மேற்குலகம் தமிழர்களைக் கைவிடுகின்றதா, கையாள்கின்றதா? - 1

வியாழன் நவம்பர் 14, 2019

மண்கவ்விய சிறீலங்கன் அடையாளத் திணிப்பு கலாநிதி ர.சிறீஸ்கந்தராஜா

 

‘எத்தனை தடவைகள் உங்களிடம் சொல்லி விட்டோம், நாங்கள் சிறீலங்கன்கள் இல்லை என்று. உங்களுக்கு அது புரியவில்லையா?’

 

சூரிச் (Zurich) மாநகரில் உள்ள பிரெண்ட்ஸ் கோர்னர் (Friends Corner) (நண்பர்களின் மூலை) என்ற தமிழ் உணவு விடுதி அதிரும் வகையில் அந்த இளைஞர் கூறியது அனைவரையும் ஒரு கணம் அவரின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.

 

அவருக்கு நேரெதிரே இருந்த சுவிஸ் இராசதந்திரி மறுகணமே அமைதியானார். அடிக்கடி கொவ்வைப் பழம் போல் சிவக்கும் அவரது முகம் மட்டும் அந்தக் கணத்தில் எந்தச் சலனமும் அற்றுக் காணப்பட்டது.

 

கடந்த காலத்தைக் கையாளுதல் (Dealing with the Past) என்ற மகுடத்தின் கீழ் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் சுவிற்சர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சு ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வின் நிறைவாக பிரண்ட்ஸ் கோர்னர் என்ற தமிழ் உணவு விடுதியில் இராப்போசனம் நடந்தேறிக் கொண்டிருந்த பொழுது தான் அனைவரும் திரும்பிப் பார்க்கும் வண்ணம் அந்த இளைஞர் பொரிந்து தள்ளினார்.

 

ஆனாலும் அந்த இளைஞர் மீதான கவனம் ஒரு சில வினாடிகளுக்குத் தான் நீடித்தது. சுவிற்சர்லாந்து அரசாங்கத்தின் பணத்தில் வழிந்தோடிக் கொண்டிருந்த பியர் (beer) வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளில் பெரும்பாலானவர்கள், இப்பொழுது தமக்குப் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்த கொத்து ரொட்டியையும், இடியப்பக் கொத்தையும் வேட்டையாடுவதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்கள்.

 

மாநாடு தொடங்கியது 18.10.2019 வெள்ளிக்கிழமை காலை. ஆனால் அதற்கு முதல் நாள் வியாழன் இரவே அனைவரும் சூரிச் மாநிலத்தின் யூஎற்லிபேர்க் (Uetliberg) மலைப்புறக் கிராமத்தில் உள்ள யூ.ரி.ஒ (U.T.O.) நான்கு நட்சத்திர விடுதியை வந்தடைந்திருந்தார்கள்.

 

அன்று இரவு நடந்த இராப்போசனத்தில் பாரம்பரிய சுவிற்சர்லாந்து உணவோடு அனைவருக்கும் ஐரோப்பிய முறைப்படி வைன் (wine) பரிமாறப்பட்டது. இரவல் சீலையில் ஒய்யாரக் கொய்யகம் என்ற கதையாக அதுதான் தருணம் என்பதாக ஒரு சில தமிழ்ப் பிரதிநிதிகள் மதுவெள்ளத்தில் மிதந்த வண்ணம் இருந்தார்கள்.

 

அங்கு நின்ற ஒரு சிலருக்குத் தாங்க முடியாத பெருமை. புலம்பெயர் தேசங்களில் ஆயிரத்தெட்டுத் தமிழ் அமைப்புக்கள் இருக்க அவற்றில் பதினேழு அமைப்புக்களை மட்டும் தான் மூன்று நாள் மாநாட்டிற்கு சுவிற்சர்லாந்து அரசாங்கம் அழைத்திருந்தது. மாநாட்டில் மொத்தம் பத்தொன்பது பேர் பங்குபற்றியிருந்தாலும், ஒரே ஒருவர் மட்டும் சுயாதீன ஊடகவியலாளர் என்ற வகையில் அழைக்கப்பட்டிருந்தார்.

 

தவிர, ஏனைய பதினெட்டுப் பேரில் இரண்டு பேர் ஒரே அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

 

மாநாடு நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரித்தானியாவில் இயங்கும் முன்னணி அமைப்பொன்றின் பிரதிநிதி ஒருவர் இன்னொரு அமைப்பின் பிரதிநிதியுடன் தொடர்பு கொண்டு அடுத்த வாரம் பிரித்தானிய நாடாளுமன்றில் தம்மால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இனவழிப்பு அங்கீகார மாநாட்டிற்கு வருகை தருமாறு கேட்டிருக்கிறார்.

 

அதற்கு மறுப்புத் தெரிவித்த மற்றைய அமைப்பின் பிரதிநிதி இவ்வாறு கூறினாராம்: ‘நீங்கள் எங்களைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறியள்? இந்தக் கிழமை சூரிச்சில் சுவிற்சர்லாந்து அரசாங்கம் மாநாடு ஒன்றை நடத்துகின்றது. அதில் பிரித்தானியாவில் இருந்து எங்களுக்கு மட்டும் தான் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. அந்த அளவிற்கு நாங்கள் இராசதந்திர செயற்பாடுகளில் ஈடுபடுகின்றோம். எனவே முற்கூட்டியே எங்களுக்குத் தெரியப்படுத்தாமல் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நீங்கள் நடத்தும் மாநாட்டில் கண்ணை மூடிக் கொண்டு நாங்கள் பங்கேற்க மாட்டோம்.’

 

உண்மை தான். சுவிற்சர்லாந்து அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டிற்கு தங்களை அழைக்கவில்லை என்று பல புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மனதுக்குள் வெதும்பிக் கொண்டிருந்தார்கள். மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்த சிலரோ, தங்களை மட்டும் தான் புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சுவிற்சர்லாந்து அரசாங்கம் கருதுவதாக எண்ணி அகமகிழ்ந்து கொண்டார்கள்.

 

அவர்களுக்குத் தாங்க முடியாத பெருமை. அதுவும் சும்மாவா? சுவிஸ் அரசாங்கத்தின் செலவில் இலவச விமானப் பயணம். நான்கு நட்சத்திர விடுதியில் சொகுசு அறை. மூன்று நேர உணவு. இரண்டு நேர உணவோடு மதுபானம். அதை விட விமான நிலையத்தில் இருந்து விடுதி வரை இலவச தொடருந்துப் பயணம்.

 

ஒரு காலத்தில் சமாதானப் பேச்சுவார்த்தை என்று பாங்கொக் (Bangkok) தொடக்கம் ஜெனீவா (Geneva) வரை அழைத்து பல சுற்றுப் பேச்சுக்களை நடத்திக் கடைசியில் அனைத்துலக சதிவலைப் பொறிக்கிடங்கிற்குள் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தள்ளி அழித்த மேற்குலகம் இப்பொழுது தங்களைத் தமிழர்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டது மாநாட்டிற்கு வந்திருந்த ஒரு சிலருக்கு பெருமிதமாக இருந்தது. இந்த ஒரு காரணத்திற்காகவே மூன்று நாள் அமர்விலும் சுவிற்சர்லாந்து அரசின் இராசதந்திரிகள் கூறிய அறிவுரைகளுக்கு எல்லாம் அவர்கள் தலையாட்டிய வண்ணமிருந்தார்கள்.

 

அப்படித் தான் அந்த மாநாட்டிற்கு வந்திருந்த எல்லாப் பிரதிநிதிகளும் தலையாட்டிப் பொம்மைகள் போன்று நடந்து கொள்வார்கள் என்று சுவிற்சர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சு கருதியதோ தெரியவில்லை. ஆனால் முதல் நாள் அமர்விலேயே அது பொய்த்துப் போனது.

                                                                               

**************

 

17.10.2019 பிற்பகல் சூரிச் செல்வதற்காக இலண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் நான் விமானம் ஏறிய பொழுது இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தேன். எனக்குப் பக்கவாட்டாக இருந்த இரண்டு ஆசனங்களில் எனக்கு நன்கு பரீட்சயமான இரண்டு தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் அமர்ந்திருந்தார்கள்.

 

ஒருவர் மருத்துவர். மற்றையவர் சட்டத்தரணி. இருவரும் என்னை விட இளம் வயதினர். கணவன் - மனைவி. இருவரும் முறையே பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகளில் பிறந்தவர்கள். இருபது ஆண்டுகள் நடைமுறை அரசாக இயங்கிய தமிழீழம் எப்படியிருந்தது என்பதைத் தமது பெற்றோர் மூலம் மட்டுமே அறிந்து கொண்டவர்கள்.

 

ஆனாலும் வன்னிப் போர் முடிவுக்கு வந்த பின்னர் தமிழீழ தாயகம் சென்று வந்தவர்கள் என்ற வகையில் அங்குள்ள மக்களின் வலிகளை நன்கு புரிந்து கொண்டவர்களாகவே அவர்கள் இருந்தார்கள்.

 

தமிழீழ மக்களுக்கு இழைக்கப்பட்ட இனவழிப்பிற்கு நீதி கிட்ட வேண்டும் என்ற தணியாத தாகம் அவர்கள் இருவரின் கண்களிலும் தெறித்துக் கொண்டிருந்தது.

 

சுவிற்சர்லாந்து அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள மாநாட்டில் எங்கள் மூன்று பேரையும் தவிர வேறு தமிழர்கள் யார் கலந்து கொள்கின்றார்கள் என்பதை அறியும் முகமாக அந்த இளம் மருத்துவரிடம் பேச்சுக் கொடுத்தேன்: ‘வேறை யார் மாநாட்டிற்கு வருகீனம் எண்டு தெரியுமோ?’

 

‘இல்லை அண்ணை. அமெரிக்காவில் பேர்ள் (Pearl) அமைப்பிற்கு வேலை செய்கிற எங்கடை நண்பர் ஒருவர் ஏற்கனவே சூரிச்சில் நிற்கிறார். அதைவிட இலண்டனில் இருந்து பிரித்தானிய தமிழர் பேரவைக்காரரும் அங்கே நிற்கீனமாம். வேறு யார் யார் நிற்கீனம் என்று தெரியவில்லை.’

 

உண்மையில் சுவிஸ் மாநாட்டில் கலந்து கொள்ளும் தமிழர் பிரதிநிதிகள் யார் என்பது யூ.ரி.ஓ விடுதியை நாம் சென்றடையும் வரை மூடுமந்திரமாகவே இருந்தது. ஏன், எந்த நோக்கத்தோடு இந்த மாநாட்டைச் சுவிஸ் அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது என்பது கூட எவருக்குமே தெளிவாகத் தெரியாது.

 

இதில் வேடிக்கை என்னவென்றால் மாநாட்டில் பங்குபற்றியவர்களில் நான் உட்பட பத்துப் பேர் பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவர் கனடாவில் இருந்து பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்தவர். மற்றையவர் பிரித்தானியாவில் சில நாட்களும், பிரான்சில் சில நாட்களும் வசிப்பவர். இன்னுமொருவர் பிரித்தானியாவில் இருந்து கனடாவிற்குக் குடிபெயர்ந்தவர்.

 

ஆனாலும் சாராம்சத்தில் மூவரும் பிரித்தானியப் பின்னணியைக் கொண்டவர்கள் என்ற வகையில் அவர்களை பிரித்தானியாவில் இருந்து சென்றவர்கள் என்று கருதுவதில் தவறில்லை.

 

சூரிச் விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து சூரிச் மத்திய தொடருந்து நிலையத்தை நாம் சென்றடைந்த பொழுது அங்கு இன்னுமொரு தமிழ்ப் பெண் செயற்பாட்டாளரைச் சந்தித்தோம். அவரும் பிரித்தானியாவில் இருந்து வந்திருந்தவர். மாநாட்டின் நோக்கம் பற்றி அந்தப் பெண்மணியிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்துப் பார்த்தோம். அவருக்கும் மாநாட்டின் நோக்கம் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை.

 

கடைசியில் அவரே கேட்டார்: ‘மூன்று நாள் மாநாட்டில் என்ன நடக்கப் போகின்றது? நீங்கள் எதைப் பற்றி மாநாட்டில் உரையாற்றுகின்றீர்கள்?’

 

அதற்கு என்னோடு வந்திருந்த இளம் மருத்துவர் கூறினார்: ‘எங்கள் யாரையும் உரையாற்றுவதற்காக அவர்கள் அழைக்கவில்லை. அவர்கள் தான் எங்களுக்கு வகுப்பெடுக்கப் போகின்றார்கள் போல் இருக்கின்றது.’

 

அவ்வளவு தான், அந்தப் பெண்ணுக்கு கடும் கோபம் வந்து விட்டது. ஆங்கிலேயர்களும், அமெரிக்கர்களும் தாராளமாகப் பயன்படுத்தும் கெட்ட வார்த்தை ஒன்றைக் குறிப்பிட்டு மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த சுவிற்சர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சின் பிரதிநிதிகளைத் திட்டித் தீர்த்தார். ‘அவர்கள் சொல்வதைக் கேட்பதற்காகத் தான் என்னை அழைத்திருந்தார்கள் என்றால், நான் முதல் நாளே மாநாட்டில் இருந்து எழும்பிப் போய்விடுவேன்’ என்று சீற்றத்துடன் எங்களிடம் தெரிவித்தார்.

 

அப்பொழுது நான் கூறினேன், ‘இலங்கையில் விரைவில் தேர்தல் வருகின்றது. அதனால் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்ற அச்சம் மேற்குலக நாடுகளுக்கு உண்டு. எனவே அந்த ஆட்சி மாற்றத்தைத் தடுப்பதற்காக, அல்லது ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் புதிய அரசாங்கத்திற்கு நெருக்குவாரம் கொடுப்பதற்குத் தமிழர்களைக் கையாளும் நிகழ்ச்சித் திட்டத்தோடு இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது போல் தெரிகிறது.’

 

                                                                                               **************

 

17.10.2019 அன்று இரவு 7:00 மணியளவில் யூ.ரி.ஓ நான்கு நட்சத்திர விடுதியின் விருந்தகத்தை நான் சென்றடைந்த பொழுது, என்னை வெள்ளையர்களுக்கே உரிய பண்போடு சுவிஸ் வெளியுறவுத்துறை அமைச்சின் இராசதந்திரி மார்டின் ஸ்ரேசிங்கர் (Martin Sturzinger) அவர்கள் வரவேற்றார்.

 

2003ஆம் ஆண்டு சுவிற்சர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சில் இணையும் முன்னர் ஒரு ஊடகவியலாளராகப் பணிபுரிந்தவர் அவர். 1983ஆம் ஆண்டு கறுப்பு ஆடி இனவழிப்பு அரங்கேறிக் கொண்டிருந்த பொழுது அதன் சாட்சியாக கண்டியில் நின்றவர். அவருக்குத் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களை நன்கு தெரியும்.

 

1980களில் இருந்தே தேசத்தின் குரலோடு நன்கு பழகிய வெளிநாட்டு ஊடகவியலாளர் என்ற வகையில் அவர் மீது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மதிப்பு இருந்தது.

 

அந்தத் தொடர்பு 1990களின் முற்பகுதியில் அவரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்றது. அதுபற்றி 17.10.
2019 வியாழன் இரவு நடைபெற்ற அறிமுக விருந்துபசாரத்தின் பொழுது என்னிடம் இவ்வாறு அவர் கூறினார்: ‘நான் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பேட்டி கண்டிருக்கிறேன்.’இவ்வாறு அவர் கூறியது எனது எதிர்ப்
புறத்தில் அமர்ந்திருந்த இளம் மருத்துவருக்கு வியப்பாக இருந்தது.

 

ஆச்சரியத்துடன் கேட்டார்: ‘அந்தச் சந்திப்பு எப்படி இருந்தது? அது மிகவும் சுவாரசியமாக இருந்திருக்குமே?’

 

‘ஆம்’ என்ற ஒற்றை வார்த்தையோடு அவரது பதில் நின்றது.

 

ஆனால், என் எதிர்ப்புறத்தில் நின்ற மருத்துவரோ விடவில்லை: ‘அவரோடு என்ன பேசினீர்கள்? உங்களிடம் என்ன விடயங்களை அவர் பேசினார்?’

 

அதற்கு மீண்டும் மார்டின் கூறினார்: ‘நான் அன்றைய அரசியல் சூழல் பற்றி அவரிடம் செவ்வி கண்டேன். நான் ஆங்கிலத்தில் கூறியவற்றைப் பிரபாகரனிடம் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் மொழிபெயர்த்துக் கூறினார். மற்றும்படி பிரபாகரனிடம் நேரடியாக நான் எதையும் உரையாடவில்லை.’

 

பின்னர் வெவ்வேறு அரசியல் விடயங்களைப் பேசிக் கொண்டிருந்த பொழுது சிங்கள இனவாதம் பற்றிய பேச்சு எழுந்தது. அப்பொழுது மீண்டும் மார்டின் கூறினார்: ‘சிங்கள இனவாத மனநிலையை மகாம்வம்ச மனோநிலை என்று பிரபாகரன் குறிப்பிட்டிருக்கிறார். அவரது 2008ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் இந்தச் சொற்பதத்தை கையாண்டிருந்தார்.’  


உடனே நான் கூறினேன்: ‘இல்லை இது அவரது 2005ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் பயன்படுத்தப்பட்ட சொற்பதம். 2008ஆம் ஆண்டு அல்ல.’

 

இவ்வாறு நாம் உரையாடிக் கொண்டிருந்த பொழுது, உலக இராசதந்திரிகளை மடக்குவதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் கையாளும் யுக்திகள் பற்றிய பேச்சு எழுந்தது. உடனே அவ்விடத்தில் பிரித்தானியாவில் இருந்து வந்திருந்த இன்னொருவர் குறுக்கிட்டு இந்திரா காந்தி அம்மையாரின் மரணத்திற்குப் பின்னர் ராஜீவ் காந்தியின் ஆட்சியில் கொழும்பு சென்ற இந்திய இராசதந்திரியான ரொமேஸ் பண்டாரியின் மனைவிக்கு தங்க ஆபரணம் ஒன்றை பரிசாகக் கொடுத்து, அதைப் பயன்படுத்தி பண்டாரியைத் தனது பக்கம் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா வளைத்தது பற்றியும், அதன் விளைவாக ஈழத்தமிழர்கள் விடயத்தில் இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டதையும் விளக்கினார்.

 

இவ்வாறு அவர் கூறியது எனக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை. அது எல்லோரும் அறிந்த கதை தான். ஆனாலும் அந்தக் கதையைக் குறித்த நபர் மார்டினிடம் தெரிவித்தது தான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

 

அவர் நீண்ட காலமாக பிரித்தானியாவில் வசிப்பவர். ரெலோ இயக்கத்தின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவரும் கூட. திம்புப் பேச்சுவார்த்தைகளில் ரெலோ இயக்கத்தின் சார்பில் பங்குபற்றியவர். பின்னர் ரெலோ இயக்கத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்த பொழுது, தன்னை ஒரு தீவிர புலியாக அடையாளம் காட்டிக் கொண்டார்.

 

யுத்தத்தின் இறுதி மாதங்களில் கே.பியுடன் இணைந்து பணியாற்றினார்.

 

கைது நாடகத்தை அரங்கேற்றி 2009ஆம் ஆண்டு ஆவணி மாதம் 5ஆம் நாள் கே.பி கொழும்பு சென்ற பின்னர், அவரது முகவராக புலம்பெயர் தேசங்களில் செயற்படத் தொடங்கினார். பின் 2010ஆம் ஆண்டு கொழும்பு சென்று கே.பி, கோத்தபாய ராஜபக்ச, கபில கெந்தவிதாரண ஆகியோரைச் சந்தித்து பின்னர் அவர்களுக்காகப் பிரச்சாரங்களை மேற்கொண்டவர் அவர்.

 

அவரா இப்படிப் பேசுகின்றார் என்று நான் வியந்து கொண்டேன்.

 

அப்பொழுது தான் குறித்த நபர் பற்றிப் பிரித்தானியாவில் வசிக்கும் மூத்த பெண் ஊடகவியலாளர் என்னிடம் கூறிய வாசகம் நினைவில் வந்தது. குறித்த நபரைப் பற்றி ஒரு தடவை அந்தப் பெண் ஊடகவியலாளரிடம் நான் உரையாடிய பொழுது அவர் கூறினார்: ‘இவன் ஒரு அரசியல் விபச்சாரி. எந்த நேரத்தில் எங்கே நிற்பான் என்று தெரியாது. ஒரு நேரம் இஞ்சாலை நிற்பான். பிறகு அங்காலை நிற்பான். அந்தளவு மோசமானவன்.’

 

இரண்டு நாட்கள் கழித்து சனிக்கிழமை இரவு பிரெண்ட்ஸ் கோர்னர் என்ற தமிழ் விடுதிக்கு நாங்கள் சென்று கொண்டிருந்த பொழுது குறித்த நபர் பற்றிய பேச்சு எழுந்த பொழுது என்னோடு வந்திருந்த மூத்த தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவர் கூறினார்:

 

‘இவன் ஒரு இரட்டை வேடதாரி. இவனுக்கு கே.பியோடு நேரடித் தொடர்பு இருக்கிறது. ஒரு தடவை என்னைத் தேடி வந்து கே.பியோடு கதைக்கிறதுக்கு ரெலிபோன் எடுத்துத் தந்தவன். நான் கதைக்க மாட்டேன் என்று மறுத்து விட்டேன்.’

 

அறிமுக விருந்துபசாரம் நிறைவடையும் தறுவாயில் நான் மார்டினிடம் கேட்டேன்: ‘இந்த மாநாட்டை நீங்கள் ஏற்பாடு செய்ததன் நோக்கம் என்ன?’

 

அதற்கு நேரடியாகப் பதில்கூறுவதைத் தவிர்த்து அவர் சுற்றி வளைத்துப் பேசத் தொடங்கினார்:

 

‘நாங்கள் ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இப்படி ஒரு சந்திப்பை நடத்தியிருக்கிறோம். சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் சென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நான் சந்தித்தேன். அதன் பின்னர் அங்குள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடினேன். புலம்பெயர் தமிழ்ப் பிரதிநிதிகளுடனும் அப்படி ஒரு சந்திப்பை நடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்பியிருந்தோம். ஆனால் அது உடனடியாகக் கைகூடவில்லை.

 

இதே போன்ற ஒரு சந்திப்பை ஏற்கனவே மியன்மாரின் புலம்பெயர் சமூகத்துடன் நாங்கள் நடத்தியிருக்கிறோம். அது தான் இப்பொழுது உங்களோடு இந்தச் சந்திப்பை நடத்துகின்றோம். உண்மையில் தேர்தலுக்கு முன்னர் இந்தச் சந்திப்பை நடத்தினால் இதை எதிர்மறையான நடவடிக்கையாக சிறீலங்கா அரசாங்கம் பார்க்கும் என்று என்னிடம் பிரித்தானிய தமிழர் பேரவையைச் சேர்ந்த ரவி கூறினார்.

 

ஆனாலும் இனியும் காலம் தாழ்த்தக் கூடாது என்பதற்காக நாங்கள் இந்த மாநாட்டை நடத்துகின்றோம். எங்களின் பார்வையில் புலம்பெயர் தமிழர்கள் சரியான முறையில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை போல் உள்ளது. எனவே அது பற்றிய ஒரு தெளிவுபடுத்தலை வழங்குவது தான் எங்களின் நோக்கம். நாளைய அமர்வில் நாம் நியமித்திருக்கும் நிபுணர்கள் உங்களுடன் உரையாடும் பொழுது மாநாட்டைப் பற்றி முழுமையாக நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.'

 

அவர் கூறியது பொய்க்கவில்லை. அடுத்த நாளும், அதற்கு அடுத்த நாளும் மாநாட்டிலும், உணவருந்தும் வேளை
யில் நடந்த ஒவ்வொரு உரையாடல்களும் காரசாரமாக - அனல்பறக்கும் வகையில் அமைந்தன.

 

                                                                                 **************

 

சனிக்கிழமை நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்தது. பிரெண்ட்ஸ் கோர்னர் தமிழ் உணவு விடுதியிலிருந்து மீண்டும் யூ.ரி.ஓ நான்கு நட்சத்திர விடுதி நோக்கிப் புறப்படும் வழியில் அந்த இளைஞரிடம் நான் கேட்டேன்: ‘மார்டினுக்கு உங்களுக்கும் என்ன பிரச்சினை நடந்தது? திடீரென்று எதற்காக நாங்கள் சிறீலங்கன்கள் இல்லை என்று சத்தமாக கத்தினியள்?’

 

‘இல்லை அண்ணை, அவர் திரும்பத் திரும்ப எங்களை சிறீலங்கன்ஸ் என்ற வரையறைக்குள் முடக்க முயற்சி செய்கின்றார். நாங்கள் எல்லோரும் சிறீலங்கன்கள் என்கிறார். யாரோ ஒரு சிங்கள ஓவியரின் பெயரைக் குறிப்பிட்டு எனக்கு அந்த ஓவியரைத் தெரியுமா? என்று கேட்டார். நான் தெரியாது என்று சொன்ன பொழுது, "அதெப்படித் தெரியாமல் இருக்கும்? நீங்கள் ஒரு சிறீலங்கன், அவரும் ஒரு சிறீலங்கன்" என்றார். அது தான் எனக்குக் கோபம் வந்து விட்டது. நாங்கள் சிறீலங்கன்கள் இல்லை. நாங்கள் தமிழர்கள் என்பதை அவருக்கு உறைக்கும் படி சொன்னேன்.’


உடனே நான் கூறினேன்: ‘இதே விவாதம் தான் இன்று மதியம் எனக்கும் மார்டின் அவர்களுக்கும் இடையில் நடந்தது. என்னைப் பார்த்து நீங்கள் ஒரு சிறீலங்கன் என்று அவர் கூறினார். எனக்குக் கோபம் வந்து விட்டது. ஆனாலும் கோபத்தை ஒருவாறு அடக்கிக் கொண்டு அவரிடம் கூறினேன், நாங்கள் சிறீலங்கன்கள் அல்ல. அவ்வாறு நாம் ஏற்றுக் கொண்டால் நாமே எம்மைப் பெளத்த சிங்களவர்கள் என்று கூறுவதாக முடியும். ஏன் என்றால் பெளத்த மதம் தளைத்தோங்குவதற்காக லங்கா என்ற தீவைச் சிங்களவர்களிடம் புத்த பெருமான் கையளித்தார் என்று மகாவம்சம் புனைந்து விட்ட கதைக்கு செயல்வடிவம் கொடுக்கும் நோக்கத்துடனேயே புனித லங்கா என்று பொருள்படும் வகையில் சிறீலங்கா என்ற பெயரை 1972ஆம் ஆண்டில் சிறீமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் சூட்டினார்.’

 

அதற்கு அந்த இளைஞர் சலித்துக் கொண்டே கூறினார்: ‘ஓம் அண்ணை, இவங்களுக்குத் திரும்பத் திரும்ப நாங்கள் சொன்னாலும், திரும்பத் திரும்ப எங்களை சிறீலங்கன் என்ற அடையாளத்திற்குள் முடக்குவதில் தான் குறியாக இருக்கிறாங்கள். எனக்கு சரியான கோபம் வருகுது அண்ணை.'

 

(தொடரும்)

 

 

பிற்குறிப்பு:-
சுவிற்சர்லாந்து அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பங்கேற்ற ஒரு சில தமிழ்ப் பிரதிநிதிகள், மாநாட்டில் தாம் பேசிய விடயங்களைத் தமது பெயர்களைக் குறிப்பிட்டு ஊடகங்களில் பதிவு செய்ய வேண்டாம் என்றும், விரும்பினால் தாங்கள் கூறிய கருத்துக்களைத் தமது பெயர்களைக் குறிப்பிடாமல் பதிவு செய்யுமாறும் கேட்டிருந்தார்கள். இதை மாநாட்டிற்கு வந்திருந்த பெரும்பாலான பிரதிநிதிகள் ஏற்றுக் கொண்டார்கள். அதற்கு மதிப்பளித்து மாநாட்டில் பங்குபற்றியவர்கள் கூறிய கருத்துக்களை அவர்களின் பெயர்களைத் தவிர்த்து வெளியிடுகின்றோம்.

 

நன்றி: ஈழமுரசு