ஜனநாயக போருக்கு தயாராவோம்!

சனி செப்டம்பர் 07, 2019

நாட்டு மக்களை நாளும் வஞ்சித்து வாட்டிக் கொண்டிருக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான ஜனநாயக போருக்கு தயாராகுவோம் என்று தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை நம்மை, நா தித்திக்கத் தித்திக்க இனிமையாக அழைக்கிறது. ஆன்மிகத்தில் நம்பிக்கையுள்ள மக்கள் கிரிவலம் வந்து மலையழகு கண்டு, கார்த்திகைப் பெருநாளில் மகாதீபம் கண்டு பரவசம் பெறுகின்ற அந்தத் திருவண்ணாமலை, திராவிட அரசியல் பேரியக்கமாம் தி.மு.கழகத்தின் நெடும் பயணத்திலும் சிறப்பான தனி வரலாறு படைத்த திருநகரமாகும்.

கூடிக்கலையும் கூட்டமல்ல முப்பெரும்விழா. கலைஞர் வகுத்துத் தந்த வழியில், தங்கள் இன்னுயிராக எந்நாளும் கழகம் காக்கும் இயக்கத்தின் முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கும் நிகழ்வும் இம்முறையும் இடம் பெறுகிறது.

கலைஞர் அறக்கட்டளை சார்பில், தமிழகத்தின் நான்கு மண்டலங்களில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகியவற்றில் சிறப்பாகப் பணியாற்றியவர்களில் தலா ஒருவருக்கும், ஊராட்சி செயலாளர்களில் தலா ஒருவருக்கும் ‘கழக விருது’ முப்பெரும் விழாவில் முதன்முறையாக வழங்கப்படவிருக்கிறது. கடந்த ஆண்டு விழுப்புரத்தில் நடைபெற்ற முப்பெரும்விழாவில் உங்களில் ஒருவனான நான் முன்மொழிந்த அறிவிப்பினைச் செயல்படுத்திடும் வகையில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

எதிரிகளை நாம் தேடிச் செல்வதில்லை. இனத்திற்கும் மொழிக்கும் மக்கள் நலனுக்கும் எதிராக எவரெல்லாம் செயல்படுகிறார்களோ அவர்களையெல்லாம் எதிர்த்துப் போராடி வெல்கின்ற வலிமை தி.மு.கழகத்திற்கே உரியது. இன்றைய அரசியல் களத்தில் எதிரணியில் இருப்பவர்கள் நமக்கு மட்டும் எதிரிகளல்லர். நாட்டு நலத்திற்கும் வளத்திற்கும் எதிரிகளாக இருக்கிறார்கள்.

குதிரை குப்புறத் தள்ளியது மட்டுமல்லாமல், குழியும் பறித்தது என்பதுபோல பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற நடவடிக்கைகளால் ஏழை நடுத்தர மக்களின் தொழில்களையும் வேலை வாய்ப்புகளையும் சீரழித்து, அவர்களின் வாழ்வை கீழே தள்ளிய மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது பெருந்தொழில் நிறுவனங்களே ஒன்றன்பின் ஒன்றாக மூடப்படுகிற அளவிற்கு பொருளாதாரத்திற்குப் படுகுழி பறித்திருக்கிறது.

விதை நெல்லை எடுத்து விருந்து சமைத்து களிப்பது போல, தன்னுடைய தவறான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்ட பாதிப்பினை ரிசர்வ் வங்கி இருப்பிலிருந்த 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து சமாளித்து, எதிர்கால நிலைமையைக் கேள்விக்குறியாக்குகிறது.

மத்தியில் ஆளும் ஆட்சியாளர்களால் ஜனநாயக உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகின்றன. மாநில உரிமைகள் நசுக்கப்படுகின்றன. ‘தவிடு தின்னும் ராஜாவுக்கு முறம் பிடிக்கும் மந்திரி’ போல, மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கெல்லாம் உடன்பட்டு, முழந்தாளிட்டு அவற்றை நிறைவேற்றுகிறது மாநிலத்தை ஆள்கின்ற அ.தி.மு.க. அரசு. ‘நீட்’ தேர்வு தொடங்கி, ரே‌ஷன் கார்டு வரை தமிழ்நாட்டின் உரிமைகளையும் நலன்களையும் பறிகொடுத்து விட்டு, பதவியை மட்டும் காப்பாற்றிக் கொண்டு, பகல் கொள்ளையில் பரவசம் கொண்டு, பல நாடுகளுக்கும் பவனி வந்து கொண்டிருக்கிறார்கள்.

சுற்றுலாத் துறைக்கு ஓர் அமைச்சர் இருப்பது வழக்கம். இங்கே முதல்வரில் தொடங்கி ஒட்டுமொத்த அமைச்சரவையும் குத்தகை போல சுற்றுலா அமைச்சரவை ஆகியிருக்கிறது.

நாட்டு மக்களை நாளும் வஞ்சித்து வாட்டிக் கொண்டிருக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான ஜனநாயகப் போரினைத் தொடர்ந்து நடத்திடவும், அந்தக் களங்களில் நாம் பெறப்போகும் வெற்றிகளுக்குக் கட்டியம் கூறிடும் வகையில், நம்மை ஆயத்தப் படுத்திக் கொள்ளவும் திருவண்ணாமலையில் நடைபெறுகிறது முப்பெரும் விழா.

முத்தமிழறிஞரின் இனிய உடன்பிறப்புகளே.. முப்பெரும்விழாவில் கூடிடுவோம். பெரியார், பேரறிஞர் கொள்கை வழி தி.மு.கழகம் எனும் பேரியக்கத்தைத் தலைவர் கலைஞர் வகுத்த வழியில் வாழ்நாளெல்லாம் கண்ணெனக் காத்திடுவோம்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.