மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்!

திங்கள் ஜூலை 15, 2019

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டுதோறும் நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர்நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் 26 ஆவது ஆண்டாக    சார்சல் நெல்சன் மண்டேலா மைதானத்தில் நேற்று 14.07.2019 ஞாயிற்றுக்கிழமை  இரண்டாவது நாளாக இடம்பெற்றிருந்தது. 

மைதானத்தின் வாயிலில் அமைந்திருக்கும் தமிழீழ விடுதலை புலிகளில் முதற்களப்பலியான  மாவீரர்  லெப். சங்கர் ஞாபகார்த்த நினைவுத்தூபிக்கு முன்பாக சுடரினை மூன்று மாவீரர்களின் சகோதரர் ஏற்றிவைத்தார். தொடர்ந்து மைதானத்தில் மாவீரர் திருவுருவப்படத்திற்கான ஈகைச் சுடரினை 18.05.1984 அன்று பொலிகண்டிப் பகுதியில் வீரச்  சாவடைந்த  வீரவேங்கை செல்வம் அவர்களின் சகோதரி ஏற்றி வைத்து மலர் வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகின.

இந்த வருடம் ஒன்பது கழகங்கள் பங்குபற்றியுள்ளன.  நேற்றை போட்டிகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்துகொண்டிருந்தனர். போட்டி நடத்துநர்களும் தொடர்ந்து தமது கடமைகளை சிறப்பாக நடாத்திவருவதைக் காணக்கூடியதாக இருந்தது. போட்டிகள் தெரிவுப்போட்டிகளாகவும் சில போட்டிகள் இறுதிப்போட்டிகளாகவும் இடம்பெற்றிருந்தன.

இரண்டுதினங்களும் ஓட்டம், முப்பாய்ச்சல், நீளம் பாய்தல், உயரம் பாய்தல், நின்று பாய்தல், பந்தெறிதல், கயிறடித்தல் போன்ற போட்டிகளோடு நேற்றைய தினம் சட்டம் ஏறிப் பாய்தல் போட்டியும் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது.  
தொடர்ந்து போட்டிகள் எதிர்வரும் 20.07.2019 சனிக்கிழமை தெரிவுப்போட்டிகள் இடம்பெற்று மாபெரும் இறுதிப்போட்டிகள் மறுநாள் 21.07.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு   சார்சல் நெல்சன் மண்டேலா மைதானத்தில் இடம்பெறவுள்ளன. இப்போட்டிகளைக் கண்டுகளிப்பதற்கு அனைவருக்கும்  ஏற்பாட்டாளர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.