கேரளாவிலிருந்து நியூசிலாந்துக்கு படகு வழியாக சென்ற தமிழர்கள் எங்கே?

திங்கள் மே 06, 2019

கேரளாவின் முன்னம்பம் துறைமுகத்திலிருந்து படகு வழியாக நியூசிலாந்து அடையும் முயற்சியில் 230 பேர் மாயமாகியுள்ளனர் என்று கடந்த ஜனவரி மாதம் வெளியாகிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கையும் பதிவு செய்திருந்தது கேரள காவல்துறை. 

இவர்களில் பெரும் பகுதியினர் தெற்கு டெல்லியில் உள்ள மதாங்கீர் பகுதியில் வசிக்கும் தமிழர்கள் எனக் கூறப்பட்டது. சுமார் 4 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை படகில் சென்றவர்கள் குறித்த எந்தவித தகவலும் வெளியாகவில்லை. 

இந்த நிலையில், டெல்லியில் வரும் மே 12 அன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவிருக்கும் சூழலில், ஆம் ஆத்மி கட்சியினரிடம் மதாங்கீர்வாசிகள் உதவி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

“அவர்களிடமிருந்து எந்த தகவலும் இல்லை. கடைசியாக கேரளாவிலிருந்து படகு ஏறும் போது அழைத்தார்கள். எந்த நாட்டுக்கு செல்கிறார்கள் என்பதையும் தெளிவாக சொல்லவில்லை,” என மதாங்கீரில் வசிக்கும் சேகர் தெரிவித்திருக்கிறார். சேகரின் மகள் சிவானி (25)  மற்றும் மருமகன் பிரேம் ரவி(31) அவர்களது 2வயது குழந்தை சிக்கூவும் மாயமான படகில் பயணமாகியிருக்கின்றனர். 

நூற்றுக்கணக்கானோருடன் சென்ற அப்படகு, மோசமான மற்றும் புயல்காற்று அதிகமுடைய இந்தோனேசியா- ஆஸ்திரேலியா கடல்பரப்பிடையே தான் பெரும்பாலும் சென்றிருக்கக்கூடும் என எண்ணப்படுகின்றது. மதாங்கீரிலிருந்து 50க்கும் மேற்பட்டவர்கள் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்திருந்தது. 

இது தொடர்பாக பேசியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் கோபால் ராய், “இதில் பெரும்பாலானோர் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். கேரளா சென்று அவர்களின் உறவினர் நிலையை அறியும் அளவுக்கு அவர்களிடம் வசதி கிடையாது. அதனால் டெல்லி காவல்துறையின் உதவியை கோருகிறார்கள். ஆனால் டெல்லி காவல்துறை டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசின் கீழ் வராது என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை,” எனக் கூறியிருக்கிறார். 

அதிக சம்பளமுடைய நல்ல வேலை, நல்ல வாழ்க்கை என்பதை மனதில் வைத்து நியூசிலாந்து செல்லும் முயற்சியினை அவர்கள் மேற்கொண்டிருக்கின்றனர். 

“கடந்த 10 ஆண்டுகளில் மதாங்கீரிலிருந்து பலர் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர். ஆனால், நியூசிலாந்துக்கு செல்வது இதுவே முதல்முறை,”  என மதாங்கீரில் வசிக்கும் பின்னி மாத்யூஸ் கூறுகிறார். 

இந்த பயணத்தை ஏற்பாடு செய்த நபர், அடையாள ஆவணங்களை எதையும் வைத்திருக்க வேண்டாம் எனக் கூறியதாக குறிப்பிடும் சேகர், “நியூசிலாந்தில் அதிகாரிகள் கேட்டால் தங்களை இலங்கையர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளும்படி கூறினார்,” எனத் தெரிவித்திருக்கிறார். 

சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கேரளாவிலிருந்து நியூசிலாந்துக்கு படகு வழியாக வெளியேறி, 4 மாதங்கள் கடக்கும் நிலையில் அவர்கள் குறித்தோ அவர்கள் சென்ற படகு குறித்தோ எந்தவித தகவலும் வெளியாகவில்லை.  

கடந்த 2013 ஆண்டு முதல் கடுமையான எல்லைப பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, ‘கடல் வழியாக வரும் அகதிகளை ஒருபோதும் நாட்டினுள் குடியமர்த்த மாட்டோம், அவர்களின் படகுகள் திருப்பி அனுப்பப்படும்’ எனத் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றது. ஆஸ்திரேலியா, மற்றும் நியூசிலாந்துக்கு படகு வழியாக செல்லும் முயற்சியில் நூற்றுக்கணக்கானோர் கடலில் மூழ்கி மரணித்த சம்பவங்களும் உள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.