கோத்தபாயவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்குச் சென்ற யுவதி பாலியல் துஷ்பிரயோகம்

வெள்ளி நவம்பர் 08, 2019

கோத்தபாயவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்குச் சென்ற யுவதி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் பேருந்தில் சென்ற இளைஞன் ஒருவனே அந்தப் பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பிரசார கூட்டத்திற்குச் சென்றுவிட்டு பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே யுவதி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் எம்மாத்தகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியடசர்கள் ருவான் குணசேகர தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் குறித்த யுவதியின் தந்தை வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் ருவான் தெரிவித்தார். 

தாயாருடன் (மனைவி) பிரசார கூட்டத்தில் பங்கேற்க சென்ற மகள் நேற்று (07) இரவு 11 மணிவரை வீடு திரும்பவில்லை என யுவதியின் தந்தை முறைப்பாட்டில் தெரிவித்தார். 

பொலிஸார் முன்னெடுத்த விசாரணையின் போது அரசியல் பிராசார கூட்டத்தில் பங்கேற்று பஸ்ஸில் வீடு திரும்பிக்கொண்டிருந்த இளைஞனால் குறித்த யுவதி எம்மாத்தகம, எல்பிட்டிய, பலவத்தக காட்டுப்பகுதியில் பஸ்ஸில் இருந்து இறக்கி அழைத்துச்செல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தின் சந்தேக நபரான  எம்மாத்தகம பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார். யுவதியை சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தி பரிசோதனை அறிக்கையை பெற்றுக்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.