லெப்.கேணல் தனம் உட்பட்ட 84 மாவீரர்களினதும் நினைவு நாள்!

திங்கள் ஜூன் 24, 2019

பெரியமடுப் பகுதியில் 24.06.1997 அன்று ஜெயசிக்குறு நடடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 2வது ஊடறுப்புத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் தனம்(ஐங்கரன்) உட்பட்ட 84 மாவீரர்களினதும் நினைவு நாள் இன்றாகும்.

இதேநாளில் ஜெயசிக்குறு படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலில்களில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மேலும் 9 மாவீரர்களினதும் 22ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

ஜெயசிக்குறு படைநடவடிக்கை மூலம் முன்னேறி பெரியமடுப் பகுதியில் நிலைகொண்டிருந்த படையினரால் அமைக்கப்பட்டிருந்த ஆட்டிலறி, மோட்டார் ஏவுதளங்களை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளின் படையணிகளால் 24.06.1997 அன்று ஊடறுப்புத் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது.

இத்தாக்குதலில் பல நூற்றுக் கணக்கான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன், பெருமளவானோர் படுகாயமடைந்தனர். இதன்போது 120மி.மீ ஆட்டிலறி பீரங்கி உட்பட பெருமளவான ஆயுத தளபாடங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

இந்த வெற்றிகரத் தாக்குதலில் லெப்.கேணல் தனம் அவர்களுடன் 83 போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர்.

இதேநாளில் வவுனியா மாவட்டம் புளியங்குளம், பகுதியிலும் பனிக்கநீராவியடிப் பகுதியிலும் ஜெயசிக்குறு படையினருடன் இடம்பெற்ற எதிர்பாராத மோதல்களில் 9 போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கம்.