இசுரேல் VS தமிழீழம்

திங்கள் ஏப்ரல் 06, 2020

பலவீனமான எமது இனத்தின் தடைநீக்கிகளாகவே கரும்புலிகளை உருவாக்கினேன் என்கிறார் தலைவர். ஆனால் கரும்புலிகளை உலகம் ஏற்க மறுத்தது. காரணம்; நிழல் அரசொன்றின் மரபுசார் படையின் உச்சமாக , சிறப்புப் பயிற்சிபெற்ற Commandos இருப்பதை உலக அரசுகள் தமது நலன்களுக்கெதிராக இருப்பதாக எண்ணிக்கொண்டன. அதுவும் சிறிய தேசமொன்றில் குறைந்த வளங்களைக்கொண்டு அவர்கள் Commando அணியாக வளர்ச்சிபெற்று இருப்பதை யாராலும் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. அதனால்தான் "தற்கொலைப்படை" என்ற பொதுவான சொற்பிரயோகத்தின் மூலமாக எமது மண்ணின் அதியுச்ச தியாகங்கள்  வல்லாதிக்க அரசுகளால்   மூடிமறைக்கப்பட்டன.

s

உலக நாடுகளின் விசேட Commando அணிகளின் வீரர்கள் அனைவருமே உயிரைத் துச்சமாக மதித்தே நடவடிக்கைகளில் இறங்குவார்கள். அவ்வாறே தமிழீழத்தின் Commando அணியினரும் செல்வார்கள், தமிழில் நாம் அவர்களைக் கரும்புலிகள் என்கிறோம். ஏனைய நாடுகளின் Commando வீரர்கள் பாதுகாப்பாகத் தளம் திரும்பினால் அவர்களுக்கு இரட்டிப்பு ஊதியமும் சலுகைகளும் கிடைக்கும். ஆனால் நம்மவர்கள் விடுதலைக்கனவை நெஞ்சிலே சுமப்பதனால் ஊதியமோ சலுகைகளையோ எதிர்பார்ப்பதில்லை.

z

1976 யூலை 4 ஆம்திகதி இசுரேலிய Commando அணியினர் உகண்டாவின் Entebbe விமான நிலையத்தில் நுழைந்து, பணயக்கைதிகளாகச் சிறைபிடிக்கப்பட்டிருந்த இசுரேலியப் பயணிகளை மீட்டெடுத்த தாக்குதலான  Operation Thunderbolt இற்கும் தமிழீழத்தின் சிறப்புப் பயிற்சி பெற்ற  Commando அணிகள் 24.07.2001 கட்டுநாயக்கவிலும்,  22.10.2007 இல் அநுராதபுரத்திலுமாக நடத்திய Operation எல்லாளனுக்கும்;
இடையேயான தாக்குதல் நேர்த்தியின்  பரிமாணத்தை அளந்து பார்த்தோமேயானால், உலக அரசுகள் எதற்காகத் தமிழீழத்தின் Commando படையணிகளை அச்சத்துடன் பார்த்தது என்பதை இலகுவாகப் புரிந்துகொள்ளலாம்.

z

தாக்குதலுக்கான சூழல்கள் வெவ்வேறாக இருந்தாலும், "எமது மக்களில் கை வைத்தால் நாம் வேடிக்கை பார்க்க மாட்டோம்" என்ற பொதுவிதி இவ்விரண்டு தாக்குதல்களுக்கும் இருக்கிறது. ஏன் நான் இசுரேலின் Operation Thunderbolt ஐ இங்கே ஒப்பீடு செய்கிறேன் எனில்; இசுரேலியர்களின் வரலாற்றில் அவர்கள் வேற்று நாடொன்றுக்குள் பிரவேசித்துச் செய்த அதியுச்ச தாக்குதலாகவும் பெருமையாகவும் இன்றுவரை பீற்றி எழுதுகிறார்கள்.

z

Entabbe விமானத்தளம் இராணுவத்தளம் அல்ல, அது பயணிகள் விமான நிலையம். அங்கே அனுமதியின்றி வேற்று நாட்டு விமானங்கள் தரையிறங்குவது சர்வதேசச் சட்டங்களுக்கு முரணானது. ஆனால் ஏற்கனவே இடிஅமீன் மீதிருந்த வெறுப்பின் காரணமாக அமெரிக்காவின் துணையோடு இசுரேல் தரையிறங்கியது.

aஅவ்விமான நிலையத்தில்  மாலை நேரத்தின் பின்  விமானங்கள் தரையிறங்குவதில்லை. இலகுவாக இறங்கித் தாக்கக்கூடிய நிலையிலிருந்தும் Operation Thunderbolt இற்காக அமெரிக்காவின் Navy seal அதிகாரிகளின் உதவி கோரப்பட்டு இசுரேலின்  Commando  அணிக்கு அவர்கள் பயிற்சியளித்தார்கள். அன்றைய Entabbe வானூர்தித்தளத்தில் முறையான வான்கண்காணிப்பு இருக்கவில்லை. அப்படியிருந்தும் நான்குவிதமான திட்டங்கள் போடப்பட்டு இறுதியில் நான்கு விமானங்களில் சென்று தளத்தில் இறங்குவதைத் தெரிவு செய்தனர் இசுரேலிய Commando அணியினர்.

முதல் இரண்டு விமானங்களில் வாகனங்களும், மற்றைய இரண்டு விமானங்களில் வீரர்களுமாகப் பயணித்தார்கள். தாக்குதல் முடிவில் பணயக்கைதியாகப் பிடிபட்டிருந்த இருவர் மீது பதட்டம் காரணமாகத் தவறுதலாக  இசுரேலிய Commando வீரரொருவர் வேட்டுக்களைத் தீர்த்திருந்தார். ஒருவர் அங்கேயே மரணிக்க மற்றவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்தார்.

இப்போது தமிழீழ Commando அணியினரின் நடவடிக்கைக்கு வருவோம். கட்டுநாயக்க தாக்குதலுக்கும் Operation எல்லாளனுக்காகவும் வேவுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதிலிருந்து, தாக்குதலுக்கு அணியமாவது வரை தமிழீழப்படைகள் தமது சொந்தப்பலத்தையே உபயோகித்தார்கள்.யாரிடமும் பயிற்சியோ உதவியோ பெற்றுக்கொள்ளவில்லை.

கட்டுநாயக்க விமான நிலையத் தாக்குதலில் பயணிகளுக்கோ , விமானநிலையப் பணியாளருக்கோ, விமானநிலைய விடுதிகளில் தங்கியிருந்த வேற்று நாட்டவருக்கோ, உயிரிழப்போ அல்லது காயங்களையோ ஏற்படுத்தி விடக்கூடாதென்பதில்  தமிழீழத்தின் Commando அணிக்கு  இறுக்கமான கட்டளை இடப்பட்டிருந்தது. அவ்வாறே அநுராதபுரத்திலும் அங்கே தங்கியிருந்த இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு எதுவித சேதங்களும் வந்துவிடக்கூடாதென்பதில் அவர்கள் உறுதியாயிருந்தனர்.

Entabbe வானூர்தித் தளத்தின் அன்றைய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும், கட்டுநாயக்கவின்  பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குமான வித்தியாசங்கள் காலத்தாலும் நவீனத்தாலும் பாரிய வேறுபாடுகளுக்குட்பட்டவை.
கட்டுநாயக்கவிற்கு அருகிலேயே இராணுவ விமானப்படைத் தளமும் உண்டு. அதியுச்ச கண்காணிப்புக்கருவிகள், தொடர் இராணுவக் காவலரண்கள் ஆகியனவும்  சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் சோதனைகளுமாக இருந்த தளமே கட்டுநாயக்க.

Entabbe தளத்திற்குச் செல்லும்போது இசுரேலிய Commando அணியினர் இரண்டு Mercedes வகை மகிழுந்தினையும் எடுத்துச் சென்றிருந்தனர். காரணம் அவ்வேளையில் இடிஅமீன் பயன்படுத்திய மகிழுந்துகளும் அதே வகையானவையே. இடிஅமீன் வருவதாக எண்ணி அங்கிருந்த படையினர் தாக்காமல் இருப்பார்கள் என்பதற்காகவும் விரைவாக விமானநிலையக் கட்டடத்தை அண்மிப்பதற்குமான திட்டமுமே அது.

கட்டுநாயக்கவின் சூழலில் அப்படித் தரையிறங்க முடியாது. அவ்வாறான வளங்களும் தமிழீழத்தின் Commando அணியிடம் இல்லை. மின்சாரத்தைத் துண்டிப்பதே ஒரே ஒரு சாதகம். வேவுத்தரவுகளின் துல்லியமும், தமிழீழ Commandoகளின் திறமையுமாக இணைந்து இலங்கை என்ற நாட்டின் பொருளாதாரத்தில் 200 மில்லியன் டொலர்களை இல்லாமற் செய்தது.

தமிழீழம் என்ற நாட்டினது மக்களையும் பொருளாதாரத்தையும், சிறிலங்கா என்ற நாடு தொடர்ச்சியாகச் சிதைத்துவந்ததற்குப் பாடம் புகட்டும் விதமாக தமிழீழத்தின் Commando அணியினர் செய்த பதில் தாக்குதலே இந்தநடவடிக்கை. இந்நடவடிக்கையின் உச்சம் யாதெனில்; சிறீலங்கா அரசை அடித்து இழுத்துவந்து பேச்சுவார்த்தை மேடையில் இருத்தியமையே.

அதுவரை நாளும் தமிழீழத்தின் படைகள் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் என்று எழுதிவந்த Newyork Times பத்திரிகையானது  கட்டுநாயக்க தாக்குதலுக்குப் பிறகு Rebels என்று தனது பதத்தை மாற்றிக்கொண்டது.
அதேபோல Irishtimes என்ற பத்திரிகை தனது பத்தியொன்றில் "தமது மக்களுக்கானஉரிமையை விடுதலைப்புலிகள் பிரகடனம் செய்கிறார்கள்" என்று எழுதியது.

அமெரிக்காவின் புலனாய்வு இதழான Janes Intelligense வெளியிட்ட கட்டுரையில் "சிறீலங்கா அரசின் பாதுகாப்புப் புலனாய்வு தோல்வியடைந்து விட்டது" என்று குறிப்பிட்டது. இத்தனைக்குமான பாரிய மாற்றங்களுக்குமான அடிப்படையை உருவாக்கியவர்கள் தமிழீழத்தின் தலைசிறந்த Commando அணியான கரும்புலிகளே.

இவையெல்லாவற்றையும் ஒப்பிட்டு நோக்கினால்; அமெரிக்காவின்  அதியுச்சதேவையைப் பூர்த்திசெய்யும் Navyseal Commando அணிபோல, இசுரேலின் Mistaarvim Commando அணியைப்போல,  இரசியாவின் Spetsnaz போல , தமிழீழத்தின்  Commando அணியான, ஒழுக்கமும் இலட்சிய உறுதியும் கொண்ட, அடிப்படை வளங்களைக்கொண்டு வளர்ந்துநின்ற  Black tigers அங்கீகாரம் பெற்றுவிட்டால், அது ஆசியக்கண்டத்தின் தவிர்க்கமுடியாத அடையாளமாக மாறிவிடும் என்பதே உலக அரசுகளின் அச்சமாகும்.

- தேவன்