இந்தியாவின் குடுமி ஈழத்தமிழர்களுக்காக சும்மா ஆடுமா? - கலாநிதி ர.சிறீஸ்கந்தராஜா

வியாழன் பெப்ரவரி 20, 2020

கடந்த ஆண்டு கார்த்திகை மாதம் சிறீலங்காவின் அதிபராக கோத்தபாய ராஜபக்ச பதவியேற்றதில் இருந்து ஈழத்தமிழர் விடயத்தில் மீண்டும் இந்தியா அதீத கரிசனை காட்டத் தொடங்கியுள்ளது.

அதிபராகப் பதவியேற்று இரண்டு வாரங்கள் நிறைவடைவதற்குள் கோத்தபாய புதுடில்லி சென்றிருந்த பொழுது, பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அவரிடம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருந்தார். கடந்த வாரம் அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ச புதுடில்லி சென்றிருந்த பொழுதும் அதே பல்லவியையே மோடி பாடினார்.

தமக்காகக் குரல்கொடுப்பதற்கென்று உலகில் எந்தவொரு நாடுமே இல்லை என்று ஈழத்தமிழர்கள் தவித்துக் கொண்டிருக்க, புதுடில்லி செல்லும் ஒவ்வொரு சிங்களத் தலைவர்களிடமும் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்தியப் பிரதமர் வலியுறுத்துவது தமிழர்களுக்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதம் என்றும், இது இராஜவரோதயம் சம்பந்தரின் சாணக்கியத்திற்குக் கிடைத்த பெரும் வெற்றி என்று நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரவாரம் செய்யலாம். ஏனென்றால் தேர்தல் திருவிழாவிற்கான நாள் நெருங்குகின்றது அல்லவா?

ஆனால் யதார்த்தம் அதுவல்ல.

ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய தீர்வை ஏற்படுத்துதில் இந்தியாவிற்கு உண்மையான அக்கறை இருந்திருக்குமாயின், சமஸ்டித் தீர்வை ஆராய்ந்து பார்ப்பதற்கான இணக்கப்பாட்டிற்கு 05.12.2002 அன்று ஒஸ்லோவில் தமிழீழ விடுதலைப் புலிகளும், சிறீலங்கா அரசாங்கமும் வந்த பொழுது அதைத் திரைமறைவில் இந்தியா எதிர்த்திருக்காது.

தமிழீழத் தனியரசு உருவாகுவது இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில், பிரிவினைப் போராட்டங்கள் வெடிப்பதற்கு வழிகோலும் என்று இந்தியா அஞ்சுவதில் ஓரளவு நியாயம் இருக்கின்றது என்று வைத்துக் கொண்டாலும், தனியரசுக்கு மாற்றீடான சமஸ்டித் தீர்வை ஆராய்ந்து பார்ப்பதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகளும், சிறீலங்கா அரசாங்கமும் இணங்கியதில் இந்தியாவிற்கு என்ன பிரச்சினை இருந்திருக்க முடியும்?

சரி, அது தான் போகட்டும். சமஸ்டிக்கும், அதிகாரப் பரவலாக்கத்திற்கும் இடைப்பட்ட அரை சமஸ்டி நிலையிலான ஆட்சிமுறையைக் கொண்டிருக்கும் இந்தியாவிற்குத் தனது அண்டை நாடொன்றில் முழு அளவிலான சமஸ்டிமுறைத் தீர்வு நடைமுறைக்கு வர இருந்ததற்கான வாய்ப்புக்கள் சங்கடத்தை ஏற்படுத்துவதாக இருந்திருக்கலாம். அதற்காகவே சமஸ்டித் தீர்வுக்கான முயற்சிகளை முளையில் கிள்ளியயறிவதற்கு இந்தியா முற்பட்டிருக்கலாம். ஆனால் எதற்காக அதன் பின் இடைக்கால நிர்வாகத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் கோரிய பொழுது அதற்கு திரைமறைவில் இந்தியா முட்டுக்கட்டை போட்டது?

சரி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற இயக்கங்களின் பாணியிலான கோவில் மாடுகள் போன்று அல்லாது தனது கட்டளைகளுக்குப் பணிய மறுத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கைகளில் சட்டபூர்வமான நிர்வாகப் பொறிமுறைகள் ஏதும் கிட்டிவிடக் கூடாது என்பதற்காக அவ்வாறு இந்தியா நடந்து கொண்டது என்று வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் எதற்காகத் தமிழின அழிப்புப் போரை மகிந்த ராஜபக்ச தொடங்கிய பொழுது அதற்கு முழு அளவிலான உதவிகளை இந்தியா வழங்கியது?

கடந்த வாரம் டில்லியில் வைத்து வழங்கிய செவ்வியில், இந்தியாவின் உதவி இல்லை என்றால் தாங்கள் யுத்தத்தில் வென்றிருப்பதற்கு வாய்ப்புக்களே இல்லை என்று சிங்களப் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் அளவிற்கு இந்தியாவின் உதவி இருந்துள்ளது.

சரி, தமிழீழ விடுதலைப் புலிகள் அழித்தொழிக்கப்பட்டு விட்டால் அதன் பின்னர் இந்திய நலன்களுக்கு இசைவான அரசியல் தீர்வொன்றை ஈழத்தமிழர்களுக்குப் பெற்றுக் கொடுக்கலாம் என்ற நம்பிக்கையில் அவ்வாறு இந்தியா நடந்து கொண்டது என்று வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் ஆயுதப் போராட்டம் நிறைவுக்கு வந்ததும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து, பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் உள்ள காணி, காவல்துறை அதிகாரங்கள் தமிழர்களுக்குக் கிட்டுவதற்கும், அரச கரும மொழியாகத் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கும் எதற்காக இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லை? 

இந்தியாவின் சொல்லுக்குக் கட்டுப்படுபவர் போன்று நடித்துத் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றிபெற்றதும் சீனாவின் பக்கம் மகிந்தர் தாவியதால் ஈழத்தமிழர்களின் விடயத்தில் இந்தியாவால் எதையுமே செய்ய முடியவில்லை என்று வைத்துக் கொள்வோம்.

சரி, அப்படி என்றால் புதுடில்லியினதும், மேற்குலகினதும் தலையாட்டிப் பொம்மை போன்று நடந்து கொண்ட ரணில் விக்கிரமசிங்க கோலோச்சிய கடந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் ஏன் ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் அலட்சியப் போக்குடன் இந்தியா நடந்து கொண்டது?

இவ்வாறு கடந்த ஐந்தாண்டுகளாக மாற்றாந்தாய் போன்று நடந்த இந்தியா, இன்று எதற்காக ஈழத்தமிழர்கள் மீது அதீத கரிசனை கொள்ள வேண்டும்?

இவ்விடத்தில் தான் ‘சோழியன் குடுமி சும்மா ஆடாது’ எனும் பழமொழியின் அர்த்தம் உணரப்படுகின்றது. இப்பழமொழி ‘சோழியன் குடுமி சும்மாடு ஆகாது’ என்பதில் இருந்து திரிந்த ஒன்றாயினும், அதை நாம் இன்று புரிந்து கொண்டிருக்கும் அர்த்தத்தில் தான் இந்தியாவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. ஆம், ஈழத்தமிழர்கள் மீது இந்தியா அதீத கரிசனை கொள்ளத் தொடங்கியிருப்பதற்கு ஒரேயொரு காரணம் சீனா. என்ன வாசகர்களே, உங்களால் நம்ப முடியாமல் இருக்கின்றதா?

கொழும்பில் உள்ள இராசதந்திரிகள் வட்டாரத்தில் அண்மைக் காலமாக அரசல் புரசலாகப் பேசப்படும் ஒரு முக்கிய விடயம், தமிழர்களுக்கான அரசியல் தீர்வை விரைவாக ஏற்படுத்திக் கொடுத்து ஈழத்தீவில் இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் தலையீட்டிற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் சிறீலங்கா அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டும் என்று ராஜபக்ச சகோதரர்களிடம் சீன இராசதந்திரிகள் வலியுறுத்தியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல்கள் தான். இதைப் பற்றி சில தமிழ் அரசியல்வாதிகளிடம் கூட சில இராசதந்திரிகள் உரையாடியதாக தகவல்.

எதற்காக இவ்வாறான வலியுறுத்தலை சீனா மேற்கொண்டது என்பது புதிரான ஒன்றல்ல. உலக வல்லரசு நாடுகளில் ஒன்றாகத் திகழும் சீனா, அடுத்தபடியாக உலக வல்லாதிக்க நாடாக மாறும் கனவில் பயணிக்கின்றது. இக் கனவு சாத்தியமா? இல்லையா? என்பதற்கு அப்பால், இதற்கான காய்நகர்த்தல்களைக் கனக்கச்சிதமான முறையில் சீனா மேற்கொண்டு வருகின்றது என்பது தான் இன்றைய யதார்த்தம். கொரனா (இப்பொழுது கோவித்-19) வைரஸ் ஏற்படுத்திய கிலி சீனா பற்றிய விம்பத்தை இன்று உலக மட்டத்தில் குறைத்திருக்கலாம். ஆனால் இதிலிருந்து சீனா மீண்டெழுந்ததும் மீண்டும் சீனாவின் உலக வல்லாதிக்கக் கனவு தான் இந்தியாவையும், அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளையும் மீண்டும் கிலிகொள்ள வைக்கப் போகின்றது.

இங்கு இன்னுமொரு விடயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். மேற்குலக நாடுகளோடும், இந்தியாவோடும் ஒப்பிடும் பொழுது சனநாயக தேர்தல் முறைமையைப் பேணாத, தனிமனித சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் மதிக்காத ஒரு நாடாக சீனா திகழ்கின்றது என்பது உண்மையே. அதேநேரத்தில் இந்தியாவில் இருப்பதை விட அதிக அதிகாரம் கொண்ட மாநில சுயாட்சி முறை சீனாவில் தான் இருக்கின்றது.

என்ன இதுவும் ஆச்சரியமாக இருக்கின்றதா?

இந்தியாவின் எந்தவொரு மாநிலங்களும் கொண்டிருக்காத அளவு சுயாட்சி அதிகாரத்தை சீனாவின் சிறப்பு நிர்வாகப் பிராந்தியங்களான ஹொங்கொங் (Hong Kong), மக்கெள (Macao) ஆகிய மாநிலங்கள் கொண்டுள்ளன. அதைவிட சீனாவின் ஏனைய மாநிலங்களில் அரை சமஸ்டி முறையிலான சுயாட்சி அமைப்பும் நடைமுறையில் உள்ளது.

பொதுவாக நாம் எல்லோரும் சீனர்களை ஓரினமாகக் கருதுகின்ற பொழுதும், சீனா என்பது பல தேசிய இனங்களையும், சிறுபான்மை இனங்களையும் கொண்ட ஒரு பேரரசு. சீனாவில் மொத்தம் 56 அங்கீகரிக்கப்பட்ட தேசிய இனங்கள் உள்ளன. இவற்றை விட இன்னும் பல இனங்கள் அங்கீகரிக்கப்படாத சிறுபான்மை இனங்களாக உள்ளன.

பல தேசிய இனங்களையும், சிறுபான்மை இனங்களையும் இன்று கொண்டமைந்திருக்கும் இந்தியா என்ற பேரரசு ஆங்கிலேயர்களின் காலத்தில் உருவான ஒன்று. ஆங்கிலேயர்களுக்கு முன் வரலாற்றில் எந்தவொரு காலத்திலும் இந்தியா என்றொரு பேரரசு இருந்தது கிடையாது. இந்தியப் பேரரசை அமைப்பதற்கு அசோகச் சக்கரவர்த்தியும், அக்பரும் முற்பட்ட பொழுதும் அது கைகூடவில்லை. மற்றும்படி இந்தியப் பேரரசு, பாரத கண்டம் என்றெல்லாம் கூறப்படுவது இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் இருந்து எழுந்த கற்பனைக் கதைகள் தான்.

ஆனால் சீனாவின் நிலை அப்படி அல்ல. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே சீனா பல தேசிய இனங்களையும், சிறுபான்மை இனங்களையும் கொண்ட பேரரசாகவே விளங்கி வந்துள்ளது. பண்டைக் காலச் சீனப் பேரரசாக இருந்தாலும் சரி, இடைக்காலச் சீனப் பேரரசாக இருந்தாலும் சரி, சக்கரவர்த்திக்குக் கட்டுப்பட்ட மன்னர்களைக் கொண்ட சாம்ராச்சியங்களாகவே எல்லா சீனப் பேரரசுகளும் இயங்கி வந்துள்ளன. அதாவது இன்றைய சமஸ்டி முறையை விட அதிக அளவு அதிகாரங்களைக் கொண்ட மாநில அரசுகளை ஆள்வோராகவே பண்டைய மற்றும் மத்திய காலத்துச் சீனப் பேரரசின் மன்னர்கள் இருந்துள்ளார்கள்.

ஏன், ஹொங்கொங்கிலும், மக்கெளவிலும் நடைமுறையில் உள்ள சுயாட்சிமுறை வெற்றிபெற்றால், அதை ஏனைய மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தும் எண்ணம் சீன அரசாங்கத்திற்கு இருப்பதாக அண்மையில் பி.பி.சிக்கு வழங்கிய செவ்வியொன்றில் சீன இராசதந்திரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

உலக வல்லாதிக்க நாடாகும் கனவுடன் காய்களை நகர்த்தும் சீனா, ஈழத்தீவைத் தனது முழுமையான செல்வாக்கின் கீழ் வைத்திருக்க விரும்புகின்றது. இதற்குத் தடையாக இருப்பது ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினை. ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினை தீர்க்கப்படாத வரை ஈழத்தீவு மீதான இந்தியாவினதும், மேற்குலகினதும் தலையீடு இருந்து கொண்டே இருக்கும். ஹொங்கொங், மக்கெள ஆகிய சிறப்பு நிர்வாகப் பிராந்தியங்களின் பாணியில் அல்லாது விட்டாலும், தனது நில ஆளுகைக்கு உட்பட்ட ஏனைய மாநிலங்களில் உள்ளது போன்ற அரை சமஸ்டி முறை அல்லது அதிகாரப் பரவலாக்க முறை ஈழத்தீவில் நடைமுறைப்படுத்தப்பட்டு ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால், ஈழத்தீவு மீதான இந்தியாவினதும், மேற்குலகினதும் செல்வாக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்று சீனா கருதுகின்றது.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததும் புலம்பெயர் தமிழர் அமைப்பொன்றின் பிரதிநிதிகள் சிலர் சீன இராசதந்திரிகளை சந்தித்து ஈழத்தீவில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பேசினார்கள். தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை சீனா எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதற்குப் பதிலளித்த சீன இராசதந்திரி, மனித உரிமைகளைத் தாங்கள் அரசியல் பிரச்சினையாக எடுப்பதில்லை என்றும், ஆனால் தமிழர்கள் மட்டுமல்ல எந்த இனத்தோடும் வணிக உறவைப் பேண சீனா தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இன்று பதினொரு ஆண்டுகள் நெருங்கும் நிலையில், ஈழத்தமிழர் விடயத்தில் தனது வெளியுறவுக் கொள்கையை மீளாய்வு செய்யும் நிலையை நோக்கி சீனா நகரத் தொடங்கியுள்ளது. ஈழத்தமிழர்களின் மனித உரிமைகளுக்காக சீனா ஒருக்காலும் குரல்கொடுக்கப் போவதில்லை. ஆனால் ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில் திரைமறைவில் சில காய் நகர்த்தல்களை சீனா மேற்கொண்டு வருவதை உறுதிசெய்யும் அறிகுறிகள் அண்மைக் காலங்களில் தென்படத் தொடங்கியிருக்கின்றன.

இது தான் இந்தியாவை உறுத்துகின்றது. இதனால் தான் இந்தியாவின் குடுமி திடீரென்று ஈழத்தமிழர்களுக்காக ஆடத் தொடங்கியுள்ளது. எது எப்படியோ, இந்தியாவின் அரணாக இந்து சமுத்திரத்தின் தென்கோடியில் எப்பொழுதும் ஈழத்தமிழர்கள் இருப்பார்கள் என்று கடந்த பல தசாப்தங்களாக ஈழத்தமிழ் அரசியல் வித்தகர்கள் சிலர் கூறிவந்த உழுத்துப் போன பருப்பு இனியும் வேகுமா என்பது கேள்விக்குறி தான்.

நன்றி: ஈழமுரசு