கொரோனாவின் ரிஷிமூலம் எது?

செவ்வாய் ஏப்ரல் 07, 2020

கொரோனாவின் பிடியில் சிக்கி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நியூயார்க் வாழ் இந்திய வம்சாவளி வக்கீல் ரவி பட்ரா கூறுகையில், ``கொரோனாவில் இருந்து தப்பி மனித இனம் உயிர் வாழ வேண்டும். கொரோனாவின் ரிஷிமூலம் எது? கடந்தாண்டு இறுதியில் சீனாவில் எங்கிருந்து பரவத் தொடங்கியது என்ற அடிப்படை உண்மையை சீனா உலகிற்கு தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அமெரிக்கா உள்பட உலக நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள், மருத்துவர்கள் அதற்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க முடியும். அதுவரை, யாரும் வேலைக்கு, பள்ளிக்கு, விளையாட செல்ல முடியாது.

செயலற்ற நிலையில் இருக்கும் மண்டல, தேசிய, பிராந்திய, உலகப் பொருளாதாரம் மீட்கப்படாது. இதே நிலை நீடித்தால், உலகளவில் வினியோகம் உள்ளூர் சந்தைகளில் முடக்கப்படும். ஏற்றுமதிக்கான சந்தை ஆட்டம் கண்டுவிடும். அதன் பின்னர், ஆசியா, ஐரோப்பாவை இணைக்கும் ஷி ஜின்பிங்கின் பட்டுப் பாதை தொற்றுகளை உலகமயமாக்க மட்டுமே பயன்படுத்தப்படும். அது கூட பொது சுகாதார காரணங்களை முன்னிட்டு முடக்கப்படும்'' என்று தெரிவித்தார்.