ஈழ தமிழர்கள் குறித்த ராமதாஸ் வௌியிட்டுள்ள அறிக்கை!

சனி பெப்ரவரி 22, 2020

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சிறிலங்கா  அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையில் இந்தியா இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அந்த கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (21) அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை கூறியுள்ளார்.

மேலும், ஈழ  தமிழர்களுக்கு எதிராக அடக்குமுறைகளும், அத்துமீறல்களும் அதிகரித்துள்ளதாக கூறியுள்ள அவர் அவ்வாறான சூழலில் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளதாக கூறியுள்ளார்.

ஆகவே ஈழ  தமிழர்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் இந்தியாவுக்கு உள்ளது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா  இராணுவத் தளபதிக்கு அமெரிக்கா பயண தடையை விதித்தது போல் இந்தியாவும் தடைகளை விதித்து தமிழர்கள் மீதான அக்கறையை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐ.நா விசாரணையிலிருந்து வெளியேறத் துடிக்கும் சிறிலங்காவிற்கு இந்தியா கண்டனம் தெரிவித்து போர்க்குற்ற விசாரணையை குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்ற ஒத்துழைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா தமது நட்பு நாடுகளுடன் இணைந்து ஐ.நா. மனித உரிமை பேரவையில் சிறிலங்கா  தொடர்பில் புதியதொரு தீர்மானத்தை இயற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

சிறிலங்கா  பாகிஸ்தான் போன்ற நாடுகளின் உதவியுடன் புதிய தீர்மானத்தை கொண்டுவந்தால் அதற்கு எதிராக வாக்களித்து அதனை தோற்க்கடிக்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.