கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் 1 கோடி ரூபாய் பரிசு - ஜாக்கிசான்!

திங்கள் பெப்ரவரி 10, 2020

சீனாவில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை  908 பேர் உயிரிழந்துள்ளனர்.  வைரஸ் தாக்குதலால் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்க இடம் இல்லாத சூழல் நிலவுகிறது. ஏற்கனவே 1,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை உகான் நகரில் 10 நாட்களுக்குள் சீன அரசு கட்டி முடித்து உள்ளது. மேலும், மருத்துவமனைகளை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

மருத்துவமனைகளில் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்கள் விடுப்பின்றி பணியாற்றி வருகிறார்கள்.  கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. வைரஸ் பரவாமல் தடுக்க சீன அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில்,  பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான்  சமூக வலைதளத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்த கொடூர வைரஸை தோற்கடிக்க விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் முக்கியம். என்னைப் போன்று பலரும் இதனை நம்புகின்றனர்.  அதனால் வைரசை கட்டுப்படுத்த விரைவில் ஒருமாற்று மருந்தை உருவாக்க முடியும் என்று நான் முழு மையாக நம்புகிறேன்.

இவ்வாறு தனி நபரோ அல்லது ஒரு அமைப்போ கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் அவர்களுக்கு ஒரு மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் 1 கோடி ரூபாய் அளிப்பேன்.

இந்த அறிவிப்பு பணத்தை பொருட்டாகக் கொண்டதல்ல. எனது நண்பர்கள் வைரசால் பாதிக்கப்பட்டு போராடுவதை பார்க்க நான் விரும்பவில்லை.அவர்கள் நன்றாக வாழ வேண்டும் அதற்காகத்தான்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.