கொரோனா வைரஸ் அழியாமலும் போகலாம்

வியாழன் மே 14, 2020

கொரோனா வைரஸ் நீண்ட காலம் இருக்கலாம் என்றும், ஒரு போதும் அழியாமலும் போகலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தொடர் ஊரடங்கால் தொழில்கள் முடங்கி உலக பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. ஊரடங்கை தளர்த்தி பொருளாதாரங்களை சமநிலைப்படுத்தவும், இரண்டாவது அலை நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும் உலக நாடுகள் போராடி வருகின்றன. இதன்மூலம் கொரோனா வைரசின் தாக்கம் இப்போதைக்கு முடிவுக்கு வராது என்றே வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்ட நிர்வாக இயக்குநர் மைக் ரயான் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

தடுப்பு மருந்து இல்லாமல், உலக மக்களுக்கு போதுமான அளவு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க பல ஆண்டுகள் ஆகக்கூடும். ஒருவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டறியப்பட்டாலும், அந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பெரும் முயற்சிகள் தேவைப்படும். 

 

கொரோனா வைரஸ் பரிசோதனை

 

போதுமான அளவுகளை உற்பத்தி செய்வதற்கும், அவற்றை உலகளவில் விநியோகிப்பதற்கும் தீவிர முயற்சி தேவைப்படும். எனவே நீண்ட காலம் இந்த வைரஸ் இருக்கலாம். நமது சமூகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பரவி வரும் உட்பரவு வைரஸ்களில் ஒன்றாக கொரோனா வைரஸ் மாறலாம். மேலும், இது முற்றிலும் அழிய கூடிய நிலையை அடையாமலும் இருக்கலாம். 

எச்.ஐ.வி. அழிக்கப்படவில்லை; ஆனால், அந்த வைரஸை கட்டுப்படுத்தும் வழிகளை நாம் கண்டறிந்துள்ளோம். கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் என்பதை கணிப்பதையும் என்னால் நம்ப முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.