எடப்பாடி பழனிசாமி நாளை சென்னை திரும்புகிறார்!

திங்கள் செப்டம்பர் 09, 2019

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை சென்னை திரும்புகிறார்.

தமிழகத்தை தொழில்துறையில் வளர்ச்சி மிகுந்த மாநிலமாக மாற்றுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாய் நகரம் மற்றும் இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு முறை பயணமாக கடந்த மாதம் 28-ந் திகதி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள ஒரு அரங்கில் பேசும்போது, ‘இந்தியாவிலேயே முதலீடு செய்ய ஏற்ற மாநிலம் தமிழகம் தான்’ என்று கூறினார். இதையடுத்து புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனையின் செயல்பாடுகளை பார்வையிட்டதோடு, அதுதொடர்பான தொழில்நுட்பங்களையும் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.

மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு குறித்து இங்கிலாந்து நிறுவனத்துடன் ஆலோசனை மேற்கொண்டார். இங்கிலாந்து பயணத்தை நிறைவு செய்துவிட்டு எடப்பாடி பழனிசாமி கடந்த 1-ந் தேதி அமெரிக்கா புறப்பட்டார். பபல்லோ நகரில் உள்ள கால்நடை பண்ணையில் நாட்டு இன மாடுகள் வளர்ப்பு, மரபணு பராமரிப்பதில் மேம்பட்ட தொழில்நுட்பம் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

எடப்பாடி பழனிசாமி

அமெரிக்காவில் தொழில் முதலீட்டாளர்கள், வெளிநாடு வாழ் தமிழ் தொழில் அதிபர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்புகளின்போது தமிழகத்தில் ரூ.5 ஆயிரத்து 80 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.

வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகளை பெறுவதற்காக ‘யாதும் ஊரே’ என்ற பிரத்யேக திட்டத்தையும் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். மின்சார கார்களின் பயன்பாடு, மாசில்லா எரிசக்தி நிறுவனத்தின் செயல்பாடுகளையும் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். இதேபோல பல்வேறு தொழில் நிறுவனங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில்நுட்பங்களை பார்வையிட்டதோடு, அதனை தமிழகத்தில் செயல்படுத்துவதற்குரிய சாத்தியக்கூறுகள் பற்றியும் அவர் கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சிகளின்போது எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு சாதகமாக உள்ள சூழலை எடுத்துக்கூறி, தமிழகத்தில் அதிக அளவில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார். வெளிநாடுகளுக்கு சென்று தமிழகத்துக்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்த, எடப்பாடி பழனிசாமி தனது 14 நாட்கள் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2.40 மணிக்கு சென்னை திரும்புகிறார்.