கோட்டாபய ராஜபக்ஷவை தெரிவு செய்திருப்பது காலத்தின் தேவை-பொன்சேகா!

புதன் ஓகஸ்ட் 14, 2019

தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை தெரிவு செய்திருப்பது காலத்தின் தேவையின் அடிப்படையில் பொருத்தமானது என  பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்கக் கூடிய ஒருவரை ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவுசெய்ய வேண்டும் எனவும், தன்னிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தால், ஏற்றுக்கொள்ளத் தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு விடயத்தில் ஐ.தே.கவின் தலைவர் எடுக்கும் முடிவுக்குத் தான் கட்டுப்பட்டு நடப்பேன் என்றும், இருந்தபோதும் பொருத்தமற்ற ஒருவர் வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டால் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மனசாட்சி இடமளிக்காது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இராஜகிரியவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.