காவேரி கூக்குரல் இயக்கத்துக்கு கர்நாடக அரசு ஆதரவு!

திங்கள் செப்டம்பர் 09, 2019

காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காக சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ள காவேரி கூக்குரல் இயக்கத்துக்கு கர்நாடக மாநில அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரித்துள்ளார்.

காவேரி கூக்குரல் இயக்கத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில அரசுகள், விவசாயிகளின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தலகாவேரியில் இருந்து திருவாரூர் வரை மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, பெங்களூரூவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்ற பொதுக் கூட்டம் திருபுரவாசினி அரண்மனை மைதானத்தில் நேற்று (செப்.8) நடைபெற்றது.

இதில் கர்நாடக முதல்வர் திரு.பி.எஸ்.எடியூரப்பா, சுற்றுலா துறை அமைச்சர் சி.டி.ரவி, மக்களவை உறுப்பினர் பி.சி.மோகன், பயோகான் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கிரண் மசூம்தார் ஷா, மைசூரூ அரண்மனையின் ராஜமாதா பிரமோதா தேவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இவ்விழாவில் முதல்வர் எடியூரப்பா பேசியதாவது:
 

காவேரி கூக்குரல் என்ற இந்த இயக்கம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆறரை கோடி மக்களை விழிப்படைய செய்துள்ளது. இவ்வியக்கத்துக்கு கர்நாடக மாநில அரசு, தன்னால் முயன்ற அனைத்து வழிகளிலும் முழு ஆதரவளிக்கும். முடிந்த அளவு அதிக மரக் கன்றுகளை உற்பத்தி செய்து வழங்குமாறு கர்நாடக வனத் துறைக்கு நான் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளேன்.

 

காவேரி கூக்குரல் இயக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற எடியூரப்பா மற்றும் தலைவர்கள்


காவேரி நதிக்கு புத்துயிரூட்டும் உன்னத நோக்கத்திற்காக கர்நாடகாவும் தமிழ்நாடும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன். நம் பிரதமர் நரேந்திர மோடியும் காவேரி கூக்குரல் இயக்கத்துக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

உங்கள் (சத்குரு) தலைமையின் கீழ் காவேரி வடிநிலப் பகுதியில் 242 கோடி மரங்கள் நடுவதற்காக தங்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் நாங்கள் பூர்த்தி செய்வோம். இதை நாங்கள் மாநில அரசின் கடமையாகவே கருதுகிறோம். இவ்வாறு முதல்வர் எடியூரப்பா பேசினார்.

காவேரி கூக்குரல் பேரணி செப்.11-ம் திகதி ஓசூர் வழியாக தமிழகம் வர உள்ளது. பின்னர், தர்மபுரி, மேட்டூர், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுச்சேரி வழியாக சென்னை வந்தடையும். பேரணியின் நிறைவு நிகழ்ச்சி செப்.17-ம் திகதி கோவையில் நடைபெற உள்ளது.