கால அவகாசம் வழங்கியும் கட்டுப்படுத்த தவறிய ஐந்து வர்த்தகர்களுக்கு நீதிமன்றம் தண்டம்!

வெள்ளி நவம்பர் 01, 2019

வவுனியாவில் டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்த பொது சுகாதாரப்பரிசோதகர்களினால் கால அவகாசம் வழங்கியும் கட்டுப்படுத்த தவறிய ஐந்து வர்த்தகர்களுக்கு எதிராக நேற்று நீதிமன்றத்தால் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகர்ப்பகுதியில் அதிகரித்துக் காணப்படும் டெங்கு நுளம்பின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவும் வர்த்தக நிலையங்களைச் சீரமைக்கவும் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் களப்பரிசோதனை மேற்கொண்டு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் அக்கால அவகாசத்திற்குள் நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்த தவறிய வியாபார வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ஐந்து பேருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையின்போது வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவருக்கு தலா 25ஆயிரம் ரூபா வீதம் ஐந்து வர்த்தகர்களுக்கும் ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா நீதிமன்றத்தினால் தண்டமாக விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் 30ஆம் திகதி முதல் 2ஆம் திகதி வரையும் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு பொது சுகாதாரப்பரிசோதர்களுடன் சுகாதாரத் தொண்டர்கள் இணைந்து வவுனியா நகர்ப்பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாளை 2ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நடவடிக்கையில் டெங்கு நுளம்பு பெரும் இடங்கள் அவதானிக்கப்பட்ட வீடுகள், வியாபார நிலையங்கள், அரச, தனியார், பாடசாலைகள், நிலையங்கள் திணைக்களங்களுக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளைப்பார்வையிட்டு அவற்றிற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கால அவகாசங்கள் வழங்கப்படவும் உள்ளது.

இதன்போது தமது இருப்பிடங்கள், வர்த்தக நிலையங்களைத் துப்புரவு செய்து உதவுமாறு பொது சுகாதாரப்பரிசோதகர்களினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.