கள்ள மனம் துள்ளும்- பிலாவடிமூலைப் பெருமான்

வியாழன் ஜூலை 18, 2019

வணக்கம் பிள்ளையள்!
எப்பிடி, எல்லோரும் சுகமாக இருக்கிறியள் தானே?
என்னடா,கொஞ்ச நாளாக கிழடு கண்டவுடன் சுகம் விசாரிக்காமல் விசயத்துக்கு வாறது, இப்ப என்னவென்றால் படு குசியாக சுகம் விசாரிக்குது என்று நீங்கள் தலையைச் சொறியிறது எனக்கு விளங்குது.

சிங்கள நாட்டிலை படு குசியான விசயங்கள் நடக்கும் பொழுது நான் மட்டும் என்ன முகத்தைத் தொங்கப் போட்
டுக் கொண்டே இருக்கிறது?

அந்த நாட்களில் எங்கடை ஊரில் ஒரு பழமொழி சொல்கிறவையள். ‘திருடப் போனவன் தப்பினான், பார்க்கப் போனவன் பிடிபட்டான்’ என்று அப்பிடித் தான் இப்ப சிங்கள நாட்டிலை கூத்துகள் நடக்குது.

அது தான் பிள்ளையள், உந்த உயிர்த்த ஞாயிறு படுகொலைகளைத் தடுத்து நிறுத்தாமல் விட்டது யார் என்று அவனவன் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்க, உதுக்கு சிறீசேன மாத்தையா தான் பதில் சொல்ல வேண்டும் என்று அந்த நேரத்தில் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த கேமசிறீ பெர்னான்டோவும், காவல்துறை மாஅதிபர் பூஜித ஜெயசுந்தரவும் குற்றம் சுமத்தினவையள்.உடனே பொங்கி எழுந்த சிறீசேன மாத்தையா, கேமசிறீயாரை பதவி விலக நிர்ப்பந்திச்சதோடு,பூஜித் மாத்தையாவை கட்டாய விடுமுறையில் வீட்டுக்கு அனுப்பினவர்.

காவல்துறை ஆணையம் என்று ஒன்று இல்லை என்றால், ஆளையே பதவியில் இருந்து சிறீசேன மாத்தையா தூக்கியிருப்பார். ஏதோ, பூஜித மாத்தையாவின்ரை நல்ல காலம், அப்படி செய்யிறதுக்கு சிறீசேன மாத்தையாவால் முடியவில்லை.

ஆனாலும் அடுப்பேறின சட்டி காய்ஞ்சு தானே ஆக வேண்டும்?

அது தான் சரியான சந்தர்ப்பம் கிடைக்கேக்குள் இரண்டு பேருக்கும் ஆப்பு வைக்கிறதுக்கு என்று சத்தம் சந்தடியில்லாமல் அலுவல் பார்த்துக் கொண்டிருந்த சிறீசேன மாத்தையா, இரண்டு பேரையும் கைது செய்கிறதுக்கு போன கிழமை சி.ஐ.டி.காரன்களுக்கு பச்சைக் கொடி காட்டியிருக்கிறார்.

ஆனால் அவையள் என்ன லேசுப்பட்ட ஆட்களே?

தங்களைத் தூக்கிறதுக்கு சி.ஐ.டி வருகுது என்று தெரிஞ்சவுடன் இரண்டு பேருமே ஓடிப் போய் நெஞ்சைப் பிடிச்சுக் கொண்டு ஆசுப்பத்திரியில் படுத்திட்டாங்கள். இவையள் இரண்டு பேரும் நெஞ்சைப் பிடிச்சுக் கொண்டு படுத்ததும் என்ன நடக்குது என்று டாக்குத்தர்மாருக்கு விளங்கவில்லை.

ஒழுங்காக நாலு கோடம்பாக்காத்து சினிமா படங்களைப் பார்த்திருந்தால் ஆவது என்ன நடக்குது என்று டாக்குத்தர்மாருக்கு விளங்கியிருக்கும்.

பாவம், அந்த டாக்குத்தர்மார் சரியான அப்பிராணியள் தான்.

இரண்டு பேருக்கும் டாக்குத்தர்மார் ஈ.சி.ஜி, அது இது என்று ஆயிரத்தெட்டு பரிசோதனைகளை செய்து பார்த்தை
வயள்.அதுக்குப் பிறகு தான் இரண்டு பேரும் நாடகம் நடத்துகினம் என்று டாக்குத்தர்மாருக்கு விளங்கிச்சுது.

ஆனால் ஒன்று பாருங்கோ: உந்த கேமசிறீயாருக்கும், பூஜித மாத்தையாவுக்கும் நெஞ்சு படபடத்துக் கொண்டு தான் இருந்ததாம்.

கள்ள மனம் என்ன துள்ளாமலே இருக்கும்?

இதுக்குள்ளை இன்னுமொரு பகிடியும் நடந்தது.

போதைப் பொருள் கடத்துகிற ஆட்களை தூக்கில் போடுகிறதுக்கு சிறீசேன மாத்தையா போட்ட உத்தரவுக்கு போன கிழமை உச்சநீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு விதிச்சிட்டுதாம். நாலு அலுகோசுகளைப் பிடிச்சு ஐந்து, ஆறு போதைப் பொருள் கடத்தல்காரர்களை தூக்கில் போடலாம் என்று சிறீசேன மாத்தையா துடியாய் துடிச்சவர். ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கலாம் என்று மனுசன் துடியாய் துடிச்சால், அவருக்கு ஆப்பு வைக்கிறதுக்கு என்று ரணில் மாத்தையா நியமித்த நீதியரசர்மார் கொஞ்சப் பேர் கச்சையை வரிந்து கட்டிக் கொண்டு மல்லுக் கட்டுகீனம்.
இப்ப பழையபடி வேலையில்லாமல் அலுக்கோசுமார் அலுப்புத் தட்டின நிலையில் இருக்கீனமாம்.

உதென்னடா, அலுக்கோசு என்று யாரை இந்த நைன்ரி திட்டுகுது என்று குழம்பாதேயுங்கோ. இப்ப எங்கடை ஊரிலை விசர்பிடிச்ச ஆட்களைத் தான் அலுக்கோசுகள் என்று சொல்கிறவையள். ஆனால் எங்கடை அப்பு சொல்லுவார்

வெள்ளைக்காரன் காலத்தில் ஆட்களைத் தூக்கிலை தொங்க விடுகிற வேலை செய்கிற ஆட்களைத் தான் அலுக்கோசுகள் என்று சொல்கிறவையளாம். அப்பிடி வேலை செய்த சில பேருக்கு மண்டை கழன்றதால் பின்நாட்களில் விசர்பிடிச்ச ஆட்களையும் அலுக்கோசுகள் என்று எங்கடை ஆட்கள் சொல்கிறவையள்.

இப்ப இருக்கிற கேள்வி என்னவென்றால், உண்மையில் சிறீசேனா இலங்கையின்ரை அதிபராகத் தான் இருக்கி
றாரோ, அல்லது அவரின்ரை வேலையை உச்சநீதிமன்றத்தில் பணிபுரிகின்ற ரணில் மாத்தையாவின்ரை நீதியரசர்மார் செய்கீனமோ என்பது தான். சும்மா நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் என்று சிறீசேனாவுக்குப் பெயரே தவிர, தான் நினைச்சது எதையும் செய்ய முடியாத நிலையில் தான் மனுசன் இப்ப இருக்கிறார்.

உதுக்குத் தான் சொல்கிறது இரண்டு ஓடத்தில் கால் வைக்கக் கூடாது.

ஒன்றில் ரணில் மாத்தையாவின் வாலைப் பிடிச்சுக் கொண்டு இருந்திருக்க வேண்டும்.

இல்லையயன்றால் மகிந்த ராஜபக்சவின்ரை வாலைப்பிடிச்சுக் கொண்டு தன்ரை காலத்தை ஓட்டியிருக்க வேண்டும். இப்ப இரண்டு இல்லாமல், ஒரு கோமாளி மாதிரி சிறீசேனா மாறிக் கொண்டிருக்கிறார்.

இனி அடுத்தது கேமசிறீயாரும், பூஜித மாத்தையாவும் என்ன கூத்து அடிக்கப் போகீனம் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் பிள்ளையள்:உண்டு கொழுத்த நண்டு ஒருக்காலும் வலையில் இருக்காது. உது தான் சிறீசேன மாத்தையாவின்ரை விசயத்திலும் நடக்கப் போகுது. நீங்கள் இருந்து பாருங்கோ.

வேறை என்ன பிள்ளையள்? அப்ப நான் போய்ட்டு வருகிறேன்.

நன்றி: ஈழமுரசு