கேரளாவில் தங்கியிருந்த இலங்கை நபர் கைது!

ஞாயிறு மே 05, 2019

கொழும்பு நகரில் ஈஸ்டர் தினத்தன்று தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் இந்தியாவில் சிலருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் நிலையில் கடவுச்சீட்டு  இல்லாமல் வந்த இலங்கை நபரை கேரளா காவல் துறையினர் கைது செய்தனர். 

 கொழும்புவில் கடந்த மாதம் 21-ந் திகதி ஈஸ்டர் பண்டிகையின் போது 3 தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட 8 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்தது.

9 பயங்கரவாதிகள் நடத்திய இந்த தற்கொலை படை தாக்குதலில் 253 பேர் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் மூலம் ஐ.எஸ். இயக்கம் இந்த நாசகரமான செயலில் ஈடுபட்டது. 

இதை தொடர்ந்து இலங்கை அரசு அந்த அமைப்புக்கு தடை செய்து 100-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தது. 

இந்த நிலையில் இலங்கையில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இந்தியாவின் காஷ்மீர் மற்றும் கேரளாவில்  பயிற்சி பெற்று இருக்கலாம் என்று இலங்கை ராணுவ தளபதி மகேஷ் சேனநாயகா தெரிவித்து இருந்தார். இதை இந்திய அரசு மறுத்துள்ளது. 

இந்நிலையில், கடவுச்சீட்டு  இல்லாமல் வந்த இலங்கை நபரை கேரளா காவல் துறையினர் நேற்றிரவு கைது செய்தனர். 

திருவனந்தபுரத்தில் உள்ள தம்பனூர் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த அந்நபரிடம் காவல் துறை நடத்திய விசாரணையில் அவரது பெயர் மலுகே ஜுத் செல்பான் டியஸ்(30) என்று தெரியவந்துள்ளது. 

நாட்டின் தென்பகுதியில் உள்ள கேரளாவுக்கு வந்தது ஏன்? என்பது தொடர்பாக சரியான பதில் அளிக்காத அவர், கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் திகதி கேரளா வந்ததாகவும், கடவுச்சீட்டு , விசா உள்ளிட்ட முக்கிய ஆவணங்களுடன் தனது கைப்பை திருட்டுப் போனதாகவும் காவல் துறையினர்  தெரிவித்துள்ளார். 

இப்படி ஒருநபர் பிடிபட்டது தொடர்பாக கேரள மாநில காவல் துறை அளித்த தகவலையடுத்து தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட உளவுத்துறை அதிகாரிகள் தற்போது அவரிடம் விசாரித்து வருகின்றனர்.