காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க ஏன் இவ்வளவு தாமதம்?

செவ்வாய் ஓகஸ்ட் 06, 2019

காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சு வைரலாகி வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 1984ம் ஆண்டு பரூக் அப்துல்லாவின் ஆட்சி கலைக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து மாநிலங்களவையில் காஷ்மீரின் சூழல் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 

இது குறித்து அன்றைய நாளில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசினார். இதில் அவர் பேசியதாவது:


ஒரு மாநிலத்தின் அரசை மத்திய அரசு கலைக்கும்போது, நிச்சயம் அது ஆளும் கட்சிக்கு நெருக்கடியாக அமையும். இதேபோலதான் கடந்த 1980ம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டபோது சிக்கல் உண்டானது. 
 

இப்போது அதே நிலைமைதான் பரூக் அப்துல்லாவின் கட்சிக்கும் ஏற்பட்டுள்ளது. எனினும், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான செயல்கள் நடந்தால் அதனை எதிர்த்து நடவடிக்கைகள் எடுப்பதுதான் சரியானது. 

 

மாநிலங்களவையில் ஜெயலலிதா


கடந்த 1983ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று காஷ்மீரில் குண்டு வெடிப்பு நடந்தது. ஆனால், அதற்கு முந்தைய நாள் பாகிஸ்தான் சுதந்திர் தினத்தின்போது அங்கு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இவை யாவும் இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் சீர்குலைப்பதை போல உள்ளது. இதனை தடுக்க அரசு சில நடவடிக்கைகள் எடுப்பது அவசியமாகிறது. 

இறுதியாக மத்திய அரசிடம் நான் 2 கேள்விகள் கேட்க வேண்டும். 1. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஆளுநர் ஆட்சியில் வைப்பதற்கு மத்திய அரசு பரிசீலனை செய்யுமா? 2. அம்மாநிலத்தை இந்தியாவுடன் முழுமையாக இணைப்பதில் ஏன் இவ்வளவு தாமதம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது? மற்றும் காஷ்மீரில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏன் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை?

இவ்வாறு அவர் பேசியிருந்தார். 

இந்த பேச்சு மூலம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு ஆதரவான நிலைப்பாட்டையே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடுத்திருந்தார் என்பது தெரிய வந்துள்ளது.