராமரித்தார்கள். வெறும் ஃப்ளு ஜலதோஷம் என்று தெரிய வருகையில் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். இந்தியாவில் அத்தகைய தனிமைப்படுத்தல்களுக்கான போதுமான ஏற்பாடுகள் இல்லை. அதனால் கடுமையான நோய்க்குறிகள் ஏற்படும் வரை, வீட்டில் தனிமையாக இருக்குமாறு அறிவுரை கூறுகிறார்கள்.

நோய்க் கிருமி தொற்று ஏற்பட்டவர்களில் சுமார் பத்து பதினைந்து சதவீதம் பேருக்கு கிருமித் தொற்றின் பாதிப்பு சற்றே கூடுதலாக அமையும். மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். மருத்துவ மனைக்கு செல்ல வேண்டி வரும். மருத்துவ மனையில் நெபுலைசர் எனும் கருவி கொண்டு அவர்கள் மூச்சுவிடுவதற்கு வசதி செய் வார்கள்.

அவ்வளவுதான்.

இந்த சிகிச்சையிலேயே பலர் குணம் அடைந்து விடுவார்கள். வேறு சிறப்பு மருந்துகள் ஏதும் தேவையில்லை.

கரோனா படுத்தும் பாடு

கரோனா வைரஸ் கிருமி தொற்று ஏற்பட்டவர்களில் சுமார் ஐந்து சதவீதம் பேருக்கு தீவிரமான சிகிச்சை தேவைப்படும். இதைப் புரிந்துகொள்ள, முதலில் கரோனா வைரஸ் கிருமி தொற்று ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்

வைரஸ் கிருமி நமது உடலில் மூக்கு, தொண்டை, நுரையீரல் மற்றும் வயிறு ஆகிய பகுதிகளில் உள்ள புறணி செல்களை மட்டுமே பற்றிக்கொண்டுத்தான் செல்லுக்கு உள்ளே செல்ல முடியும். இந்த செல்களில் தான் ACE2 என்கிற சிறப்பு ஏற்பிகள் (receptors) உள்ளன. இந்த ஏற்பியை ஏமாற்றிதான் வைரஸ் செல்களுக்கு உள்ளே செல்லும். உள்ளே செல்லும் வைரஸ் செல்களின் ரைபோசொம் கொல்கி எனும் அமைப்பு முதலியவற்றைப் பயன்படுத்தி ஜெராக்ஸ் எடுப்பது போல, தன்னைத் தானே நகல்கள் எடுத்துக் கொள்ளும். ஒரு செல்லுக்குள் பல நகல்கள் எடுத்த பிறகு, புற்றிலிருந்து வெளிவரும் ஈசல்கள் போல, இந்த புதிய வைரஸ்கள் வெளியே வரும். அடுத்தடுத்து உள்ள செல்களின் உள்ளே புகும்.

உடம்புக்குள் வைரஸ்கள் ஆக்கிரமிப்பு நடத்தியுள் ளன என்று ஒருகட்டத்தில் அறிந்துகொள்கிற நமது செல்கள் தம்மைத் தாமே தற்கொலை செய்து கொள் ளும். தங்களுக்கு மிக நெருக்கத்தில் உள்ள, அதாவது வைரஸ்கள் புகுந்திருக்க வாய்ப்பு உள்ள செல்களையும் தம்மை தாமே அழித்துக்கொள்ள தூண்டுகிற, ‘இண்டர் பிரன்’ எனும் ஆபத்தைத் தெரிவிக்கும் சமிக்ஞை புரதங்களை வெளியிடும். சற்றே தொலைவில் உள்ள செல்கள் இந்த எச்சரிக்கை சமிக்ஞை புரதத்தினால் தூண்டப்பட்டு, தம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய தயாரிப்புப் பணிகளைச் செய்யும். தாம் அழிந்தாலும் மற்ற எல்லோரும் நல்லபடியாக இருக்க வேண்டும் என்ற இந்த பொதுநலம் பேணும் ஒற்றுமை இது. இந்தச் செயலின் தொடர்ச்சியாக வைரஸ்கள் ஒழிக்கப்படும்.

தற்கொலை செய்துகொண்ட செல்கள், சிதைந்த வைரஸ் துகள்கள் மற்றும் இதுபோன்ற உடலியக்க சுரப்புக்கள் நீர்ம நிலையில் நுரையீரலைச் சென்று அடையும். இதைத் தான் நிமோனியா என்கிறோம். இவ்வாறு நுரையீரலை நீர்மப் பொருள்கள் சென்று அடைந்தால், அதனை நீக்க மருந்துகள், மருத்துவச் சிகிச்சை முறைகள் உள்ளன. எனவே, ஒரு சில நாட்கள் மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு நோயாளி வீட்டுக்கு திரும்பிவிடுவார்.

எல்லா நேரங்களிலும் இதுபோல நடந்து விடுவ தில்லை. சில சமயம் அந்த நோயாளி வறுமையில் வாடியவராக இருக்கலாம். போதுமான அளவுக்கு சத்து அவருக்கு இல்லாதவராக இருக்கலாம். பணம் இருக்கிற திமிரில் ‘நான் டையட் செய்கிறேன்’ என்ற பேரில், இந்த டையட், அந்த டையட் என்று சொல்வோர் பேச்சைக் கேட்டு, சரிவிகித உணவு உட்கொள்ளாத பணக்காரராக அவர் இருக்கலாம். அதனால் உடல் நலத்தைக் கெடுத்துக் கொண்டவராக அவர் இருக்கலாம். ரத்தக் கொதிப்பு, இதய நோய், சர்க்கரை வியாதி உள்ளிட்ட நோய்களில் அவதிப்படுபவராக இருக்கலாம். வயதான வர்களுக்கு பொதுவாக, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு. உடல் பலஹீனமும் இருக்கும்.

இத்தகைய சிலருக்கு இந்த வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்தி இருக்காது. மனித செல்களில் உள்ள ACE2 என்ற ஏற்பிகளைப் பயன்படுத்தி தான் செல்களுக்கு உள்ளே நுழைந்து வைரஸ்கள் ஆட்டம் போடுகின்றன என கூறினேன் அல்லவா? இதே ACE2 ஏற்பிகள்தான் ரத்த அழுத்தத்தை சமநிலைப் படுத்துவதில் பங்கு வகிக்கின்றன. எனவேதான் ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் மேலும் கூடுதலான பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

வைரஸ்களின் தொற்றுக்கு ஆளானவர்களில் இரண்டு, மூன்று சதவீதம் பேருக்கு மேலும் தீவிரமான சிகிச்சை தேவைப்படும். நுரையீரல்களில் இருக்கும் காற்றுப் பைகள் வழியாக இரத்தத்தில் வாயுக்களின் பரிமாற்றம் நடைபெறுகிறது. கார்பன்டை ஆக்சைடு அதன் வெளியேறுகிறது. ஆக்ஸிஜன் உள்ளே செலுத் தப்பட்டு ரத்தத்தில் அதன் செறிவு அதிகரிக்கப்படுகிறது. இந்தப் பைகளில் வைரஸ்களும் உடலின் செல்களும் ஒன்றை ஒன்று எதிர்த்து போரிடும்போது சிதைவுகள் உருவாகின்றன. அவை காற்றுப் பைகளில் அடைப்பை ஏற்படுத்துகின்றன. அதன் விளைவாக, போதிய ஆக்ஸிஜன் இல்லாமல் உடலின் பல்வேறு உறுப்புகள் செயல்படாமல் நின்றுபோகின்றன. வெண்டிலேடர் முதலாக எக்மோ எனும் செயற்கை நுரையீரல் கருவி வரையாக இந்தக் கட்டத்தில் பயன்படுகின்றன. அவை செயற்கையாக ரத்தத்தில் ஆக்சிஜனை ஏற்ற வேண் டும். கார்பன்டை ஆக்சைடு வெளியேற்ற வேண்டும்.

உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு முழு வீச்சில் செயல்பட்டு வைரஸ் செல்கள் எல்லாவற்றையும் அழிக்கத் துவங்கிவிடும். உடலின் வெளியில் காயம் ஏற்பட்டால் அங்கே பாக்டீரியா கிருமி புகுந்து நோய்த் தொற்று ஏற்படும் என்பதை அறிவோம். அதுபோலவே, வைரஸ் கிருமிகளும் நமது உடலும் இடைவிடாத போரை நடத்தும்போது, பல செல்கள் மடிகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் நுரையீரல் உள்ளிட்ட பகுதிகளில் தொற்று ஏற்படும்.

அதனைச் சரி செய்ய, ஆன்டிபயாடிக் மருந்துகள் தருவார்கள். ஆனாலும் சிலருக்கு தொற்று முற்றி, ரத்தத்தில் கலந்து மற்ற உடலுறுப்புகளையும் பாதிக்கும். பல்வேறு உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டு, தொற்று முற்றும்போது மரணம் ஏற்படும்.

இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

நோயின் இந்தக் கட்டத்தில் முழு மூச்சுடன் நோயெதிர்ப்பு ஆற்றலை பிரயோகித்து நோயின் செயல்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும்.

இந்த சமயத்தில் நோயெதிர்ப்பு ஆற்றலை கூட்ட மாட்டார்கள், குறைப்பார்கள்.

நோய் முற்றிப்போன இறுதிக் கட்டத்தில், எப்படி நோயாளியை குணப்படுத்துவது என்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதைத்தான் மருத்துவ உலகம் இன்று ஆராய்ந்து வருகிறது.

ஆய்வில் உள்ள நான்கு மருந்துகள்

கரோனா வைரஸ் நோய் கடுமையாக முற்றுவதற்கு முன்னர் இன்டர்ஃபெரான் போன்ற மருந்துகளைக் கொடுத்து, வைரஸ்கள் உடலுக்குள் பரவுவதை தடுக்க முடியுமா? நோய் அற்றவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, இன்டர்ஃபெரான் பயன்படுத்துவது இல்லை. நோய்க்கிருமி தாக்கி முற்றுவதற்கு முன்னரே இன்டர்ஃபெரான் மருந்தை பயன்படுத்தக்கூடாது. கூடுதலாக இன்டர்ஃபெரான் புகுத்தும்போது, கிரு மியை அழிக்கும் செல்கள் பல நேரங்களில் நல்ல செல்களையும் அழித்துவிடுகின்றன. ஆபத்து இல்லாத செல்கள் கூட தற்கொலை செய்துகொள்ளும் வாய்ப்பு உள்ளது. எனவேதான், குறிப்பிட்ட அளவு நோய் முற்றிய நோயாளிகளுக்கு மட்டுமே இன்டர்ஃபெரான் சிகிச்சை தரப்படுகிறது. எய்ட்ஸ் உட்பட மற்ற சில வைரஸ் நோய்களில் இந்த மருந்து பயன் தந்தாலும் இந்த வைரஸுக்கு பலனளிக்குமா என சரியாக தெரியாது.

நமது உடலின் செல்களுக்குள் வைரஸ்கள் நுழை வதைத் தடுக்க ஏதாவது மருந்தை பயன்படுத்தலாமா? குறிப்பிட்ட அமிலத் தன்மை செல்களில் அமையும் போதுதான், செல்களுக்கு உள்ளே கிருமி நுழையும். மலேரியாவுக்கு தரும் ஹைட்ராக்சி குளோரோகுயின் போன்ற மருந்துகள் செயற்கையாக அமிலத் தன் மையை குறைக்கும். ஆனால் இந்த மருந்து கடுமை யான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எனவே, துவக்கக் நிலையில் தரக்கூடாது. நாமாகவே கூட எடுத்துக்கொள்ளக் கூடாது. மற்ற கிருமிகளுக்கு பொருந்துவது நாவல் கரோனா வைரஸுக்குப் பொருந்துமா? கரோனா வைரஸ் ACE2 வழியின் வழியாக அல்லவா உள்ளே நுழைகிறது. எனவே, இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் பயன்தருமா?

இன்று நமக்கு தெளிவாக தெரியாது.

செல்களுக்குள் புகுந்த வைரஸ் தன்னைத் தானே நகல்கள் எடுத்து பல மடங்குகளாகப் பெருகினால் தான் நோய். செல்கள் தற்கொலை செய்து கொள்ளும் போது மற்ற செல்களுக்கு வைரஸ்கள் பரவாமல் அழிந்துவிட்டால், நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும். வைரஸ்கள் தன்னைத் தானே நகல்கள் எடுத்துக்கொள்வதைத் தடுக்கும் மருந்துகளைத் தேடுகிறார்கள். ஏற்கெனவே எபோலா போன்ற மற்ற வைரஸ் நோய்களுக்கு பயன் தந்த ritonavir/lopinavir எனும் மருந்து இதைத் தடுக்குமா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

அசப்பில் சர்க்கரையும் உப்பும் ஒன்றுபோல தெரியும் அல்லவா? சர்க்கரைக்குப் பதிலாக, காபியில் உப்பை போட்டுவிட்டால் குடிக்க முடியாது அல்லவா? அதே போல நாவல் கரோனா வைரஸ் உருவாக அடினோசைன் ட்ரை பாஸ்பேட் என்ற ஒரு வேதிப் பொருள் தேவை. அசப்பில் அதே போல இருக்கும் Remdesivir எனும் வேதிப் பொருள் செல்களுக்குள் சென்றால் சர்க்கரைக்குப் பதில் உப்பைப் போட்ட காப்பியைப் போல ஆகிவிடும். அதிலிருந்து வைரஸ் கள் கோணல் மாணலாக மாறி அழிந்து விடும். வேறு வைரஸ் நோய்களில் இந்த மருந்து உதவியுள்ளது.

இந்த வைரஸூக்கு ஒரு வேளை பொருந்தலாம்.

இதைத் தவிர வேறு வகைகளிலும் தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்க ஆய்வுகள் நடந்து வருகின்றன. குறைந் தது பதினெட்டு மாதங்கள் ஆகும் என்கிறார்கள்.

உலக நாடுகளின் ஆய்வு

உலக பிரச்சினையாக உருவெடுத்துள்ள கரோனா தொற்றுநோயை வெல்ல, உலக சுகாதார அமைப்பின் கீழ் உலக நாடுகள் எல்லாம் ஒன்றிணைந்து ‘சாலிடா ரிட்டி - கூட்டு ஒற்றுமை - மருத்துவ ஆய்வு’ எனும் மருத்துவ ஆய்வை துவக்கியுள்ளர்கள். இதில் பங்கு பெற்றுள்ள இந்தியா, சீனா, ஈரான், நார்வே, தென்னாப் ரிக்கா போன்ற பல நாடுகளில் நான்கு மருந்துகள் நோயாளிக்கு அளிக்கப்பட்டு சோதனை செய்யப்படு கின்றன. இந்த மருந்துகளில் எதை உட்கொண்டால் மரணத்தை தடுக்க முடிகிறது, வெண்டிலேடர் உதவி இல்லாமல் சுவாசத்தைத் திரும்பப்பெற முடிகிறது, தீவிர சிகிச்சைப் பிரிவில் எத்தனை நாள்கள் கிடக்க வேண்டிவரும் என்பதை ஆராய்ச்சி செய்கிறார்கள்.

முற்றிய நிலையில் உள்ள சுமார் ஆயிரம் நோயாளி களிடம் இந்த ஆய்வு உலகம் முழுவதும் மேற்கொள்ளப் படுகிறது. வேறு வழியில்லை என்று கைவிடப்படும் நிலையில் உள்ள நோயாளிகளிடம் அவர்களின் சம் மதத்துடன் இந்த சோதனை சிகிச்சை நடைபெறுகிறது. நார்வேயைச் சார்ந்த ஒரு நோயாளி இந்த ஆய்வில் பங்கு பெற, முதல் நோயாளியாக சம்மதித்துள்ளார். உலக நாடுகள் அனைத்தும் இணைந்து செய்கிற ஆராய்ச்சி என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஒரு நாடு மட்டும் இதில் பங்குபெற மறுத்துவிட்டது. அது எந்த நாடு என நாம் கூறத் தேவையே இல்லை. எளிதில் உங்களால் ஊகிக்க முடியும்.

பாரம்பரிய மருத்துவம்

சித்த வைத்தியம், ஆயுர் வேதம், யுனானி மருத்துவ மனைகள் எதுவும் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்காது. அறிவியல் பார்வையோடு செயல்படும் சித்த மருத்துவர் சிவராமன் அவர்கள் தெளிவாக, எந்த தயக்கமும் இன்றி சித்த மருத்துவத்தில் கரோனா வைரஸ் நோய்க்கு மருந்துகள் இல்லை என்கிறார். பொதுவான நோயெதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்த சில வழிமுறைகளை பரிந்துரை செய்தா லும் இஞ்சி, மஞ்சள் போன்ற பாரம்பரிய மருத்துவ குணம் கொண்ட உணவுகளை உட்கொண்டு விட்டால் கரோனா வைரஸ் நோய் குணமாகிவிடும் என்று உறுதியாக கூற முடியாது எனவும் அவர் தெளிவாக கூறுகிறார். எனவே, பாரம்பரிய மருத்துவச் சிகிச்சை முறைகளில் நோயாளிகளுக்கு குணம் உண்டு என்று கூறுவது தவறு.

பாரம்பரிய மருந்துகள் பற்றிய எனது கருத்தை ‘மாவோ - மலேரியா - மருந்து’ எனும் கட்டுரையாக நான் ஏற்கெனவே எழுதியுள்ளேன். பாரம்பரிய மருந்து கள் பற்றிய நம்பிக்கைகளுக்கும் அப்பால் சில கருத்து கள் தெரிவிக்கப்படுகின்றன. மஞ்சள் தண்ணீர் தெளித் தால் கரோனா அண்டாது, கோமியம் சாப்பிட்டால் கரோனா ஓடிவிடும் என்னும் அத்தகைய கருத்துகளை அபத்தமானவை என்றுதான் சொல்ல வேண்டும்.